இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கோம்! – முகமது ரிஸ்வான் நம்பிக்கை!
நேற்றைய போட்டியில் ஹாங்காங்கை தோற்கடித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆசியக்கோப்பை டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்றைய லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஹாங்காங் அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்தது.
பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்து நடக்கும் சூப்பர் 4 ரவுண்டுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் “ஷார்ஜா மைதானத்தில் பவர் ப்ளே ஆட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதே கடினம். அதனால் முதலில் ஆட்டத்தின் நிலையை மதிப்பீடு செய்து அதற்கேற்றார்போல் விளையாடினோம்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போதும் அனைத்து வீரர்களுக்கும் அழுத்தம் நிறைந்த விளையாட்டாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மோதலை காண காத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. எந்த எதிரியையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என பேசியுள்ளார்.