திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (00:10 IST)

யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி பிபிசிக்கு பேட்டி: "ரத்தப்பணத்தில் ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள்"

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, "ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து வாங்கும் ஐரோப்பிய நாடுகள், பிறரின் ரத்தத்தில் சம்பாதிக்கின்றன" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
 
பிபிசியுடனான ஒரு நேர்காணலில் பேசிய ஸெலென்ஸ்கி, ரஷ்ய எரிசக்தி விற்பனையைத் தடை செய்யும் முயற்சிகளுக்கு ஜெர்மனி மற்றும் ஹங்கேரி முட்டுக்கட்டையாக இருப்பதால் இந்த ஆண்டில் மட்டும் ரஷ்யா £250bn ($326bn) வரை சம்பாதித்துள்ளதாக தெரிவித்தார்.
 
ஜெர்மனியின் செயல்பாடுகள் மீது யுக்ரேனிய தலைமை கடும் விரக்தியில் உள்ளது, அந்த நாடு ரஷ்யாவுக்கு எதிரான சில தடைகளை ஆதரித்துள்ளது. ஆனால் இதுவரை எண்ணெய் விற்பனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விடுக்கப்படும் அழைப்புகளுக்கு எதிராக ஜெர்மனி உள்ளது.
 
"எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளில் சிலர், இப்போது காலம் வேறு மாதிரி உள்ளதை புரிந்துகொள்கிறார்கள். இது வணிகம் மற்றும் பணப் பிரச்னை அல்ல. இது உயிர் வாழ்வதற்கான பிரச்னை," என்று வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, கீயவில் உள்ள தனது கண்காணிப்பு அறையில் இருந்தபடி பிபிசிக்கு நேர்காணலை வழங்கினார்.
 
ரஷ்யாவின் தாக்குதலைத் தடுக்கும் வகையில் மேலதிக ஆயுதங்கள் யுக்ரேனுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
'ரஷ்ய வீரர்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர், என் கணவரையும் கொன்றனர்'
யுக்ரேனின் தாக்குதலில் ரஷ்ய டாங்கிகள் சிதறுவது ஏன்? 4 கேள்விகளில் எளிய விளக்கம்
 
"அமெரிக்கா, பிரிட்டன், சில ஐரோப்பிய நாடுகள் - எங்களுக்கு உதவ முயல்கின்றன அல்லது உதவி வருகின்றன," என்று கூறிய அவர், "ஆனால் நமக்கு இன்னும் விரைவாக ஆயுதங்கள் தேவை. அதாவது இப்போதே தேவை," என்று தெரிவித்தார்.
 
யுக்ரேனிய அதிபர் (வலது) தனது நாட்டுக்கு இன்னும் மேற்கிலிருந்து ஆயுதங்கள் தேவைப்படுவதாகக் கூறினார்
 
ரஷ்ய துருப்புக்கள் சமீபத்திய வாரங்களில் யுக்ரேனிய தலைநகரான கீயவ், மற்றும் அந்நாட்டின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளிலிருந்து பின்வாங்கின. அதன் பிறகு வெளிப்படையாகவே யுக்ரேன் முழுவதையும் கைப்பற்றும் முயற்சியை அந்த நாடு கைவிட்டதாகத் தோன்றியது.
 
ஆனால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், யுக்ரேனின் மேலும் சில பிரதேசங்களைக் கைப்பற்றும் வகையில் தனது ராணுவ நடவடிக்கை மீது மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் யுக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்கில் ரத்தக்களரி மற்றும் நீடித்த மோதலுக்கான அச்சங்கள் காணப்படுகின்றன.
 
ரஷ்ய ராணுவ நடவடிக்கையில் தெற்கு துறைமுக நகரமான மேரியுபோல் - அதிபர் புதினின் கேந்திர இலக்காக கருதப்படுகிறது. ஏற்கெனவே பல வாரங்களாக ரஷ்ய பீரங்கி குண்டுவீச்சுகளுக்கு இலக்காகி அந்த நகரம் அழிக்கப்பட்டுள்ளது.
 
இதை பிபிசியிடம் விவரித்த ஸெலென்ஸ்கி, நகரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் கருதுவதாக தெரிவித்தார்.
 
"இறந்த பல்லாயிரக்கணக்கானவர்கள், பலர் காணாமல் போயுள்ளனர் என்ற தகவல் எங்களிடம் உள்ளது," என்று அவர் கூறினார்.
 
"அவர்களின் ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளன, ரஷ்ய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு பலரும் ரஷ்யாவின் மிக ஆழமான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிலர் முகாம்களுக்கும், சிலர் பிற நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இங்கு என்ன நடக்கிறது என்பது இங்குள்ளவர்களுக்குப் புரியவில்லை.
 
 
யுக்ரேனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மேரியுபோலில் 95% கட்டடங்கள் அழிக்கப்பட்டதாக அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
 
மேரியுபோல், கீயவ் புறநகர்ப் பகுதிகளான புச்சா மற்றும் போரோடியங்காவில் ரஷ்ய துருப்புக்கள் செய்த அட்டூழியங்கள் ரஷ்யர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பை மேலும் சுருக்கிவிட்டதாக ஸெலென்ஸ்கி கூறினார்.
 
புச்சாவில் ஒரு வாரத்திற்கு முன்பு யுக்ரேனிய படைகள் திரும்பப் பெறப்பட்டதில் இருந்து நூற்றுக்கணக்கான இறந்தவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இதில் பொதுமக்களின் தலையில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர், அத்துடன் பாலியல் வன்முறை பற்றிய பரவலான தகவல்கள் அதிகளவில் வருகின்றன.
 
"புச்சா தாக்குதல்களால் [சமாதான பேச்சுவார்த்தைகளின் சாத்தியக்கூறுகள்] எல்லாம் முடியும் கட்டத்தில் உள்ளது என்று கூறும் ஸெலென்ஸ்கி, "இது என்னைப் பற்றியது அல்ல - இது ரஷ்யாவைப் பற்றியது. எங்களுடன் பேசுவதற்கு அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்காது," என்கிறார்.
 
கடந்த வாரம் புச்சாவுக்கு சென்றபோது, "உணர்ச்சிகளின் முழு அளவையும் அனுபவித்தேன்" என்றும், அங்கே "ரஷ்ய ராணுவம் மீதான வெறுப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படாமல் எனது நாள் நிறைடைந்தது" என்று ஸெலென்ஸ்கி பேட்டியின்போது கூறினார்.
 
"ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு ராணுவத்தினர் என மேலிருந்து கீழ் வரை அனைவரும் போர் குற்றவாளிகள்" என்று அவர் குற்றம்சாட்டினார்.
 
அதிபர் ஸெலென்ஸ்கி (ஹெல்மெட் அணிந்தவரின் இடப்பக்கமாக இருப்பவர்) இந்த மாத தொடக்கத்தில் புச்சா நகருக்கு சென்று கள நிலைமையை பார்வையிட்டார்.
 
கடந்த பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்ய படையெடுப்புக்கு முன்னதாக, யுக்ரேனிய மக்களை அமைதியாக இருக்கும்படி யுக்ரேனிய அரசாங்கம் வலியுறுத்தியவேளையில் தமது தலைமையின் அவசியத்தை நியாயப்படுத்தினார் ஸெலென்ஸ்கி.
 
ஆயுதங்கள் மற்றும் விநியோகங்களுக்கான ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்வதற்கு தமது அரசாங்கம் பின்னணியில் செயல்பட்டு வருவதாகவும், வங்கிகளில் இயக்கத்தையும் யுக்ரேனிய பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் பீதியான நிலையைத் தவிர்ப்பதில் தாம் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
 
"நாங்கள் இப்படித்தான் வீழ வேண்டும் என ரஷ்யா விரும்பியது, ஆனால் அப்படி நடக்க நாங்கள் விடவில்லை," என்று கூறிய அவர், "அந்த நேரத்தில் நாங்களும் முழு அளவிலான படையெடுப்பு நடக்கும் என எதிர்பார்க்கவில்லை," என்று தெரிவித்தார்.
 
2014இல் கிரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து, மேலும் சில அதிக நிலப்பரப்பை அபகரிக்க முயற்சிப்பதால், யுக்ரேன் இப்போது கிழக்கு மற்றும் தெற்கில் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
 
இது குறித்து பேசிய ஸெலென்ஸ்கி, கிழக்குப்பகுதியில் இப்போது யுக்ரேனிய ஆயுதப்படைகளுக்கு "மிகவும் கடினமான சூழ்நிலை" நிலவுகிறது. ஆனால் அங்குதான் எங்களின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
 
"எங்களை அவர்களால் (ஆக்கிரமிப்புப் படையினர்) அழிக்க முடியும், ஆனால் நாங்களும் பதிலடி கொடுப்போம். அவர்களால் எங்களைக் கொல்ல முடியும். ஆனால் அவர்களும் இறப்பார்கள்," என்று ஸெலென்ஸ்கி கூறினார்.
 
கடைசியாக அவர், "என்னால் ஒன்றை புரிந்து கொள்ள முடியவில்லை - அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை," என்று கூறினார்.