1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (15:09 IST)

பூமியின் கடல்கள் மறைந்து நிலப்பரப்புகள் இணைந்தால் என்னவாகும்?

உலகின் நிலப்பரப்புகள் நிலையானதாகத் தோன்றலாம். ஆனால் உண்மை அப்படியல்ல. கடல்கள் மறையும், நிலங்கள் நகர்ந்து இணையும், பெரிய மாற்றங்கள் நடக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு , டச்சு நாட்டைச் சேர்ந்த வரைபடவியலாளர் ஜெராடஸ் மெர்கேட்டர் உலகின் மிக முக்கியமான வரைபடங்களில் ஒன்றைத் தயாரித்தார்.
 
அது குறிப்பாக துல்லியமானது இல்லை. அதில் ஆஸ்திரேலியா கிடையாது. அமெரிக்கா மட்டும் தோராயமாக வரையப்பட்டிருந்தது. அப்போதிலிருந்து, வரைபடவியலாளர்கள் இந்த கண்டங்களின் அமைப்புடன் இன்னும் துல்லியமான பதிப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். மெர்கேட்டரின் பிழைகளை சரிசெய்தனர்.
 
ஆனால் மெர்கேட்டரின் வரைபடம், அவருடைய 16 ஆம் நூற்றாண்டின் சமகாலத்தவர்களால் உருவாக்கப்பட்ட மற்றவற்றுடன் இணைத்துப் பார்க்கும்போது பூமியின் நிலப்பரப்புகளின் உண்மையான ஒரு மாதிரியை வெளிப்படுத்துகிறது.
 
மெர்கேட்டருக்குத் தெரியாதது என்னவென்றால், கண்டங்கள் இதே வழியில் அனைத்துக் காலத்திலும் இருந்திருக்கவில்லை என்பதுதான். கண்டத் தட்டுக் கோட்பாடு வருவதற்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வாழ்ந்து மறைந்துவிட்டார்.
 
சூப்பர் கண்டம் என்பது என்ன?
ஒரு வரைபடத்தில் ஏழு கண்டங்களின் இருப்பைப் பார்க்கும்போது, ​​​​அவை நிலையானவை என்று கருதிவிடுவது எளிதானது. இதைக் கொண்டுதான், பல நூற்றாண்டுகளாக, மனிதர்கள் தங்கள் நிலம், அண்டை நாட்டினரின் நிலம் போன்றவை எல்லாக் காலத்திலும் நிலையானதாக இருந்திருக்கிறது என்ற எண்ணத்தில் நிலத்துக்காகச் சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
கால்வாய்த் தகராறு முதல், தேசிய எல்லைகள், சமய வழிபாட்டுத் தலங்கள் வரை எல்லாவற்றையும் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
 
ஆனால் பூமியின் பார்வையில் கண்டங்கள் என்பவை ஒரு நீர்நிலையில் மிதக்கும் இலைகள் போன்றவை. எல்லைகளுக்காகவும் நிலத்துக்காகவும் சண்டையிடும் மனிதர்களின் கவலைகள் அதில் ஒரு துளிதான். இப்போதிருக்கும் ஏழு கண்டங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலமாகக் கூடியிருந்தன. இது பாங்கேயா என்று அழைக்கப்படும் பெருங் கண்டம். இதைத்தான் சூப்பர் கண்டம் என்கிறார்கள்.
 
அதற்கும் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கும் முன்பு, பிற சூப்பர் கண்டங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அவை பன்னோடியா, ரோடினியா, கொலம்பியா/நுனா, கெனார்லாண்ட் மற்றும் உர் போன்றவை.
 
சூப்பர் கண்டங்கள் எனப்படும் பெருங் கண்டங்கள் ஒரு காலத்தில் சேர்ந்திருக்கும் பின்னர் சிதறித் தெறித்து ஓடும் என்பதை புவியியலாளர்கள் அறிவார்கள். நாம் இப்போது ஏதோ ஒரு நிலையின் பாதியில் இருக்கிறோம். அதாவது பிரிந்து இருக்கும் கண்டங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பூமியின் எதிர்காலத்தில் அவை ஒன்றாகச் சேரப் போகின்றன. அப்படியெனில் என்ன வகையான சூப்பர் கண்டம் உருவாகக்கூடும்?
 
புதிய சூப்பர் கண்டம் தோன்றும்போது, நாம் இப்போது சொந்தமாக வைத்திருக்கும் அல்லது அறிந்திருக்கும் நிலப்பரப்புகள், நாடுகள் போன்றவை எங்கே இருக்கும், எப்படி இருக்கும்? குறைந்தது நான்கு சாத்தியங்களை புவியிலாளர்கள் நமக்குக் காட்டுகிறார்கள்.
 
வருங்காலத்தில் இப்போது இருப்பதைப் போன்ற உலகமே இருக்காது. அப்போது நீங்கள் பார்த்தால், அது வேற்றுக் கிரகத்தைப் போலத் தோன்றக்கூடும். ஒரே பிரச்னை என்னவென்றால் அதற்கு நீங்கள் சில கோடி ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
 
எதிர்கால சூப்பர் கண்டங்கள் எப்படியிருக்கும்?
லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஜோவா டுவார்ட் பூமியின் எதிர்கால சூப்பர் கண்டங்களைப் பற்றி ஆராய்கிறார். ஒரு அசாதாரணமான வரலாற்றுச் சம்பவம் அவரது கவனத்தைக் கவர்ந்தது. நவம்பர் 1755 இல் ஒரு சனிக்கிழமை காலை போர்ச்சுகலில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. கடந்த 250 ஆண்டுகளில் இது மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும். 60,000 பேர் கொல்லப்பட்டனர். அட்லாண்டிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளிதான் ஜோவாவின் வியப்புக்குக் காரணம். "அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை" என்கிறார் அவர். "இது விசித்திரமானது"
 
பெரும் பூகம்பங்கள் பொதுவாக கண்டத் தட்டுகளும் பெருங்கடல் தட்டுகளும் ஒருங்கே அமையும் இடத்திலோ அல்லது அதற்கு அருகிலோ நிகழ்கின்றன. ஆனால் 1755 ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் அப்படிப்பட்டது அல்ல.
 
2016 ஆம் ஆண்டில், ஜோவாவும் அவரது சகாக்களும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தனர். அதாவது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டத் தட்டுகளுக்கு இடையில் உள்ள தையல்கள் பிரியலாம், பெரிய முறிவு ஏற்படலாம் என அவர்கள் கூறுகின்றனர். கார் கண்ணாடியில் இரண்டு சிறிய துளைகளுக்கு இடையே கண்ணாடி பிளவுபடுவது போல இது நடக்கும் என்று விளக்குகின்றனர்.
 
அப்படியானால், மத்தியதரைக் கடலில் இருந்து மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவை இணையும். இந்தப் பகுதிகளுக்கு எரிமலைகள், பூகம்பங்களைக் கொண்டு வருவதற்கான ஒரு மண்டலம் உருவாகும்.
 
இது நடந்தால் அது அட்லாண்டிக் பெருங்கடல் மறைந்துபோகும் என்பதை ஜோவோ உணர்ந்தார். பசிபிக் பெருங்கடலும் மறையத் தொடங்கும். இறுதியில் ஒரு புதிய சூப்பர் கண்டம் உருவாகும். அவர் அதற்கு ஆரிகா என்று பெயரிடுகிறார் ஜோவா. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் முன்னாள் நிலப்பகுதிகள் அதன் மையத்தில் இருக்கும்.அவர் கூறும் சூப்பர் கண்டம் இப்படித்தான் இருக்கும்.
 
நான்கு வகையான சூப்பர் கண்டங்கள்
ஜோவா ஆரிக்கா குறித்த தனது கணிப்பை வெளியிட்ட பிறகு, அவர் மற்ற வருங்கால வாய்ப்புகள் குறித்தும் விவரித்தார். புவியியலாளர்கள் முன்மொழிந்த ஒரே சூப்பர் கண்டம் என்ற கணிப்பில் அவருக்கு உடன்பாடில்லை.
 
வேல்ஸில் உள்ள பாங்கோர் பல்கலைக்கழகத்தில் கடல்சார் ஆய்வாளர் மத்தியாஸ் கிரீனுடன் அவர் பேசினார். டிஜிட்டல் மாடல்களை உருவாக்கும் நிபுணர் ஒருவர் தேவை என்று அவர்கள் உணர்ந்தார்கள். லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் மற்றொரு புவியியலாளர் ஹன்னா டேவிஸை அதற்காகச் சேர்த்துக் கொண்டார்கள். மற்ற விஞ்ஞானிகளும் மேம்படுத்தும் வகையிலான மாதிரிகளை உருவாக்குவதே அவர்களது யோசனை.
 
அவர்களுக்கு நான்கு பாதைகள் தென்பட்டன. ஆரிகாவின் விரிவான படத்தை மாதிரியாக்குவதுடன், மற்ற மூன்று சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர். ஒவ்வொன்றும் சுமார் 20 முதல் 25 கோடி ஆண்டுகளுக்கு அப்பால் வருங்காலத்தில் நடக்கக்கூடியவை.
 
அவர்களது இரண்டாவது சாத்தியக்கூறு, அட்லாண்டிக் பெருங்கடல் அப்படியே இருக்கும் ஆனால் பசிபிக் பெருங்கடல் நிலத்தால் மூடப்படும் அல்லது மறையும். இப்படி நடந்தால் உருவாகும் சூப்பர் கண்டம் நோவோபங்கேயா என்று அழைக்கப்படுகிறது. "இப்போது நமது புரிதலின் அடிப்படையில் இது மிகவும் எளிமையானதும் நம்பத்தகுந்ததும் ஆகும்" என்கிறார் டேவிஸ்.
 
இதேபோல் மற்றொரு சாத்தியக்கூறு, ஆர்க்டிக் பெருங்கடல் மறைந்து, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் திறந்த நிலையில் இருக்கும். இதில் கண்டங்கள் வடக்கு நோக்கி நகர்கின்றன. அண்டார்டிகாவைத் தவிர அனைத்தும் வட துருவத்தைச் சுற்றி அமைகின்றன.
 
இப்படி உருவாகும் கண்டத்துக்கு அமாசியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தக் கண்டம் இப்படியிருக்கும். இறுதிச் சாத்தியக்கூறு என்னவெனில், அட்லாண்டிக்கில் கடல் தரைப்பரப்பு குறைய வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் பாங்கேயா அல்டிமா எனப்படும் ஒரு சூப்பர் கண்டம் உருவாகும். பாங்கேயா அல்டிமா ஒரு பெரிய கடலால் சூழப்பட்டுள்ளது. அதன் மத்தியிலும் ஒரு கடல் உள்ளது.
 
சூப்பர் கண்டங்களில் காலநிலை எப்படியிருக்கும்?
இந்த நான்கு டிஜிட்டல் மாதிரிகள் இப்போது புவியியலாளர்களுக்கு பூமி தொடர்பான பிற கோட்பாடுகளை சோதிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். உதாரணத்துக்கு சூப்பர் கண்டங்களில் அலைகள் எப்படியிருக்கும், ஒரேயொரு பெருங் கடல் மற்றும் மாபெரும் நிலப்பரப்பைக் கொண்ட உலகில் வானிலை எப்படி இருக்கும் என்பனவற்றை ஆராயலாம்.
 
சூப்பர் கண்டங்களின் காலநிலைகளை மாதிரிப்படுத்த பல மாதங்கள் ஆகின. இவற்றில் நான்கு வகையான சூப்பர் கண்ட வாய்ப்புகளுக்கு சில குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் தென்பட்டன. உதாரணமாக, அமாசியா சூப்பர் கண்டம் உருவானால் பூமி மிகவும் குளிர்ச்சியாக மாறும். ஆரிகா, இதற்கு நேர்மாறாக, வறண்ட காலநிலையைக் கொண்டிருக்கும்.
 
இந்த சூப்பர் கண்டங்களின் மாதிரிகள், அந்தக் கணிப்பு எல்லாம் பெருமளவு ஊகத்தைக் கொண்டவைதான். இதை டேவிஸும் ஒப்புக் கொள்கிறார்.
 
இருப்பினும் உறுதியாகத் தெரிந்தது என்னவென்றால், நாம் இன்று பார்க்கும் நிலப்பரப்புகள் ஒரு நாள் முற்றிலும் வேறுவிதமாக மாறிப்போகும். இன்று தொலைவில் இருக்கும் நாடுகள் அப்போது அருகருகே இருக்கும். இன்று எல்லைகளைப் பகிர்ந்து, சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அண்டை நாடுகள் அப்போது வேறு எங்கோ தொலைவில் இருக்கும். கடற்கரைகள் அரிதாகப் போயிருக்கும்.