ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (23:33 IST)

இஸ்லாமியர்களின் மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்: அரபு ஊடகம்

mecca
சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது.
 
இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு நேரலையாக ஒலிபரப்பப்படுவது ஏற்கெனவே 10 மொழிகளில் நிகழ்ந்து வரும் சூழலில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இஸ்லாத்தின் மிதவாதம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான செய்தி இந்த உலகுக்கு அறிவிக்கப்படும் என்று மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரு புனித மசூதிகளுக்கான பொது தலைமையின் தலைவர் அப்துல் ரகுமான் அல் - சுதைஸ் தெரிவித்துள்ளார் என்று 'அராப் நியூஸ்' ஊடகம் தெரிவிக்கிறது.
 
மெக்கா 1979: சௌதி வரலாற்றை மாற்றிய மசூதி முற்றுகை
 
அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 9ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அரஃபா குன்றின் மீது முகமது நபிகள் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்திய நாளே அரஃபா நாளாக அனுசரிக்கப்படுகிறது.
 
மெக்காவில் உள்ள அல் நிம்ரா மசூதியில் நிகழ்த்தப்படும் அராஃபத் நாள் சொற்பொழிவு கடந்த ஐந்தாண்டுகளாக அரபு தவிர்த்த உலகின் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
 
இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்
 
ஏற்கெனவே அவ்வாறு ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பாரசீகம், ரஷ்ய மொழி, சீன மொழி, வங்க மொழி, துருக்கிய மொழி ஹவுசா ஆகிய பத்து மொழிகளில் மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்து வரும் சூழலில் இந்த ஆண்டு முதல் தமிழ், இந்தி, ஸ்பானிய மொழி மற்றும் ஆப்ரிக்க மொழியான ஸ்வாஹிலி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அல்-சுதைஸ் தெரிவித்துள்ளார்.
 
இந்த மொழிபெயர்ப்பு முதல் ஆண்டு 10 லட்சம் பேருக்கும், இரண்டாம் ஆண்டு 1 கோடியே 10 லட்சம் பேருக்கும், மூன்றாம் ஆண்டு 50 லட்சம் பேருக்கும், நான்காம் ஆண்டு 10 கோடி பேருக்கும் பயனாக இருந்தது என்று கூறும் அல் - சுதைஸ் இந்த ஆண்டு 20 கோடி பேருக்கு பலனளிக்கும் என்று தெரிவித்தார் என அராப் நியூஸ் ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.