செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Modified: சனி, 24 அக்டோபர் 2015 (18:11 IST)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு செயலாளர் கைது

இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் வைத்து போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவமொன்று தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் அவரது மனைவியான தயாளினி ஆகியோர் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையினரால் நேற்று வியாழக்கிழமை பிரசாந்தன் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணைகளின் பின்னர் வீடு திரும்பிய அவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆரையம்பதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த கொலைச் சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறப்படும் சாட்சியொருவர் இரு தினங்களுக்கு முன்னர் கொடுத்த முறைப்பாடொன்றின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்படவிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சம்பவம் தொடர்பாக அவரது சகோதரரொருவரும் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.