20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி தற்போது நடந்து வர்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய நிதீஷ்குமார் எட்டாவது வீரராக இறங்கி 41 ரன்கள் சேர்த்து இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்ட காரணமாக இருந்தார்.
இதையடுத்து ஆடிய ஆஸி அணியும் இந்திய பவுலர்களிடம் சரணடைந்தது. இந்திய அணிக் கேப்டன் பும்ரா மிகச்சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியா டாப் ஆர்டரை சிதைத்தார். இந்நிலையில் இரண்டாம் நாளில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
இதையடுத்து இந்தியா தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்துள்ளனர். பெர்த் மைதானத்தில் கடந்த 20 ஆண்டுகளில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் அடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.