வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (14:32 IST)

“கோழிக் கால் சாப்பிடுங்கள்” என மக்களிடம் இந்த அரசாங்கம் ஏன் சொல்கிறது?

BBC
"கடவுளே, எங்களை கோழிக்கால் சாப்பிடும் நிலைக்கு தள்ளி விடாதே" என்று கீஸா சந்தையில் கோழிக் கடைக்காரரிடம் ஒரு நபர் கெஞ்சுகிறார்.

எகிப்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்குள்ள மக்கள் தமது குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கக்கூட கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்கால்களில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் அவற்றை சமைத்து உண்ண வேண்டும் என சமீபத்தில் அந்நாட்டு அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கியது.

இந்த ஆலோசனையால் அந்நாட்டு மக்களிடம் இருந்து அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

உச்சம் தொடும் பணவீக்கம்`

மார்ச் மாதம் 30% அதிகமாக பணவீக்க உயர்வால் பல நாடுகள் தத்தளித்து வருகின்றன. அப்படி பணவீக்கம் அதிகரிப்பதால் தத்தளிக்கும் நாடுகளில் நாடுகளில் எகிப்தும் ஒன்று.

பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளான சமையல் எண்ணெய், சீஸ் ஆகியவை விலையேற்றத்தால் ஆடம்பர பொருட்களாகி விட்டன. சில பொருட்களின் விலை குறுகிய நாட்களுக்குள் இரண்டு மடங்காக, மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

“மாதம் ஒரு முறை நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன், சில சமயம் அதுவும் வாங்க மாட்டேன். ஆனால் நான் வாரத்திற்கு ஒரு முறையாவது சிக்கன் சாப்பிடுவேன், ”என்று மூன்று குழந்தைகளின் தாயான வேதாத் கூறினார்.

ஆனால், சமீபகாலமாக முட்டையின் விலை அதிகமாகி ஒரு முட்டை 0.16 டாலருக்கு (இந்திய மதிப்பில் 13 ரூபாய்) விற்பனையாகிறது என்று அவர் கூறினார்.

எகிப்து நாடு உணவு தேவையில் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளதால் இந்த விலையேற்றம் நடக்கிறது.

1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள எகிப்து, உள்நாட்டில் வளரும் உணவை விட அண்டை நாடுகளில் இருந்து உணவை அதிகமாக இறக்குமதி செய்கிறது.

தங்கள் நாட்டில் உள்ள கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம் உட்பட பல பொருட்கள் பிற நாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது.

கடந்த 12 மாதங்களில் டாலருக்கு நிகரான எகிப்திய பவுண்ட் அதன் மதிப்பில் பாதிக்கும் மேல் இழந்ததுள்ளது.

ஜனவரியில் எகிப்து அரசு அதன் நாணய மதிப்பை மீண்டும் ஒருமுறை மதிப்பிழக்கச் செய்ததால், தானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களின் ​​இறக்குமதி செலவுகள் கடுமையாக உயர்ந்தன.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு

கடந்த ஆண்டு வரை, வேதாத் தனது மாத ஓய்வூதியமான 5,000 எகிப்திய பவுண்டுகள் (சுமார் 13,000 ரூபாய்) மூலம் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

அவர் தான் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண் என்று தன்னை குறிப்பிடுகிறார். இருப்பினும், மற்ற எகிப்தியர்களைப் போலவே, அவரும் தற்போது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்படுகிறார்.

“ஒரு கிலோ கோழிக் கறியின் விலை 160 எகிப்திய பவுண்டுகள் (சுமார் 420 ரூபாய்) என்று விற்பனையாளர் ஒருவர் கூறினார். சிலர் 175, 190, 200 எகிப்திய பவுண்டுகள் வரை கேட்கிறார்கள்,“ என்கிறார் வேதாத்.

“கோழியின் லெக்பீஸ் 90 எகிப்திய பவுண்டுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோழி எலும்புகளும் விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் கால்களின் விலை எவ்வளவு தெரியுமா? ஒரு கால் 20 எகிப்திய பவுண்டுகள்தான்“ என்று கிண்டலாக சிரித்தார்.

ரஷ்யா - யுக்ரேன் போருக்கும் விலை உயர்வுக்கு என்ன தொடர்பு?

எகிப்தில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சி, வேகமாக அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக அந்நாடு தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி தெரிவித்துள்ளார். இந்த நிலைமைக்கு யுக்ரேனில் நடக்கும் போரும், கொரோனா தொற்றும் ஒரு காரணம் என்று அவர் சுட்டுக்காட்டினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு எகிப்தின் பொருளாதார நிலை மிகவும் ஆபத்தானது.

உலகிலேயே அதிக கோதுமை இறக்குமதி செய்யும் நாடுகளில் எகிப்து இரண்டாவது இடத்தில் உள்ளது. போரில் மோதிக் கொண்டிருக்கும் ரஷ்யாவும், யுக்ரேனும் தான் எகிப்து நாட்டுக்கு கோதுமையை அதிகமாக இறக்குமதி செய்து வந்த நாடுகள்.

போரினால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டபோது, ​​கோதுமையின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனுடன் ரொட்டியின் விலையும் உயர்ந்துள்ளது.
BBC

எகிப்துக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ரஷ்யா மற்றும் யுக்ரேனில் இருந்து வருவார்கள். ஆனால், போரினால் சுற்றுலாத் துறையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீத பங்களிப்பை வழங்கும் சுற்றுலாத் துறை, ஏற்கனவே கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நடந்த போர் காரணமாக, சுற்றுலாத்துறை கடுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளது.

எப்போது நிலைமை மாறும்?

அரசும் எடுத்துள்ள தவறான முடிவுகள் இந்த நிலைமையை மேலும் ஆபத்தானதாக மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தஹ்ரிர் மத்திய கிழக்கு கொள்கை மையத்தின் அரசியல் பொருளாதார நிபுணர் திமோதி கல்தாஸ், "அதிபர் சிசி பதவியேற்ற பிறகு, ராணுவம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரமும் செல்வாக்கும் வெகுவாக அதிகரித்துள்ளன," என்கிறார்.

அரசு சார்ந்த நிறுவனங்களின் விரிவாக்கம் மூலம் இது நடந்ததாக கல்தாஸ் விளக்கினார். உதாரணமாக,பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் அரசால் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

அரசுத் துறை நிறுவனங்களின் ஆதிக்கத்துடன் போட்டி போட முடியாததால், தனியார் துறையின் ஈடுபாடு வெகுவாக குறைந்துள்ளது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எகிப்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

எகிப்து, கடந்த ஆறு ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) நான்கு முறை அவர்களின் நிதிச் சிக்கல்களில் இருந்து விடுவிப்பதற்காக உதவி கோரியுள்ளது. நாடு ஈட்டும் வருவாயில் பாதித் தொகை கடனைத் திருப்பிச் செலுத்தச் செல்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90% கடன் எகிப்து நாட்டுக்கு இருக்கிறது, என்றார் கல்தாஸ்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகள், அரசின் சொத்துக்களை வாங்கி எகிப்துக்கு உதவியது. ஆனால், எகிப்தில் அந்த நாடுகள் மேலும் முதலீடு செய்வதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளன.

மத்திய கிழக்கில் அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் எகிப்து நாடு எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகலாம் என்ற கவலையில் மேற்கு நாடுகளும், வளைகுடா நாடுகளும் உள்ளன.

கடந்த காலங்களில் எகிப்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், முன்னாள் அதிபர்களான ஹோஸ்னி முபாரக், முகமது மோர்சியும் ஆகியோர் பதவி விலக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.

இப்போதும் பொருளாதாரச் சூழலுக்கு எதிராக மக்களின் கோபம் போராட்டங்களாக வெடிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

"நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கச் சென்ற தினத்தை ஒரு கறுப்பு நாளாகக் கருதுகிறோம்," என்று அதிபர் சிசிக்கு எதிராக ஒரு குடும்பத் தலைவி பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

"உங்களுக்கு வாக்களித்தை எண்ணி பெண்களாகிய நாங்கள் எவ்வளவு வருந்துகிறோம் என்பதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. எங்கள் வாழ்க்கையை நீங்கள் நரகமாக்கி விட்டீர்கள்," என்று வீடியோவில் புலம்பினார் அந்தப் பெண்.

தன் கைப்பையை எடுத்து சில்லறை காசை எடுத்து எண்ணி, இதை வைத்து என் குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க முடியும் என்று அவர் கேட்டார்.

இன்னும் சில நாட்களில் ரம்லான் மாதம் தொடங்கவுள்ள நிலையில், பகல் முழுவதும் நோன்பு இருந்தாலும் விலைவாசி உயர்வால் மாலை வேளைகளில் பாரம்பரிய விருந்தை எப்படி அனைவருக்கு வழங்குவது என்று வேதாத் ஏற்கனவே யோசிக்க தொடங்கி விட்டார்.
"இந்த வருடம் நான் என்ன செய்ய போகிறேன்?" என்று தனக்கு தானே பேசிக் கொள்ளும் வேதாத், விரைவில் தங்கள் உணவுத் தட்டில் இருந்து கோழியையும் நீக்க வேண்டிய கட்டாயத்தை விலைவாசி உயர்வு ஏற்படும் என நினைக்கிறார்.
"என்னால் பருப்பு சூப் மட்டுமே வாங்க முடியும்."