சனி, 14 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (10:04 IST)

கோலியை நான் கேப்டன் பதவியில் இருந்து போக சொன்னேனா?… மீண்டும் ஒருமுறை விளக்கமளித்த கங்குலி!

கடந்த 2021 ஆம்  ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொடரில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்தார். இதனால் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன. அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக மூன்று வடிவ போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில் அதுகுறித்து பேசியுள்ள கங்குலி “நான் ரோஹித்தைக் கேப்டன் ஆக்கிய போது அது குறித்து எல்லோரும் என்னை விமர்சித்தார்கள். இப்போது கேப்டனாக ரோஹித் உலகக் கோப்பையை வென்றதும் விமர்சனங்கள் நின்றுவிட்டன. அதுமட்டுமில்லை, ரோஹித்தை நான்தான் கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர்” எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த பேச்சையடுத்து ரசிகர்கள், ரோஹித் ஷர்மாவை நீங்கள்தான் கேப்டன் ஆக்கினீர்கள் என்றால் கோலியை கேப்டன் பதவியில் இருந்த விலக வைத்ததும் நீங்கள்தானா என்ற கேள்வியை கோலி ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள கங்குலி “நான் இதுபற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். கோலி, டி 20 போட்டிகளில் கேப்டனாக இருக்க விரும்பவில்லை. அப்படியென்றால் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீங்கள் விலகிவிடுங்கள் என்றேன். இதன் மூலம் சிவப்புப் பந்து கிரிக்கெட்டுக்கு ஒரு கேப்டன் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு ஒரு கேப்டன் என்ற முடிவை நான் எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.