புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:16 IST)

'அல்-கய்தாவின் முக்கிய தலைவரை கொலை செய்துவிட்டோம்' - டிரம்ப்

அரேபிய தீபகற்ப பிராந்தியத்தின் அல்-கய்தாவின் தலைவரை கொன்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
2015ஆம் ஆண்டு முதல் அல்-கய்தா ஜிகாதிகள் இயக்கத்துக்கு தலைமையேற்று செயல்பட்டு வந்த காசிம் அல்-ரெய்மியை அமெரிக்க படைகள் யேமனில் நடத்திய தாக்குதலில் கொன்றுவிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
 
மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு எதிரான 2000வது ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இவர் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளார்.
 
சௌதி அரேபியா மற்றும் யேமனை களமாக கொண்டு கடந்த 2009ஆம் ஆண்டு அல்-கய்தாவின் ஏகியூஏபி என்னும் பிரிவு தொடங்கப்பட்டது. அரேபிய பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான படைகள் உள்பட அனைத்து மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டு இது இயங்கி வந்தது.
 
அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் காசிம் அல்-ரெய்மி கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த மாதத்தின் இறுதியில் தகவல்கள் பரவி வந்தன.
 
இதனை மறுக்கும் வகையில், அல்-ரெய்மியின் ஒலிப்பதிவு ஒன்றை கடந்த இரண்டாம் தேதி ஏகியூஏபி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவரை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.