புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Updated : சனி, 13 ஜூன் 2020 (23:09 IST)

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 56 நாட்கள் கழித்து மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. அங்கு 10 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள்.

இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட முடிவை அந்நகர அதிகாரிகள் கைவிட்டுள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

56 நாட்கள் கழித்துக் கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ஜிங்கில் கொரோனா தொற்று மீண்டும் பதிவானது. வெள்ளிக்கிழமை அன்று மேலும் இரண்டு பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஜுன் 9ஆம் தேதி பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் வீடு திரும்பிய பின்னர், அங்கு இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று பதிவான இரண்டு நபர்களுமே ஃபெங்டய் மாவட்டத்தில் உள்ள சீன இறைச்சி உணவு ஆய்வு மையத்தின் ஊழியர்கள் ஆவர்.
இரண்டு நாட்களாக தொடர்ந்து இவ்வாறு கொரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா அலையை சீனா சந்திக்க நேரிடுமோ என்ற கவலை எழுந்துள்ளது.

சர்வதேச விமானங்கள் பெய்ஜிங்கில் தரையிறங்காமல் இருக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த விமானங்கள் அனைத்தும் மற்ற நகரங்களுக்குத் திசை திருப்பப்படும்.

இதனால், முதல் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளைத் திறக்கும் முடிவு கைவிடப்படுவதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பெய்ஜிங்கிற்கு வெளியே பயணம் மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இவருடன் தொடர்பில் இருந்து இருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி சீனாவில் 83,064 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 65 பேர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாருக்கும் இதுவரை தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை.

78,365 பேர் அங்கு கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அந்நாட்டுச் சுகாதாரத்துறையின் தரவுகளின் படி 4,634 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்