திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:00 IST)

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் உணர்த்துவதென்ன?

குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது பா.ஜ.க. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இடைத்தேர்தல்களில் பல இடங்களில் பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?
 
நடந்து முடிந்திருக்கும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நிஜமாகவே ஒரு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் 156 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
 
காங்கிரசுக்கு 17 இடங்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஐந்து இடங்களும் கிடைத்திருக்கின்றன. நரேந்திர மோதி முதலமைச்சராக இருந்தபோதுகூட, பா.ஜ.க. 127 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது.
 
இதற்கு முன்பாக, இந்திரா காந்தி இறந்த பிறகு நடந்த 1985ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் மாதவ்சிங் சோலங்கி தலைமையில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி 149 இடங்களைப் பிடித்தது.தற்போதுவரை, குஜராத்தில் ஒரு கட்சி அதிக அளவு இடங்களைக் கைப்பற்றியது அப்போதுதான்.  இதற்குப் பிறகு, 1995ல் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து தற்போது 7வது முறையாக குஜராத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது பா.ஜ.க.
 
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பாஜக 52.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கடந்த முறை 40 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இந்த முறை 27.3 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. பல காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியடைந்துள்ளார்கள்.
 
கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் பா.ஜ.க. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே 2022ஆம் ஆண்டுத் தேர்தலுக்குத் தயாராகத் துவங்கிவிட்டது. இதற்கு முன்பு முதல்வராக இரு்த விஜய் ரூபாணி மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே பூபேந்திர படேல் முதல்வராக்கப்பட்டார்.

இதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பாக போராட்டத்தில் இறங்கிய பட்டிதார் சமூகத்தை சமாதானம் செய்தது. அமைச்சரவையிலும் எல்லா சமூகத்தினரும் இடம்பெறுவது போல பார்த்துக்கொண்டது. பிறகு, கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்பட்டார்.
 
பா.ஜ.க. இவ்வளவு தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் மிகச் சாவதானமாகவே இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. உள்ளூர் பிரச்னைகளை முன்னிறுத்தி, நல்ல வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்தால் போதும் எனக் கருதியது.
 
மேலும் கீழ் மட்டத்தில், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதில் கவனம் செலுத்தியது. ஆனால், கடைசி நேரத்தில் முன்னெடுத்த இந்த முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. அதோடு கடந்த தேர்தலில் 77 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது 56 எம்.எல்.ஏக்களுடன் சுருங்கிப் போயிருந்தது. மீதமுள்ளவர்கள் பா.ஜ.கவுக்குச் சென்றுவிட்டனர்.
 
இமாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை, 1985க்கு ஒரு முறை ஆட்சியைப் பிடித்த கட்சி மறுமுறை வெற்றி பெற்றதில்லை. இப்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களும் பா.ஜ.கவுக்கு 25 இடங்களும் கிடைத்திருக்கின்றன. மூன்று சுயேட்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதில் இருவர் பா.ஜ.கவின் அதிருப்தி வேட்பாளர்கள். ஒருவர் காங்கிரஸின் அதிருப்தி வேட்பாளர். 2012இல் ஆட்சியைப் பிடித்தபோது, 36 இடங்களை வென்ற காங்கிரஸ் இந்த முறை கூடுதலாக 4 இடங்களைப் பிடித்திருக்கிறது.
 
இந்த மாநிலத்திலும் மோதி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டிருந்தாலும், இமாச்சல பிரதேசத்தில் இந்தத் தேர்தலில் பல உள்ளூர் பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தின. வேலைவாய்ப்பின்மை, ஆப்பிள் விவசாயிகள் பிரச்னை போன்றவை இங்கே ஆதிக்கம் செலுத்தின. இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 18 தொகுதிகளில் ஆப்பிள் விவசாயிகளுக்கு செல்வாக்கு இருந்தது.
 
இங்கு விளையும் ஆப்பிள்களை சில பெருநிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்குவது தொடர்பாக விவசாயிகளிடம் குமுறல் இருந்து வந்தது. விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பான போராட்டம் ஒன்றையும் நடத்தினர்.
 
இந்த நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆப்பிள் விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு தோட்டக்கலை வாரியம் ஒன்றை அமைத்து, ஆப்பிளுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அதைவிட குறைந்த விலைக்கு வாங்குவதற்கு எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பது போலத்தான் தெரிகிறது.
 
இமாச்சால பிரதேசத்தைப் பொறுத்தவரை, காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி என்பது குஜராத்தில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த வெற்றியோடு ஒப்பிடத்தக்கதல்ல என்றாலும்கூட, மிகவும் குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டதைப் போல, "இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மனரீதியாக நிச்சயமான ஒரு ஊக்கம்"தான்.
 
ஆனால், இந்திய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் குஜராத்தின் வெற்றியே மிகப் பெரியதாகப் பேசப்படுவதோடு, விவாதிக்கப்பட்டும் வருகிறது. சாதாரணமான ஒரு சூழலில், இது பா.ஜ.கவின் இழப்பாகக் கருதி விவாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வியே தீவிர விவாதத்திற்கு உள்ளானது.
 
"ஒரு மாநிலத்தில் மட்டும் கிடைத்த வெற்றி, எப்படி பிற தோல்விகளுக்கெல்லாம் ஈடாகுமெனப் புரியவில்லை. இன்று நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த தோல்வியைப் பற்றி யாரும் பேசுவதில்லை. எந்த ஊடகமும் விவாதிப்பதில்லை.
 
குறிப்பாக உத்தர பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. தோல்வியடைந்திருக்கிறது. இது பேசுபொருளாகவே இல்லை" எனச் சுட்டிக்காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
 
குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களோடு சேர்ந்து பல மாநிலங்களில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிஹாரின் குர்ஹனி, சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர், ஒடிசாவின் பாதாம்பூர், ராஜஸ்தானின் சர்தார்ஷஹர், உத்தர பிரதேசத்தின் கடௌலி, ராம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் குர்ஹினியிலும் ராம்பூரிலும் மட்டுமே பா.ஜ.கவால் வெற்றிபெற முடிந்தது.
 
உத்தரப்பிரதேசத்தின் மைன்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர், பா.ஜ.க. வேட்பாளரைவிட இரு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
 
"முதலில் மேற்கு வங்கத்தில் தோல்வி, பிறகு டெல்லி மாநகராட்சியில் தோல்வி, இப்போது இமாச்சல பிரதேசம், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில் தோல்வி என பா.ஜ.கவின் தோல்விகள் தொடர்கின்றன. ஆகவே, பா.ஜ.க. ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சியில்லை என்பது தெரிந்துவிட்டது. 2024ஆம் ஆண்டு தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ளலாம் என்பதுதான் இந்தத் தேர்தலில் இருந்து தெரிய வந்திருக்கும் செய்தி," என்கிறார் பன்னீர்செல்வன்.
 
குஜராத்தைப் பொறுத்தவரை, காங்கிரசின் மோசமான பிரசாரம்தான் அக்கட்சியின் படுதோல்விக்குக் காரணமா?
 
அந்தக் கூற்றை மறுக்கிறார் பன்னீர்செல்வன். "காங்கிரசால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியுமெனத் தோன்றவில்லை. பாலம் இடிந்து விழுந்த மோர்பியில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெறுகிறது. அதேபோல, பில்கிஸ் பானு விவகாரம் குறித்து மிக மோசமாகப் பேசிய தலைவர் வெற்றி பெறுகிறார். இந்த நிலையில், அங்கு காங்கிரஸ் செய்யக்கூடியது ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை," என்கிறார் அவர்.
 
ஆனால், குஜராத்தில் கிடைத்த வெற்றியை வைத்து பிற மாநிலங்களை பா.ஜ.க. புரிந்துகொண்டால் அது தவறாகத்தான் முடியும் என்பதுதான் தற்போது இமாச்சல பிரதேசத்தில் கிடைத்திருக்கும் வெற்றி உணர்த்துகிறது என்கிறார்.
 
பன்னீர்செல்வன் சொல்வதும் ஒருவகையில் சரியாகவே அமைந்தது. இமாச்சல பிரதேச தேர்தலில், தேசப் பாதுகாப்பு, இரட்டை எஞ்சின் அரசு, பொது சிவில் சட்டம் போன்றவற்றை முன்னிறுத்தியே பா.ஜ.க. பிரசாரத்தை மேற்கொண்டது. ஒட்டுமொத்தப் பிரசாரமும் பிரதமர் மோதியின் இமேஜை முன்னிறுத்தி நடைபெற்றது. ஆனால், காங்கிரஸ் உள்ளூர் பிரச்னைகளை முன்வைத்து, அவற்றைத் தன் தேர்தல் அறிக்கைகளில் எதிரொலித்தது. அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.
 
ஆனால், குஜராத்தில் காங்கிரசுக்குக் கிடைத்திருக்கும் தோல்வி அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவுதான் என்கிறார் தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். "குஜராத் ஒரு முக்கியமான மாநிலம். அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக வலுவாக இருந்த காங்கிரஸ் இப்போது படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதை அக்கட்சி கவனிக்க வேண்டும்," என்கிறார் என். ராம்.
 
இந்தத் தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த வெற்றியும் கவனிக்கத்தக்கது. பா.ஜ.கவுக்கு இணையாக தீவிரப் பிரசாரத்தை நடத்தியது ஆம் ஆத்மி கட்சி.  "அந்தக் கட்சியின் வெற்றி அஞ்ச வைக்கிறது. அவர்களிடம் எந்த அரசியலும் இல்லை. எந்த உரிமைப் போராட்டமும் இல்லை. இது அபாயகரமானதாகப்படுகிறது." என்கிறார் பன்னீர்செல்வன்.
 
நாடு முழுவதுமுள்ள பா.ஜ.கவினர் குஜராத்தில் கிடைத்த வெற்றியை முன்வைத்தே கொண்டாடி வருகின்றனர். ஆனால், டெல்லியிலும் இமாச்சல பிரதேசத்திலும் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் தோல்வி அபாய மணியை ஒலிக்கச் செய்யக்கூடும்.
 
தேர்தல் வெற்றிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் பா.ஜ.க. உடனடியாக இந்தத் தோல்விகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளால் 2024இல் பா.ஜ.கவுக்கு எதிராக ஒன்றிணைந்து வலுவான சக்தியாக நிற்க முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.