1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2020 (14:24 IST)

இத்தாலியில் ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள், ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4614-ஐ எட்டியுள்ளது.

118 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்று, உலக அளவில் இதுவரை 1,25, 288 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சீனா அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்தாலியும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது, கடந்த 24 மணிநேரத்தில் 188 பேர் இறந்துள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இதனால் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

கொரோனாவால் உலகப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய நெருக்கடியை இத்தாலி எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) எட்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டதாக சீனா கூறுகிறது.

சீனாவில் இதுவரை குறைந்தது மூவாயிரம் உயிரிழந்துள்ள நிலையில் ஹாங்காங்கில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துளளது.

ஐ எஸ் குழுவினர் நடத்தும் நாளிதழில் நோய் தொற்றில் இருந்த தப்பிக்க மத ரீதியான சில வழிமுறைகளையும் பாதுகாப்பு சோசனைகளையும் வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று என பெயரை குறிப்பிடாமல் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

உடல்நிலை சரி இல்லாதவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
நோய் தொற்று இருக்கும் இடத்திற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்
இருமல் மற்றும் கொட்டாவியின் போதும் வாயை மூடிக்கொள்ள வேண்டும்
சாப்பிடும் முன்பும், தண்ணீர் குடிக்கும் முன்பும் கை கழுவ வேண்டும்.
மேலும் தங்கள் ஆதரவாளர்களை கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, இறைவனிடம் அடைக்கலம் தேடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆசிய பங்குச்சந்தைகள் பல கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஜப்பானில் நிக்கி குறியீட்டு எண் இன்று 8.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.

ஹாங்காங்கில் ஹாங் செங் 5.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சீனாவின் பங்குசந்தையும் 3.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


இதேபோல் இந்தியாவின் பங்குசந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. காலை பங்கு வர்த்தகம் துவங்கியவுடன் நிப்டி சுமார் 10% வீழ்ச்சியை கண்டதால் 45 நிமிடங்களுக்கு தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, இன்று கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ட்ரூடோவின் மனைவி சோஃபி க்ரிகோரியா ட்ரூடோ தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக கனேடிய பிரதமரின் செய்தி தொடர்பு அலுவலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ட்ரூடோவும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படாது. எனினும் அவர் பிரதமர் அலுவலகம் வரமாட்டார் என்றும் வீட்டில் இருந்தே பணிகளை தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டததையொட்டி செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ''நான் மீண்டு வருவேன்'' என ட்ரூடோ மனைவி சோஃபி தெரிவித்துள்ளார்.

ரத்தான விளையாட்டு போட்டிகள்
உலகின் மிக முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் கலைகாட்சிகூடங்கள் பெரும்பாலும் முடங்கியுள்ளன.

நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்கள் நோய் தொற்று பரவாமல் தடுக்க மார்ச் மாதம் இறுதி வரை மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன; அதேபோல், கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் பெரும் விளையாட்டு போட்டிகள், நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.