தமிழக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை

Caston| Last Updated: வியாழன், 15 அக்டோபர் 2015 (12:41 IST)
முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளை குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712 ஏப்ரல் 23ஆம் நாள் நாயர் குல இந்துக் குடும்பத்தில் பிறந்து, கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவி மறைச்சாட்சியாக உயிர் துறந்தார்.

இவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. கத்தோலிக்க சபையில் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்கு "கடவுளின் கருணை" என்னும் பொருள்படும் "லாசர்" என்னும் பெயர் வழங்கப்பட்டது. அதன் தமிழாக்கம் தான் "தேவசகாயம்".
கிறிஸ்துவுக்காகத் தனது உயிரையும் கொடுக்க தயாராக இருந்த தேவசகாயம் தம் கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவருக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டு கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரைக் கேவலப்படுத்தும் விதமாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் நேரிடும் என்பதற்கு பாடமாக அவரை ஊர் ஊராக அழைத்துச் சென்றார்கள்.

1752ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் அன்றைய திருவாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி சுட்டுக் கொல்லப்பட்டார். தேவசகாயம் பிள்ளை இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் எனவும், ஆரல் குருசடி எனவும் அழைக்கப்படுகிறது.

அவர் இறந்த இடத்திற்குச் சென்று மக்கள் இறைவேண்டல் நடத்தத் தொடங்கினார்கள். இவ்வாறு, அதிகாரப்பூர்வமாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்கள் பார்வையிலும் செயல்பாட்டிலும் அவர் மறைசாட்சியாகவே கருதப்பட்டார்.

அவரைக் கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக மறைசாட்சி என்றும் "முத்திப்பேறு பெற்றவர்" என 2012, டிசம்பர் 2ஆம் நாள் அறிவித்தது.


இதில் மேலும் படிக்கவும் :