1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (21:21 IST)

பருவநிலை மாற்றம்: அதீத விவசாயத்தால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் அழிந்து போகும் பேராபத்து

ஹெலன் பிரிக்ஸ்
 
ஜெர்மனி முழுவதும் உள்ள காடுகள் மற்றும் புல்வெளிகளில் பூச்சிகள் மற்றும் சிலந்திகள் அழிந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த அழிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள், இது அதிகளவிலான விவசாயத்தால் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
 
பட்டாம் பூச்சிகள், ஊரும் பூச்சிகள் மற்றும் பறக்கும் பூச்சிகளின் வாழ்விடங்களைக் காப்பாற்ற மனிதர்கள் நிலங்களை பயன்படுத்துவதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என விஞ்ஞானிகள் கோருகின்றனர்.
 
உலகமுழுவதும் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
நேச்சர் என்ற சஞ்சிகையில் வெளியான சமீபத்திய ஆய்வுக் கட்டுரையில், பல பூச்சி இனங்கள் அழிவுப் பாதைக்குச் செல்வதாக உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
 
ஜெர்மனியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான செபஸ்டியன் செபால்ட், பூச்சிகள் அழிந்து வருவதற்கு நமது விவசாய முறையே காரணம் எனத் தெளிவாக தெரிவதாக கூறுகிறார்.
 
"எங்களின் ஆய்வில், பூச்சிகள் அழிந்து வருவது உறுதியாகியுள்ளது. இது நாம் முந்தைய காலங்களில் நினைத்ததைக் காட்டிலும் இது அதிகமாக உள்ளது. ஏனென்றால் காடுகளிலும் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"இந்த அழிவு, பயன்பாட்டில் உள்ள இடங்களில் ஏற்படுவது மட்டுமல்லாமல், சூழல் ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட இடங்களிலும் ஏற்பட்டு வருகிறது என்பதே மிகவும் கவலை கொள்ளக்கூடிய விஷயம். எனவே நமது பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் இடங்கள் என நாம் கருதுவது தற்போது நம்மைக் காக்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை."
 
அந்த ஆய்வுக் குழு, ஜெர்மனியில் 2008ஆம் ஆண்டிலிருந்து 2017ஆண்டு வரை ஜெர்மனியில் உள்ள புல்வெளி மற்றும் காடுகளில் ஒரு மில்லியனிற்கும் அதிகமான பூச்சிகள், மற்றும் சிலந்திகளின் தகவல்களைப் பதிவு செய்தது.
 
அந்த தகவலின்படி புல்வெளிகள் மற்றும் காடுகளில் பூச்சிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. குறிப்பாகப் பூச்சிகள் எண்ணிக்கை குறையக் காரணம், அங்கு அதிகளவில் விவசாயம் செய்யப்படுவதால் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
 
சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பிற ஆய்வுகளில், பூச்சிகள், தேனீக்களில் பல இனங்களில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக வளர்ந்த பொருளாதார மிக்க நாடுகளில் இது நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
 
இவை ஒருபக்கம் இருக்க, ஈக்கள் மற்றும் கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
இம்மாதிரியாகப் பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவது அதிகமாக விவசாயம் செய்தல், பூச்சிக் கொல்லி மருந்துகள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
 
பூச்சிகளின் அழிவு ஒட்டுமொத்த சுற்றுச்சூழலின் அழிவாகும்.
 
இந்த பூச்சிகள் பல பறவைகள், நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள், வௌவால்கள், மற்றும் பல்லிகள் ஆகியவற்றுக்கு உணவாக உள்ளது. மேலும் தாவரங்களில் மகரந்த சேர்க்கை பூச்சிகளால்தான் நடைபெறுகிறது.
 
எனவே பூச்சிகளின் அழிவு என்பது சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அழிவின் தொடக்கம் என்கின்றனர் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள்.