திங்கள், 11 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (13:00 IST)

லக்னோ அணியில் கம்பீருக்கு பதிலாக ‘சின்ன தல’ ரெய்னா? – ரசிகர்கள் மகிழ்ச்சி!

Dhoni Raina
ஐபிஎல் போட்டிகளில் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் வெளியேறிய நிலையில் அந்த பதவியில் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று. தற்போது 10 அணிகள் மோதிக் கொள்ளும் இந்த போட்டிகளுக்கான 2024ம் ஆண்டிற்கான ஏலம் நடைபெற்று முடிந்தது.

இந்த ஐபிஎல் அணியில் 2 ஆண்டுகள் முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற எம்.பியுமான கௌதம் கம்பீர். தற்போது அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக மாறியுள்ளார்.

இந்நிலையில் லக்னோ அணிக்கு ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. ஐபிஎல்லில் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியுடன் தோளோடு தோள் நின்று வெற்றிகளை அளித்தவர் சுரேஷ் ரெய்னா. தோனியை ‘தல’ என அழைப்பது போல, ரெய்னாவை ‘சின்ன தல’ என்றே சிஎஸ்கே ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் துபாயில் ஐபிஎல் நடைபெற்ற போது சிஎஸ்கே நிர்வாகம், ரெய்னா இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டால் அவரது அனுபவமும், செயல்திறனும் லக்னோ அணி வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K