1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (13:23 IST)

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை?

srilanka
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளதை, நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

69 லட்சம் மக்களின் வாக்குகளினால் அதிகாரத்தை கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, அந்த பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு, 2 கோடி மக்களும் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினாலேயே தான் ஆட்சி பீடத்திற்கு ஏறியதாக கோட்டாபய ராஜபக்ஷ, அநுராதபுரத்தில் இடம்பெற்ற பதவி ஏற்பு நிகழ்வில் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி தெரிவித்திருந்தார்.

''எமது நாட்டின் நான்கு திசைகளிலும் உள்ள மகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதமே இந்த தேர்தலில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சிங்கள மக்களே இந்த வெற்றியின் முக்கிய காரணமாக அமைவார்கள் என்பதை நாம் முன்னரே அறிந்திருந்தோம்.

சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரமே என்னால் வெற்றி பெற முடியும் என நான் அறிந்திருந்த போதிலும், இந்த வெற்றியின் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கை விடுத்தேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு அதற்கான பெறுபேறு அமையவில்லை" என கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை ஏற்ற தருணத்தில், நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதலாவது உரையிலேயே தெரிவித்திருந்தார்

இந்த உரையானது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இவ்வாறான பின்னணியில், கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த ஆட்சி காலப் பகுதியில், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் கலாசாரங்களை ஒடுக்கும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகள் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள், தமிழ் மற்;றும் முஸ்லிம் மக்களை ஒதுக்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

எனினும், கடும் அழுத்தங்களுக்கு மத்தியில், தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர் இவ்வாறான செயலணிகளுக்குள் உள்வாங்கப்பட்டாலும், அதிலும் பாரபட்சம் காண்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டங்களை, மக்கள் ஆரம்பித்திருந்தார்கள். ஆட்சி பீடத்திற்கு ஏறுவதற்கு காரணமானவர்கள் என, அநுராதபுரத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டிய, சிங்கள பெரும்பான்மை தரப்பினரே, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டிருந்தனர்.

நுகேகொடை - மிரிஹான பகுதியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக வீடு, கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி சுற்றி வளைக்கப்பட்டு, முதல் முறையாக அவருக்கு எதிரான போராட்டங்கள் வலுப் பெற்றிருந்தன.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி,'கோட்டா கோ கம' போராட்டம், கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டது. தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், 100வது நாளை அண்மித்துள்ள தருணத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ, தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

கோட்டா கோ கம போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டாலும், அதற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் தரப்பினர் பெரும் ஆதரவை வழங்கியிருந்தார்கள்.எனினும், தமிழர்கள் அந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை களத்தில் இறங்கி, பெருமளவில் வழங்கவில்லை.

குறிப்பாக கொழும்பில் வாழக்கூடிய தமிழர்கள் மாத்திரமே, இந்த போராட்டத்திற்கு ஆதரவை வழங்கிய போதிலும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழர்கள், காலி முகத்திடல் களத்தில் இறங்கி பெருமளவில் ஆதரவை வழங்கவில்லை.

''எப்போதுமே வேண்டாம் என நாம் கூறிய ஒருவரை, சிங்கள மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். இப்போது வேண்டாம் என்கின்றார்கள். நாம் ஏற்கனவே வேண்டாம் என அவரை நிராகரித்து விட்டோம்" என தமிழர்கள் தொடர்ச்சியாக கூறி வந்திருந்தார்கள்.

இந்த நிலையில், போராட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. சுதந்திர இலங்கையில் புறையோடி கிடக்கும் தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இது சரியான ஒரு தருணம் என பலரும் தற்போது கூறி வருகின்றார்கள்.

காரணம், இந்த காலப் பகுதியில், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட பிரிவினைவாதங்களினால் பிரிந்திருந்த மக்களை ஒன்றிணைத்த ஒரு களமாக காலி முகத்திடல் காணப்படுகின்றது.

முஸ்லிம்களின் கொண்டாட்டங்களை மூவின மக்களும் முதல் முறையாக ஒன்று கூடி கொண்டாடியிருந்தனர். முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு முதல் தடவையாக காலி முகத்திடலில் மூவின மக்களின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்றது. ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரிய போராட்டம் காலி முகத்திடலில் இடம்பெற்றது. யாழ்.நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதுவரை காலமும் தமது கலாசாரங்களை பிரிந்திருந்த நிலையில் கொண்டாடிய மக்கள், இன்று ஒன்றிணைந்து கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு மூவின மக்களும் ஒன்றிணைந்துள்ளமை, தமிழ் பிரச்சினையை தீர்ப்பதற்கு சரியான களமாக அமையும் என்பதே தற்போதைய தமிழர்களின் கருத்தாக காணப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்கள் எவ்வாறு தமது உரிமைகளை வென்றெடுப்பார்கள் என்பது குறித்து பிபிசி தமிழ், தமிழ் தரப்பினருடன் கலந்துரையாடியது.

இதன்படி, தமிழர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வேதனைகளை ஒரேயடியாக மறந்து விட்டு, காலி முகத்திடல் போராட்டத்தில் தமிழர்களினால் கலநதுக்கொள்ள முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''இந்த நாட்டிலே தீர்க்கப்படாமல் இன்னும் இருந்துக்கொண்டிருக்கக்கூடிய தேசிய இனப் பிரச்னையினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் தான். ஏனைய இன பிரிவினரை விடவும், தமிழர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டார்கள். 58ம் வருடம், 77ம் வருடம், 83ம் வருடங்களில் ஏற்பட்ட மோசமான இன கலவரங்களில் இருந்து 2009ல் முடிவுற்ற இறுதி யுத்தத்தில் கூட பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்.

எரியூட்டப்பட்டார்கள். சொத்துக்களை இழந்தார்கள். நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். கலை, கலாசாரம் எல்லாம் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியது. வடக்கு, கிழக்கில் மாத்திரம் ஏறக்குறைய 75,000 விதவை சகோதரிகள் இருக்கின்றார்கள். அதேபோன்று, பெரும் அளவிலான குழந்தைகள் ஆதரவற்று நின்றனர். போராளிகள் அல்லாத அப்பாவி மக்கள், பல்குழல் எரிகணைகளினால் கொல்லப்பட்டார்கள்.

இவை வேதனைகள், காயங்கள். இந்த காயங்களையும், வேதனைகளையும் ஒரேயடியாக மறந்து விட்டு, 'கோட்டா கோ ஹோம்' என்ற கோஷத்துடன் காலி முகத்திடலுக்கு வந்து, தமிழ் மக்களால் கலந்துக்கொள்ள முடியாது" என மனோ கணேஷன் தெரிவித்தார்.

''கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில், கோட்டா கோ ஹோம் போராட்ட இயக்கத்திற்குள்ளே ஒரு இடைவெளியை கண்டோம். அவகாசத்தை கண்டோம். ஒரு சந்தர்ப்பத்தை கண்டோம். இடைவெளி, அவகாசம், சந்தர்ப்பம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணினோம். அதற்கான காய்களை நகர்த்தினோம்.

"சாதாரண மக்கள் கலந்துக்கொள்ளா விட்டாலும் கூட, மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் இதை பயன்படுத்த வேண்டும் என நான் விரும்பியிருந்தேன்."

" கோட்டா கோ ஹோம் போராட்டத்திலுள்ள பல குழுக்கள் என்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்கள். அந்த குழுக்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, நடத்திய மூன்று கலந்துரையாடல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நானும் கலந்துக்கொண்டேன்.

கலந்துக்கொண்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் எமது மக்கள் பிரச்னை தொடர்பில் பேசினேன். இந்த நாடு சிங்கள பௌத்த நாடாக மட்டும் இருக்கக்கூடாது.

சிங்களம், பௌத்தம் மட்டும் வரையறுக்கக்கூடாது. பன்மை தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என சிங்கள மொழியிலேயே நான் உரத்து கூறினேன். இந்த நெருக்கடிக்கு எல்லாம் மூலக் காரணம் பொருளாதார பிரச்னை என்று சொன்னாலும் கூட, மூலக் காரணம் தேசிய இனப் பிரச்னை தான் என கடைசியாக இடம்பெற்ற கூட்டத்தில் சொன்னேன் நான்" என மனோ கணேஷன் கூறினார்.

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'ஆர்ப்பாட்டக்காரர்கள் என்று தொடங்கிய கோட்டா கோ கம சம்பந்தமான ஆர்ப்பாட்டக்காரர்கள், முதலிலே எந்த விதத்தில் தொடங்கினார்களோ தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அவர்கள் செல்லும் போது தமிழ் மக்களின் பிரச்னைகளை அவர்கள் தெரிந்து வைத்க்கொண்டு செல்வதாக அறியகூடியதாக இருந்தது.

உதாரணத்திற்கு மே 18 அன்று அவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருந்தார்கள். அவர்கள் படித்தவர்கள். அதன் காரணத்தினாலோ என்னவோ உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காது, தமிழ் மக்களின் பிரச்னைகளை எப்படியாவது தீர்க்க வேண்டும்.

தீர்த்தால் தான் நாடு முன்னேறும் என்ற அந்த கருத்தை அவர்கள் உள்வாங்கியிருந்தார்கள். ஆகவே இப்போது இந்த ஆர்ப்பாட்டம் கிட்டத்தட்ட கடைசி கட்டத்திற்கு வந்திருக்கும் நிலையிலே, தமிழ் மக்களின் பிரச்னைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்பது தொடர்பில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதனை நாங்கள் எங்களுக்கு சாதகமாக பாவிக்க வேண்டும்.

கருத்து பரிமாற்றலுக்கு அழைத்தால், தேசிய தமிழ் கட்சிகள் அதற்கு முகம் கொடுக்க வேண்டும்" என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.