வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2015 (21:52 IST)

எய்ட்ஸ் மாத்திரையின் விலை இந்தியாவிலும் 5000% உயருமா? [வீடியோ இணைப்பு]

எய்ட்ஸ் நோயாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட மருந்தின் விலையை சுமார் 5000% மடங்கு அதிகரித்திருப்பதை அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சரியான முடிவு என்று நியாயப்படுத்தியிருக்கிறார்.
 

 
டாராப்ரிம் (Daraprim) என்கிற இந்த மருந்து 62 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மருந்துக்கான காப்புரிமையை டூரிங் ஃபார்மசூட்டிக்கல்ஸ் என்கிற மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகஸ்ட் மாதம் வாங்கியது.
 
அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான மார்ட்டின் ஷ்க்ரெலி இந்த குறிப்பிட்ட மருந்தின் விற்பனையில் இருந்து கிடைக்கும் பணம் புதிய சிகிச்சைகளுக்கான ஆய்வுகளுக்காக செலவிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
 
மனிதர்களின் உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறையும்போது அவர்களை பாதிக்கும் ஒட்டுண்ணித் தாக்குதலுக்கு டாக்ஸோ ப்ளாஸ்மோஸிஸ் என்று பெயர். அந்த ஒட்டுண்ணித் தாக்குதலை டாராப்ரிம் என்கிற இந்த மருந்து குணப்படுத்துகிறது.
 
ஒரு மாத்திரையின் விலை $13.50 ஆக இருந்தது $750 ஆக உயர்ந்தது:
 
டூரிங் நிறுவனம் இந்த மருந்தின் உரிமத்தை வாங்குவதற்கு முன்னர் இந்த மருந்தின் (அதாவது ஒரு மாத்திரையின்) விலை 13.50 அமெரிக்க டாலராக இருந்தது. டூரிங் நிறுவனம் இந்த மருந்தின் உரிமத்தை வாங்கிய பின்னர் ஒரு மாத்திரையின் விலை 750 அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.
 
இந்த மருந்தின் ஒரு மாத்திரை தயாரிப்பதற்கு ஒரு அமெரிக்க டாலர் செலவாகிறது. அதேசமயம், இந்த மருந்தை சந்தைப்படுத்தவும், விநியோகிக்கவும் ஆகும் செலவு இதற்குள் வராது என்று கூறுகிறார் டூரிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்ட்டின் ஷ்க்ரெலி. அவர் முன்பு பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனம் ஒன்றின் மேலாளராக இருந்தவர்.
 
“இந்த மருந்தின் விற்பனையை லாபகரமானதாக்க வேண்டும்”, என்று அவர் புளூம்பெர்க் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். இந்த மருந்தை முன்பு விற்பனை செய்தவர்கள் ஏறக்குறைய இதை இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தமது நிறுவனத்தின் இந்த விலை உயர்வு முடிவை கேள்விக்குள்ளாக்கிய பலரையும் தமது டுவிட்டரில் மார்ட்டின் ஷ்க்ரெலி கடுமையாக கிண்டல் செய்திருந்தார். விலை உயர்வை கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை முட்டாள் என்று அவர் திட்டினார்.

அதேசமயம் இந்த விலை உயர்வை திரும்பப்பெறும்படி அமெரிக்காவின் தொற்றுநோய்களுக்கான சங்கம் மற்றும் எயிட்ஸ் மருந்துகளுக்கான சங்கம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார செயற்பாட்டாளர்கள் கூட்டாக ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
 
விலை உயர்வுக்கு மருத்துவ செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு:
 

 
இந்த மருந்து தேவைப்படும் நோயாளிகளின் பார்வையில் இந்த விலைஉயர்வு நியாயப்படுத்தப்பட முடியாது என்றும், சுகாதாரத் துறையால் இந்த விலை உயர்வுக்கு ஈடுகொடுக்க முடியாது என்றும் அவர்கள் தங்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
 
டாக்ஸோப்ளாஸ்மோஸிஸ் நோய்க்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எச் ஐ வி மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வெண்டி ஆர்ம்ஸ்ட்ராங் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 
இந்த தொற்றுக்கு மேலதிக சக்தி வாய்ந்த மருந்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் டிசீஸ் நியூஸ் என்கிற செய்திச் சேவையிடம் தெரிவித்திருக்கிறார்.
 
சிறப்பு மருந்துகளின் விலையை கண்டபடி அதிகரிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்காவின் ஜனநாயகக்கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் நேற்று திங்கட்கிழமை அறிவித்த பின்னர், உயிரியல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளின் விலை வால்ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் கணிசமான சரிவை சந்தித்தன.
 
டாராப்ரிம் மருந்து விலையேற்றம் பற்றி கருத்துத் தெரிவித்த ஹிலாரி கிளிண்டன், "சிறப்பு மருந்துகளின் விலையை பல மடங்கு ஏற்றி பணம் பறிக்கும் போக்கு ஏற்க முடியாதது” என்று சாடியிருந்தார்.
 
இந்த மருந்தின் விலை இந்தியாவிலும் இதே அளவுக்கு ஏறும் என்று கூற முடியாது என்கிறார் இந்தியாவின் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளரும் எச்.ஐ.வி. சிறப்பு சிகிச்சை நிபுணருமான மருத்துவர் ஏ எஸ் வளன்.
 
இந்த மருந்தின் விலையை திடீரென 5000% அதிகரித்திருப்பதன் பின்னணி மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து மருத்துவர் வளன், பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.