1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (15:42 IST)

எதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்!

இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில், ஓட்டுர் இல்லாமல் கார்களில் உங்களால் பயணிக்க முடியுமா? வெகு தூரத்தில் உள்ள உங்கள் அலுவலகத்தை ரயிலில் சில நிமிடங்களில் அடைய முடியுமா? விண்வெளிக்குச் சுற்றுலா பயணிகளைப் போல நம்மால் செல்ல முடியுமா?
 
ஓட்டுநர் இல்லாத கார்கள்:

ஓட்டுநர் இல்லாத வாகனங்களை உருவாக்குவதற்குப் பல நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் போது அமெரிக்க ராணுவத்திடம் இருந்து இந்த யோசனை தொடங்கியது. மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களிடம் சிக்கி, அமெரிக்க படையினர் இறப்பதையும், காயமடைவதையும் தடுக்கும் முயற்சியாக இது உருவாக்கப்பட்டது. ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்குவதற்கு, விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒரு போட்டி வைத்தது. அப்போது முதல் உபேர், ஜென்ரல் மோட்டர்ஸ், கூகுள் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்கி வருகின்றன. 
 
இதில் சிரமம் இல்லாமல் இல்லை. இந்த வருடத் தொடக்கத்தில், அமெரிக்காவில் உபேர் ஓட்டுநர் இல்லாத கார் மோதி 49 வயது பெண் பலியானார். இதனால், உபேர் இத்திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.
 
புதுப்பிக்கவல்ல சக்தி-பேட்டரி:
 
பேட்டரி வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதன் எரிபொருள் விலை மலைவாகவும், பராமரிப்பு குறைவாகவும் இருப்பதால் விற்பனை இன்னும் அதிகமாகும் என நிபுணர்கள் நம்புகின்றனர். வழக்கமான கார்களை விட பேட்டரி கார்கள் சற்று விலை அதிகமானதாக இருக்கலாம். பேட்டரிகளின் விலை குறைந்து வருவதால், கார்களின் விலையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
வழக்கான பெட்ரோல், டீசல் கார்களை விட பேட்டரி கார்கள் நீண்ட தூரம் போகாது என்ற அச்சத்தில் இருந்து வாகன ஓட்டிகள் வெளிவர வேண்டும். ஒரு முறை சார்ஜ் போட்டால் 300 மைல்கள் பயணிக்கக்கூடிய திறன் சில பேட்டரி கார்களுக்கு உள்ளது.
 
அதிக வேக ரயில்:
 
சுமார் 1,123 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு குழாயின் வழியாகச் சீறிப்பாயும் ஹைப்பர்லூப் என்னும் அதிநவீன போக்குவரத்து உலக போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 
 
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் யோசனையை முதல் முறையாக முன்வைத்தவர் உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் முன்னணி எலக்ட்ரானிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகிய இரண்டு மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பிலுள்ள எலான் மஸ்க் ஆவார்.
 
காந்த விசையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'மாக்லெவ்' ரயில் முறையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில், மாக்லெவ் போன்ற ரயில்கள் ஒரு குழாயினுள் செலுத்தப்பட்டு கிட்டதட்ட 1,123 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படும்.
 
விண்வெளி பயணம்:
 
'ஃபால்கோன் ஹெவி' என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட்டது. 
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த, தொழில்முனைவர் எலான் மஸ்க்குக்கு சொந்தமானதாகும். எலான் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு வண்ண காரே ராக்கெட்டில் பறந்து சென்றது.
 
சுற்றுலாப் பயணிகளை விண்ணிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ், 2022ல் செவ்வாய்க்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளது.