ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2022 (09:47 IST)

இலங்கை நெருக்கடி: அரசாங்க செயல்பாடுகளை வெறுத்து பதவி விலக பிரதி சபாநாயகர் முடிவு!

(இன்றைய (ஏப்ரல் 16) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்)
 
"நாளை மறுநாள் வரை பிரதி சபாநாயகர் பதவி வகிப்பேன். அரசாங்கத்தின் செயற்பாடுகள் முற்றிலும் வெறுக்கத்தக்கதாக உள்ளன," என பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளதாக 'வீரகேசரி' இணையதளம் செய்தி வெளிட்டுள்ளது.
 
ருவன்வெல்ல பிரதேசத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
"அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை. நாட்டு மக்கள் முன்வைக்கும் கோரிக்கை மற்றும் அவர்களின் அபிலாசை குறித்து அரசாங்கம் பொருத்தமான தீர்மானங்களை இதுவரை முன்னெடுக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும் .
 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் வகித்த அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளை துறந்து நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றனர். சுதந்திர கட்சி வசம் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியும், பிரதி தவிசாளர் பதவியும் காணப்படுகிறது.
 
பிரதி சபாநாயகர் பதவி அரசாங்கத்தின் பதவியல்ல என்ற போதும் சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கமைய அப்பதவியில் இருந்த விலக முன்னெடுக்கும் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தேன். இருப்பினும் ஜனாதிபதி எனது பதவி விலகல் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் விசேட நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் வேளை பதவி விலகுவது நெருக்கடி நிலைமையினையும், நாடாளுமன்ற செயற்பாடுகளையும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்ற காரணத்தினால் எதிர்வரும் 30 ஆ தேதி வரை பிரதி சபாநாயகர் பதவி வகிக்க தீர்மானித்தேன்.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்னைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்த மொழியில் விளங்கப்படுத்துவது என்பது அறிய முடியாதுள்ளது.
 
பிரச்னைக்கு சிறந்த முறையில் தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என்ற காரணத்தினால் நாளை மறுநாள் வரை பிரதி சபாநாயகர் பதவி வகிப்பேன்.
 
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் கூடும் போது நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதி சபாநாயகர் தேர்வு நடைபெற வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.
 
காலிமுகத்திடல் போராட்டத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய
 
கொழும்பு காலி முகத்திடலில் தொடர்ந்து நடந்துவரும் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டதாக 'தமிழன்' செய்தி வெளிட்டுள்ளது.
 
தொடர்ந்து இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி பிணையில் விடுதலை
 
கொழும்பு காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டு, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிய காவல்துறை அதிகாரிக்கு, கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிணை அளித்துள்ளதாக , 'டெய்லி மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.
 
காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
குட்டிகல காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் அவர், காலி முகத்திடலில் நடந்துவரும் மக்கள் போராட்டத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அதிகாரியின் சார்பில் பல வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
 
இந்த வழக்கு ஏப்ரல் 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பிறகு, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.