இங்கிலாந்தை தெறிக்க விட்ட இந்தியா: அசர வைக்கும் சாதனைகள்!

இங்கிலாந்தை தெறிக்க விட்ட இந்தியா: அசர வைக்கும் சாதனைகள்!


Caston| Last Modified புதன், 21 டிசம்பர் 2016 (12:08 IST)
இந்தியா சுற்றுப்பயணம் வந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டியை மட்டும் டிரா செய்த இங்கிலாந்து அணி மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவிடம் மண்ணை கவ்வியது.

 
 
இந்த டெஸ்ட் தொடர் கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த தொடராக அமைந்துள்ளது. இதில் இந்திய அணி படைத்த சில சாதனை துளிகள் பின்வருமாறு.
 
* அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தனித்தனியாக 200 ரன்களுக்கு மேல் ரன் குவித்து 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். அஸ்வின் 306 ரன்களும் 28 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஜடேஜா 224 ரன்களும் 26 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்திய அணியில் இவ்வாறு நிகழ்வது இதுவே முதல் முறையாகும்.
 
* ஒரு டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்ற நிகழ்வு இந்திய அணி வரலாற்றில் இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் 2012-2013 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 4 போட்டிகளை வென்றுள்ளது இந்திய அணி.
 
* இந்திய அணி கோலி தலைமையில் தொடர்ந்து 18 போட்டிகளில் தோலிவியை சந்திக்காமல் வெற்றிநடை போட்டுவருகிறது. இதில் 14 வெற்றிகளும் 4 டிராக்களும் அடங்கும். இதற்கு முன்னர் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 17 போட்டிகளில் தோல்வியடையாமல் வந்ததே சாதனையாக இருந்து வந்தது. அந்த அணி 17 போட்டிகளில் 4 வெற்றியை தான் பெற்றிருந்தது.
 
* ஆஷஸ் தொடரைத் தவிர்த்து இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என இழந்துள்ளது.
 
* தொடர்ந்து 5 டெஸ்ட் தொடரை வென்றுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. இதுவரை எந்த இந்திய கேப்டனும் 5 டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக வென்றதில்லை.
 
* சென்னையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 10 விக்கெட்டுகள், ஒரு அரைசதம், 4 கேட்ச் பிடித்துள்ளார். இவ்வாறு நிகழ்வது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியில் இங்கிலாந்தின் 9 வீரர்கள் ஆட்டமிழந்ததில் ஜடேஜாவின் பங்களிப்பு உள்ளது.
 
* இந்த ஆண்டில் இந்திய அணி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதுவே இந்தியாவின் ஒரு ஆண்டில் குவித்த அதிகபட்ச வெற்றியாகும்.
 
* சென்னை டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 759 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதுவே இந்திய அணியின் ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.
 
* சென்னை டெஸ்டில் இந்திய வீரர் கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 303 ரன் குவித்தார். முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றுள்ளார்.
 
* அறிமுக டெஸ்ட் தொடரிலேயே முச்சதம் அடித்த முதல் வீரரும் முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய முதல் வீரரும் இந்தியாவின் கருண் நாயர் தான் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :