1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (18:03 IST)

தென் ஆப்பிரிக்கா அதிரடி வெற்றி; 257 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை பந்தாடியது

இன்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 19ஆவது லீக் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் மற்றும் ஆம்லா தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே  குயின்டன் டி காக் 12 ரன்னில் வெளியேறினார். பின்னர் தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 
நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஆம்லா அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் டூ பிளஸ்ஸும், ஆம்லாவிற்கு ஆதரவாக அரைசதத்தை கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட டுபிளசி 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
பின்னர் ஆம்லாவும் 65 ரன்னில் வெளியேறினார். மேற்கண்ட இவ்விரு வீரர்களையும் ஒரே ஓவரில் கிறிஸ் கெய்ல் அவுட்டாகினார். பின் வந்த ரோசாவ் 61 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து விளையாடிய டிவிலியர்ஸ் அதிரடியாக செயல்பட்டு 52 பந்துகளில் சதத்தை எட்டினார்.
மேலும் அடுத்தப் பக்கம்...

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட டிவிலியர்ஸ் 66 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் 409 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 3 ரன்களில் வெளியேறினார்.

 
பின்னர் களமிறங்கிய மார்லன் சாமுவேல்ஸ் டக் அவுட் ஆகி நடையை கட்டினார். பிறகு கார்டர் 10 ரன்களிலும், தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் 31 ரன்களிலும் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய சிம்மன்னஸ், ரஸ்ஸல் ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
 
சிறிது தாக்குப் பிடித்த சமியும் 11 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 63 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. நூறு ரன்களைக்கூட தாண்டாதோ என அனைவரும் எதிர்பார்ந்திருந்த நிலையில், ஹோல்டர் அதிரடி ஆட்டத்தை கையாண்டார்.
 
அவரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களை தாண்டியது. பிறகு அவரும் 48 பந்துகளில் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். டெய்லர் 15 ரன்கள், பென் 1 ரன்களிலும் நடையை கட்டினர்.
 
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33.1 ஓவர்களில் 151 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.