தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்திற்கு தடை? விளக்கம் கொடுத்த காங்கிரஸ் !
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்" படத்திற்கு மத்திய பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தை பற்றி வெளியான புத்தகத்தை மையமாக கொண்டு தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற படம் உருவாகி உள்ளது. புதுமுக இயக்குநர் விஜய் ரத்னாகர் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இந்தி நடிகர் அனுபம் கெர் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ளார். நடை, உடை, பாவனைகளில் மன்மோகன் சிங்காகவே மிக மெனக்கெட்டு நடித்து அசத்தியுள்ளார். சஞ்சய் பாரு வேடத்தில் நடிகர் அக்சய் கன்னா படம் முழுக்க வருகிறார். சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சூசன் பெர்னர்ட், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூர், பிரியங்காவாக ஆகானா நடித்துள்ளனர்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் திருப்பங்கள், நிகழ்வுகள் பலவும் இத்திரைப்படத்தில் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 11ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. பிரதமர் தேர்தல் நெருங்கும் வேளையில் படம் வெளியாவதால் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்'.
இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு மத்திய பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.