செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (14:31 IST)

சீனா - அமெரிக்கா மோதல்: ஹாங்காங் முன்னுரிமைகளை ரத்து!

ஹாங்காங்குக்கு அமெரிக்க அரசு வழங்கும் சிறப்பு முன்னுரிமைகளை ரத்து செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
 
டிரம்ப் நிர்வாகத்தின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. "சீன பெரு நிலப்பரப்பு எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதுபோலவே இனி ஹாங்காங்கும் நடத்தப்படும்," என்று வெள்ளை மாளிகையில் உள்ள செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
 
பிரிட்டனின் முன்னாள் காலனியான ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் சீன பெருநிலப்பரப்பு பரப்பில் இல்லாத சில தனி சுதந்திரங்களை அனுபவித்து வருகிறது. 'ஒரு நாடு இரு அமைப்பு முறை' எனும் கொள்கையின் கீழ் ஹாங்காங்குக்கு சில சுயாட்சி அதிகாரங்களும் இருக்கின்றன.
 
ஆனால் சீனா இயற்றியுள்ள புதிய பாதுகாப்புச் சட்டம், 1984 ஆம் ஆண்டு சீனா மற்றும் பிரிட்டன் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஹாங்காங்குக்கான சிறப்பு உரிமையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
 
சமீபத்திய பாதுகாப்பு சட்டம் 1997ஆம் ஆண்டு ஹாங்காங் பிரிட்டனால் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பின்பு கொண்டுவரப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. இந்தச் சட்டம் ஹாங்காங்கில் இயங்கும் 1,300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது.
 
ஹாங்காங்குக்கு தற்போது அமெரிக்க குடிமக்கள் விசா இல்லாமலேயே பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் புதிய பாதுகாப்பு சட்டத்தால் இனி அவர்கள் சீனாவின் கடுமையான விசா விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
 
ஹாங்காங்கில் இருக்கும் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதித்து வருகிறது. இனி அமெரிக்காவின் வரி விகிதம் அதிகரிக்கப்படும். இந்நிலையில் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் ஹாங்காங் இடையே நடக்கும் பல நூறு கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை கேள்விக்குறியாக்கும்.