பெர்லின் சுவர் இடிப்பு: ஒற்றைச் சுவரால் இரண்டாக துண்டாடப்பட்ட ஜெர்மனி ஒன்றாக இணைந்த கதை

berlin
sinojkiyan| Last Modified சனி, 9 நவம்பர் 2019 (18:27 IST)
இன்றுடன் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன.
 
1980களின் நடுப்பகுதியில் சோவியத் யூனியன் ஒரு தீவிர பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. கம்யூனிச அரசுகள் ஊழல் மிக்கதாகவும், செயல்திறனற்றவையாகவும் மாறியிருந்தன.
அமெரிக்காவோடு போட்டி போட்டுக்கொண்டு ஆயுதங்களை குவிப்பதில் ஈடுபட்டதும், ஆஃப்கானிஸ்தானில் நடத்திய போரும் சோவியத் யூனியனுக்கு பெரும் பொருட்செலவை ஏற்படுத்தின.
 
இதன் காரணமாக, கிழக்கு ஜெர்மனி உட்பட கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு பல தசாப்தங்களாக சோவியத் யூனியன் வழங்கி வந்த நிதியுவியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
சமூகத்தில் அதிருப்தி அதிகரித்தது. சோவியத் யூனியனின் தலைவர் மிகையில் கோர்பச்சோஃப் நிலைமையை சுமூகமாக்க முயற்சித்தார். கிளாஸ்நோஸ்ட் என்று அறியப்படும் அரசியல் மற்றும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மையை மிகையில் அறிமுகப்படுத்தினார்.
 
புதிதாக கிடைத்த இந்த சுதந்திரத்தை மக்கள் அரசை விமர்சிக்கவும், போராட்டங்களை நடத்தவும் பயன்படுத்தினர். இதன் விளைவாக, ஓரளவு சுதந்திரமான தேர்தலை முதன்முறையாக போலாந்து நடத்தியது. ஹங்கேரி தன்னுடைய எல்லையை திறந்து, ஆஸ்திரியா வழியாக கிழக்கு ஜெர்மானியர்கள் மேற்கு பகுதி நாடுகளுக்கு செல்ல அனுமதித்தது.
 
கிழக்கு ஜெர்மனி அதிபர் எரிக் ஹானேக்கர் பதவி விலக வேண்டியதாயிற்று.
 
பயணக் கட்டுபாட்டை நீக்க நவம்பர் 9 ஆம் தேதி, அரசு உறுதி அளித்தது. அப்போது, அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளர் 'எப்போது' என கேள்வியெழுப்பியபோது, "எனக்கு தெரிந்த வரையில் உடனடியாக, இப்போதே" என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
 
இத்தகைய தருணத்துக்காக காத்திருந்த பெர்லின் மக்கள் ஜெர்மனியை இரண்டாக பிரித்திருந்த பெர்லின் சுவரை உடைத்தனர்.
 
உணர்ச்சிவசப்பட்டிருந்த கூட்டம் திறக்கப்பட்ட எல்லையை தாண்டி சென்றது. சுவரின் மறுபக்கத்தில் நூற்றுக்கணக்கான மேற்கு ஜெர்மனியர்கள் அவர்களுக்காக காத்திருந்தனர்.
 
இறுதியில், பெர்லின் சுவரால் பிரிந்திருந்த குடும்பங்களும், நண்பர்களும் மீண்டும் சந்தித்தனர். அந்த இரவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலகம் முழுவதும் பகிரப்பட்டன.
 
ஒருமாதம் கழித்து, கிழக்கு ஜெர்மனியும் வீழ்ந்தது. சோவியத் யூனியனிலிருந்த பிற அரசாங்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சியடைய தொடங்கின. 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் முற்றிலுமாக வீழ்ந்து பனிப்போர் முடிவுக்கு வந்தது.
 
கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் மீண்டும் ஒன்றாகியது.
 
இன்றும், இடிக்கப்பட்ட பெர்லின் சுவரின் எச்சங்கள் நாட்டின் பிளவுண்ட வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் அங்குள்ளன.

இதில் மேலும் படிக்கவும் :