தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராகப வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். ஆனால் அவரின் கடைசி ஆண்டுகளில் அவருக்கு அணியில் சரியான இடம் கிடைக்கவில்லை. அதனால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடி வந்தார். அதன் பின்னர் அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்து தற்போது கிரிக்கெட் விமர்சகராகவும், வர்ணனையாளராகவும் பங்காற்றி வருகிறார்.
இந்திய அணியில் இருந்து ஹர்பஜன் சிங் ஓரம் கட்டப்பட்டது 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான். அதனால் அவரின் நிரந்தர இடம் காலியானது. அவ்வப்போது அணிக்குள் வருவதும் பின்னர் நீக்கப்படுவதுமாக இருந்தார். இது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியது. இதுபற்றி முன்பொரு முறை பேசியு ஹர்பஜன் சிங் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? என்னை ஏன் அணியில் எடுக்கவில்லை? என கேப்டன் தோனியிடம் கேட்டேன். ஆனால் அவரிடம் இருந்து பதில் இல்லை. பதில் சொல்ல விரும்பாத ஒருவரிடம் நான் என்ன கேள்வி கேட்டாலும் பதில் வராது என்று நினைத்தேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது ஹர்பஜன் சிங் தான் தோனியிடம் பேசியே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனக் கூறியுள்ளார். இது குறித்து “ஐபிஎல் தொடரில் விளையாடும் போது களத்தில் வியூகம் வகுப்பது பற்றி மட்டுமே நாங்கள் பேசுவோம். களத்துக்கு வெளியே நாங்கள் பேசிக் கொள்வதில்லை” எனக் கூறியுள்ளார்.