1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (19:42 IST)

அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலை: தொடக்கம் முதல் முடிவு வரை

2006-ஆம் ஆண்டில் சென்னை மெரீனா கடற்கரையில் திறக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, புதன்கிழமையன்று இரவோடு இரவு அகற்றப்பட்டுள்ளது. இந்தச் சிலைக்கான முயற்சிகள் எப்போது தொடங்கின, எப்போது சிலை அமைக்கப்பட்டது என்ற கால வரிசை இது.


 

 
2001 ஜூலை 21: சிவாஜி கணேசன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் அவருக்கு மணி மண்டபமும் சிலையும் அமைக்க வேண்டுமென சிவாஜி ரசிகர்கள் மனு அளித்தனர்.
 
2002 செப்டம்பர் 26: சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைப்பதற்காக சென்னை சத்யா ஸ்டுடியோவுக்கு எதிரே, பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான 65 சென்ட் நிலத்தை ஒதுக்கி உத்தரவிட்டார் ஜெயலலிதா. ஆனால் சிலை குறித்து ஏதும் அறிவிக்கவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது.
 
2006 மே: தி.மு.க. அரசு பதவியேற்றதும், சிவாஜி கணேசனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என ஆளுனர் உரையிலேயே அறிவிக்கப்படுகிறது.
 
2006 ஜூலை: கடற்கரைச் சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்கக்கூடாது எனத் தடைவிதிக்கக் கோரி, பி.என். ஸ்ரீநிவாஸன் என்பவர் உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார் (ஸ்ரீநிவாஸனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நாகராஜ் இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டு வழக்கை நடத்துகிறார்). நீதிமன்றம் தடைவிதிக்க மறுக்கிறது.
 
2006 ஜூலை 21: ஸ்தபதி கே.ஜி. ரவியின் வடிவமைப்பில், சிவாஜி கணேசனின் சிலை உருவாக்கப்பட்டு அவரது நினைவு தினத்தன்று முதலமைச்சர் மு.கருணாநிதியால் திறக்கப்பட்டது.
 
2013 அக்டோபர் 24: சிலையை அகற்றக் கோரும் வழக்கில், போக்குவரத்துக் காவல் துறையின் கருத்தைக் கேட்கிறது நீதிமன்றம்.
 
2013 நவம்பர் 26: வாகன ஓட்டிகள் காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்குத் திரும்பும்போதும், ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து வலது புறம் கடற்கரை சாலைக்குத் திரும்பும்போதும், சிவாஜி சிலை போக்குவரத்து சிக்னலை மறைக்கிறது. எனவே அதனை அகற்றலாம் என்கிறது தமிழக அரசு.
 
2014 ஜனவரி 23: சிவாஜி கணேசன் சிலையை அகற்ற நீதிபதிகள் அக்னி ஹோத்ரி, சசிதரன் தலைமையிலான அமர்வு உத்தரவிடுகிறது.
 
2015 டிசம்பர் 17: சிவாஜி சிலையை வேறு இடத்திற்கு மாற்ற ஓராண்டு அவகாசம் அளிக்கிறது உயர்நீதிமன்றம்.
 
2017 ஜூலை 18: சிவாஜி சிலையை டிஜிபி அலுவலகத்திற்கு எதிரில் அமைக்கக் கோரி சிவாஜி சமூக நலப் பேரவையில் சார்பில் வழக்குத் தொடரப்படுகிறது. கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டுமென கூறிய நீதிமன்றம், சிலையை அகற்றத் தடையில்லை என்று கூறுகிறது.
 
2017 ஆகஸ்ட் 2: இரவோடு இரவாக சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு, அவரது மணி மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறது.