புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (23:50 IST)

ஜி7 அமைப்பில் மீண்டும் ரஷ்யாவை இணைக்க விரும்பும் டிரம்ப்: எதிர்க்கும் பிரிட்டன், கனடா

ஜி7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். ஆனால் பிரிட்டனும், கனடாவும் இதனை எதிர்க்கின்றன.

இந்த மாதம் நடைபெறவிருந்த ஜி7 மாநாடு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி, ரஷ்யாவையும் இணைத்து ஜி 7 அமைப்பை விரிவாக்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.

''ஜி 7 உச்சிமாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அழைக்க தனக்கு திட்டம் இருக்கிறது'' என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

ரஷ்யாவையும் இணைத்து ஜி7 மாநாட்டை கூட்டுவதற்கான அனைத்து சாத்தியக் கூறும் உள்ளது. இது குறித்து மற்ற நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியிலும் கலந்துரையாடப்பட்டது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்த ஆண்டு அமெரிக்கா நடத்தும் ஜி 7 உச்சி மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நாடுகள் இடையேயான கூட்டு முயற்சி, ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஆனால் ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றத்தால் இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கோபமடைந்துள்ளனர். மேலும் ஜி 7 நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இடம்பெறுவதை ஆதரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

2014ம் ஆண்டு ஜி 8 என அழைக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது. கிரீமியா பிராந்தியத்தை ரஷ்யா தம்முடன் இணைத்துக்கொண்டதை எதிர்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

''பல ஆண்டுகளுக்கு முன்பு கிரீமியா மீது ரஷ்யா படையெடுத்ததால் ஜி7ல் இருந்து வெளியேற்றப்பட்டது, இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச விதிகளை மீறி செயல்படுவதால், ஜி 7 அமைப்பில் இருந்து ரஷ்யா விலகியே இருக்கவேண்டும்'' என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ரஷ்யாவை ஜி7ல் இணைக்கும் திட்டத்தை நிச்சயம் நிராகரிப்போம் என ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரஷ்யா நடத்தும் வலிய தாக்குதல்களையும் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகளையும் அது நிறுத்திக்கொள்ளாவிட்டால், ஜி7 ல் ரஷ்யா இடம்பெறுவதை பிரிட்டன் ஆதரிக்காது என போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு கிரீமியா மீது படையெடுத்த காரணத்தால் ரஷ்யா விலக்கி வைக்கப்பட்ட பிறகும் கூட ரஷ்யாவின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ஆனால் கடந்த காலங்களில் ஜி7 அமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடுகளின் தலைவர்களும் மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர். இருப்பினும் ரஷ்ய அதிபர் புதின் ஜி7 மாநாட்டில் கலந்துக்கொள்வது சர்ச்சையான நிகழ்வாகவே கருதப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு பிரிட்டனின் சாலிஸ்பரி நகரில் வசித்த முன்னாள் ரஷ்ய உளவாளி மீது ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்யா மற்றும் பிரிட்டன் இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக பிரிட்டன் குற்றம்சாட்டியது.

இவ்வாறான பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஜி 7 மாநாட்டில் ரஷ்யா கலந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

சனிக்கிழமை அன்று ஜி7 மாநாட்டை ஒத்திவைப்பது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், ரஷ்யா, தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்போவதாக கூறினார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என்று கூறி அதிபர் டிரம்பின் அழைப்பை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்க்கெல் நிராகரித்துள்ளார்.

உலகில் மிக வலிமையான பொருளாதாரத்தைக் கொண்ட ஏழு நாடுகளின் அமைப்பே ஜி7.. இந்த ஏழு நாட்டின் தலைவர்களும் ஆண்டுதோறும் நடைபெறும் மாநாட்டில் கலந்துக்கொண்டு உலக நாடுகளின் பொருளாதாரம், காலநிலை மாற்றம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள்.

சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவையே ஜி7 நாடுகளின் முக்கிய குறிக்கோள்களாக உள்ளன. எனவே இந்த ஜி7 அமைப்பு விழுமியங்களை அடிப்படையாக கொண்ட சமூகம் என தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.