திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (13:49 IST)

மனதை உலுக்கும் தந்தை - மகள் மரண புகைப்படம்; வெறுப்பை சம்பாதிக்கும் டிரம்ப்!

அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை - மகள் மூழ்கி மரணமடைந்தனர். இவர்களது புகைப்படம் உலகை உலுக்கியுள்ளது. 
 
25 வயதான ஆஸ்கர் அல்பர்டே மார்டினிஸ் ரமிரெஸ் மற்றும் அவரது மகள் வெலேரியா இருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மடமொரொஸ் என்ற பகுதியை கடக்க முயற்சித்துள்ளனர். வட மெக்ஸிகோ மாகாணமான டமோலீபாஸில் உள்ள இப்பகுதியில் இருந்து அமெரிக்காவின் டெக்ஸாசிற்கு செல்ல முடியும்.
 
ரமிரெஸின் மனைவியும், அக்குழந்தையின் தாயுமான டனியா வெனெசா அவலொஸ், தங்கள் குடும்பம் கடந்த இரண்டு மாதங்களாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் விசாவில் மெக்ஸிகோவில் இருந்ததாக தெரிவித்துள்ளார். 
அமெரிக்க அதிகாரிகளை எதிர்கொண்டு புகலிடம் கோர முடியாமல் விரக்தியடைந்த அவர்கள், நதியை கடந்து அமெரிக்கா செல்ல முடிவு செய்தனர். மகளுடன் நதியை கடந்த ரமிரெஸ், அக்குழந்தைகயை கரையில் விட்டுவிட்டு, தன்னை கூட்டிச் செல்ல வந்ததாக, அவர் மெக்ஸிகோ போலீஸாரிடம் கூறியுள்ளார்.
 
ஆனால் கரையில் தனியாக அமர்ந்திருந்த குழந்தை வெலேரியா பயந்து போய் தந்தை தண்ணீரில் குதித்த உடனே அவரும் குதித்துள்ளார். பிறகு குழந்தையை தந்தை காப்பாற்றினாலும், இருவரும் நதியின் ஆபத்தான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 
இவர்களின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என்று எல் சல்வேடார் அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது. இதனை நான் வெறுக்கிறேன் என்று இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
 
குடியேற்றம் தொடர்பாக அதிபர் டிரம்பின் கடுமையான நிலைப்பாடே குடியேறிகளை இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வைப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.