வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:38 IST)

சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்!

மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால், சூரியனின் இறப்பு முதல் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்தாக வேண்டும்.
 
மிக மிகத் தொலைவில் உள்ள வருங்காலத்தைப் பற்றி நமக்கு உண்மையில் ஏதாவது தெரியுமா? அடுத்த மாதம் மழை பெய்யுமா என்பது பற்றி உறுதியாக நமக்குக் கணிக்கத் தெரியாத காரணத்தால், பல கோடி ஆண்டுகளுக்கு அப்பால் என்ன நடக்கும் என்பது பற்றி பேசுவது சாத்தியமில்லாததாகத் தோன்றலாம்.
 
ஆனால், எல்லாமே வானிலை போலக் குழப்பமானதாக இல்லை. மிகத் தொலைவான கால கட்டத்தைக்கூட கணிப்பது சாத்தியமாகிறது. குறிப்பாக வானியல் மற்றும் அண்டம் பற்றிய கணிப்புகளில் இது சாத்தியம்.
ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் சென்னையில் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமா என்று இப்போதே கூறிவிட முடியும். ஏனெனில் சந்திரன், சூரியன் மற்றும் பூமி ஆகியவை நிலையான, கணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் நகர்கின்றன. இப்போது ஈர்ப்பு விதிகள் பற்றியும் நமக்கு நன்றாகத் தெரியும்.
 
இந்த அணுகுமுறையை "இயற்பியல் எஸ்கடாலஜி" என்று கூறலாம். இந்தப் பிரபஞ்சம் எந்தக் காலகட்டத்தில் எப்படியிருக்கும் என்று விவரிப்பதற்காக வானியல் இயற்பியலாளரான மார்ட்டின் ரீஸ் பயன்படுத்திய சொல் இது.
 
இறையியலில் இருந்து தனக்கான தொடக்கப்புள்ளியை ரீஸ் எடுத்துக் கொண்டார். அதில் "எஸ்கடாலஜி" என்பது உலகத்தின் அழிவு போன்று இறுதியான அம்சங்களைப் பற்றி ஆய்வு செய்வதாகும்.
 
இந்த தலைப்பில் உள்ள அற்புதமான ஆய்வு, ஃப்ரீமேன் டைசன் 1979-ஆம் ஆண்டு வெளியிட்ட " திறந்த பிரபஞ்சங்களின் வாழ்க்கை" பற்றிய ஆய்வுக் கட்டுரையாகும். இது சூரியனின் இறப்பு முதல் விண்மீன் திரள்களிலிருந்து நட்சத்திரங்கள் தப்பிச் செல்வது வரை எதிர்காலத்தில் வாழ்க்கையை அச்சுறுத்தும் பேரழிவுகளை கோடிட்டுக் காட்டியது.
 
தொலைதூர எதிர்காலத்தில் மனிதகுலம் இருந்தால், அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் என்ன? அவர்கள் எப்படி அதில் இருந்து தப்புவார்கள் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அச்சுறுத்தல்கள் வரும் என்று மட்டும் உறுதியாக நம்பலாம்.
 
அச்சுறுத்தல் 1: பனியுகங்களும், பரிணாம வளர்ச்சியும்
ஒரு பாலூட்டி இனத்தின் வழக்கமான ஆயுட்காலம் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகள் ஆகும். அணுசக்தி யுத்தம் முதல் உயிரியல் பொறியியல் தொற்றுநோய் வரை, மனிதகுலம் உடனடியாக குறைக்க வேண்டிய பிற அபாயங்களை இருக்கின்றன. இப்போது நடக்கும் இயற்கைப் பேரிடர்கள் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்தைவிட மிகச் சிறியதுதான்.
 
மனித குலத்துக்கு தற்போதிருக்கும் ஆபத்துகளைச் சரி செய்துவிட்டால், சமாளிக்க வேண்டிய சிக்கல்கள் அடுத்தடுத்து வரும்.
 
முதலாவது பனியுகம். அடுத்த சில பல்லாயிரம் ஆண்டுகளில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பனியிடைக் காலம் முடிந்து போகும். அதாவது இரு பனியுகங்களுக்கு இடையேயான காலம் முடிந்துவிடும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் நமது முன்னோர்கள் பல பனி யுகங்களில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். இதில் ஒரேயொரு மாறுபாடு என்னவென்றால், அவர்கள் நாடோடி வேட்டைக்காரர்களாக இருந்தார்கள். நம்மைப்போல உலகளாவிய நாகரிகமாக இருக்கவில்லை.
 
அதன் பிறகு, பல்வேறு புவியியல் யுகங்களுக்கு இடையேயான காலநிலை மாறுபாடுகளையும் நாம் சந்திக்க நேரிடும். கடந்த காலங்களில் பூமி குளிர்ச்சியாக மட்டுமல்ல, வெப்பமாகவும் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஈவோசீன் காலத்தில் பூமி இப்போது இருப்பதைவிட 10 டிகிரி அதிக வெப்பமாக இருந்திருக்கிறது.
 
அப்போது ஆர்க்டிக் பகுதியில் பனை மரங்கள் வளர்ந்திருக்கின்றன, முதலைகள் வாழ்ந்திருக்கின்றன. மற்றும் பூமத்திய ரேகை பகுதிகள் மக்கள் வாழ முடியாத அளவு சூடாக இருந்திருக்கின்றன.
 
கடந்த காலங்களில் கூட பூமி பனிப் பந்து போல இருந்த காலங்களும் உண்டு. அந்தக் காலகட்டங்களில் பூமி முழுவதும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. சூப்பர் வோல்கனிசம் எனப்படும் தீவிர எரிமலை வெடிப்புகள், விண்கல் தாக்குதல்கள், சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் ஆகியவற்றின் ஆபத்து உள்ளது. இது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கையான அழிவுக்கு வழிவகுக்கிறது..
 
கடைசியாக ஹோமோ சேபியன்ஸ் என்றொரு இனமே வேறொரு இனமாக மாறிவிடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. நாம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறோம். இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டிருக்கிறோம். உதாரணத்துக்கு நவீன உயிரித் தொழில்நுட்பம் நமது மரபணுக்களை வேண்டுமென்ற மாற்ற அனுமதிக்கிறது. இப்படியே போனால் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு மனித இனம் வேறு இனமாக மாறிவிடும். இதைத் தடுக்கும் ஒரே வழியே நமது மரபணுக் குறியீடுகளை நாம் சேமித்து வைப்பது ஒன்றுதான்.
 
இப்படியாகத் தப்பித்து "நாம்" ஒரு நூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகும் வாழ்ந்தால், பேரழிவுகளை ஒட்டுமொத்த பூமி அளவுக்குக் கையாளும் திறன் பெற்றிருப்போம். ஆனால் முரண்பாடு என்னவென்றால், நாம் நமது சக பாலூட்டி இனங்களை விட நீண்ட காலம் தழைத்திருக்க வேண்டுமெனில், இருப்பதிலிருந்து மிகவும் மாறுபட்டு இருந்தாக வேண்டும்.
 
அச்சுறுத்தல் 2: உயிர்க்கோளத்தின் ஆயுள் முடிந்து போகும்
சூரியனின் வெப்பத்தால் பாறைகளில் வேதிவினைகள் ஏற்பட்டு காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு உறிஞ்சப்படும். இதனால் தாவரங்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். கூடுதலாக பசுமை இல்ல விளைவு ஏற்பட்டு, பூமி அதிகமாகச் சூடாகும். பெருங்கடல்கள் ஆவியாகும்.
 
மிகப் பிரமாண்டமான பொறியியல் கட்டுமானங்கள் மூலம் நம்மால் உயிர்க்கோளத்தைக் காப்பாற்ற முடியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிழலை ஏற்படுத்தும் வகையிலான கட்டுமானங்களை உருவாக்க வேண்டும்.
 
இல்லாவிட்டால், பூமியை விட்டு விண்வெளிக்கு இடம்பெயரலாம். இப்போதே தன்னிறைவான விண்வெளி வாழ்விடங்கள் சாத்தியமென தோன்றுகின்றன. ஒருவேளை இப்போது இது கடினமாகத் தோன்றினாலும் இன்னும் நூறு கோடி ஆண்டுகளில் நாம் இன்னும் பல மடங்கு திறன் பெற்றிருப்போம்.
 
அச்சுறுத்தல் 3: சூரியன் நிரந்தரமாக "மறைந்து" போகும்
இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் பிரகாசம் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கும். மையத்தில் குவிந்திருக்கும் ஹீலியம் சூரியனை வேகமாகச் சூடாக்கும். பின்னர் சிவப்பு அரக்கன் எனப்படும் நிலைக்கு சூரியன் மாறிவிடும். அது சூரியமண்டலத்தின் முடிவைக் குறிக்கிறது. அப்போது பூமி சூரியனால் விழுங்கப்படும். சூரியனும் வெள்ளைக் குள்ளர் என்ற இறந்த நிலைக்குச் சென்றுவிடும்.
 
இந்தச் சூழ்நிலையிலும் மனித குலம் தப்பிப்பிழைத்திருக்க வேண்டுமானால், சூரிய மண்டலத்தைவிட்டே வெளியேறியிருக்க வேண்டும். இதற்கு அதி வேகமான விண்கலன்கள் நம்மிடம் இருக்க வேண்டும்.
 
ஏற்கெனவே விண்வெளிகளில் வாழிடங்களை அமைத்தவர்கள் அப்படியே வேறு நட்சத்திரங்களை நோக்கி நகரத் தொடங்குவார்கள்.
 
அச்சுறுத்தல் 4: நட்சத்திரங்களின் அழிவு
 
 
பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் பெருக்கம் ஏற்கெனவே உச்சத்தில் இருக்கிறது. அடுத்த சில பில்லியன் ஆண்டுகளில் பிரகாசமான நட்சத்திரங்கள் எரிந்துவிடும். அதன் பிறகு குறைந்த பிரகாசம் கொண்ட சிவப்புக் குள்ள நட்சத்திரங்கள் மட்டுமே பிரபஞ்சத்தில் இருக்கும். அவை பல லட்சம் கோடி ஆண்டுகள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். ஆனால் உயிர் வாழ்வதற்கு அந்த ஒளி போதாது. வேறு வகையான ஆற்றல் ஆதாரங்களைத் தேட வேண்டியிருக்கும்.
 
இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஹைட்ரஜன் துகள்களை இணைத்து அதன் மூலம் ஆற்றலை உருவாக்க முடியும். ஆனால் இதற்கெல்லாம் மிகப் பிரமாண்டமான பொறியியல் அறிவு தேவைப்படும்.
 
இல்லையென்றால் குறைந்த வெப்பம் கொண்ட சூழலில் வாழ உயிர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
 
இவற்றையெல்லாம் கடந்து மனிதகுலம் தப்பிப்பிழைத்தது என்றால், அதுவே பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ஆற்றல் மூலமாக இருக்கும்.
 
அச்சுறுத்தல் 5: விண்மீன் திரள்களின் முடிவு
 
சீரற்ற முறையில் நட்சத்திரங்கள் இயங்கும் போது விண்மீன் திரள்கள் படிப்படியாக அழிந்து போகின்றன. அந்த நேரத்தில் விண்மீன்கள் அந்தந்த விண்மீன் திரள்களில் இருந்து வெளியே தப்பிச் சென்றுவிடும். அதனால் விண்மீன் திரள் சுருங்கி இறுதியில் மைய கருந்துளையில் விழுந்துவிடும். இதற்கு 100 மில்லியன் டிரில்லியன் ஆண்டுகள் ஆகுமாம்.
 
இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், நட்சத்திரங்கள் சீரான வேகத்தில் நகர்வதை உறுசி செய்ய வேண்டும். இயற்பியல் ரீதியாக இது சாத்தியம்தான். அமெரிக்கா அனுப்பிய வாயேஜர் விண்கலன்கள் ஈர்ப்பு விசையைக் கொண்டு எப்படி முடுக்கப்படுகின்றனவோ அதைப் போல இதையும் செய்ய முடியும். ஆனால் அதற்கும் ஒவ்வொரு நட்சத்திரத்தைச் சுற்றிலும் மிகப் பிரமாண்டமான கட்டுமானங்கள் தேவைப்படும். அதாவது தப்பிச் செல்ல முயலும் நட்சத்திரங்களையே அவற்றின் பாதைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு கட்டுமானங்கள் தேவைப்படும்.
 
அச்சுறுத்தல் 6: பருப்பொருளின் அழிவு
நமது பருப்பொருள்கள் அனைத்தும் புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களால் ஆன அணுக்களால் கட்டப்பட்டுள்ளன. புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் பொதுவாக நிலையானவை என்று கூறப்படுகின்றன. நியூட்ரான்கள், புரோட்டான்களால் நிலைப்படுத்தப்படுகின்றன. தனியாக இருந்தால் அவை சில நிமிடங்களில் சிதைந்துவிடும்.
 
பல இயற்பியல் கோட்பாடுகள் புரோட்டான்கள் உண்மையிலேயே நிலையானவை அல்ல, அவை மிக நீண்ட காலத்தில் சிதைந்துவிடும் என்று கணித்துள்ளன. இதுவரை புரோட்டானின் சிதைவு கண்டறியப்படவில்லை. அது நடப்பதற்கு டிரில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என சோதனைகளில் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
 
அப்படி நடக்கும்போது பொருள் என்ற ஒன்றே இருக்காது. நட்சத்திரங்களும் கோள்களும் கதிர்வீச்சுகளைக் கொண்ட எலெக்ட்ரான்களாகவும் பாசிட்ரான்களாகவும் மாறும். வாழத் தகுந்த எதுவும் இருக்காது. வெற்றுப் பிரபஞ்சமும் கறுந்துளைகளும் கதிர்வீச்சுகளும் மட்டுமே எஞ்சியிருக்கும்.
 
சரி, அந்த நிலை வரை, அதாவது டிரில்லியன் கணக்கான ஆண்டுகள் வரை மனித குலம் நீடித்திருக்குமா?
 
ஐசக் அசிமோவின் கடைசிக் கேள்வி என்ற சிறுகதையில் உள்ள கணினி கூறுவது போல "ஓர் அர்த்தமுள்ள பதிலைக் கூற போதுமான தரவுகள் இல்லை"