1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (13:47 IST)

கடல் டிராகன் இக்தியோசர்: 25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய வெப்ப ரத்த கடல் வேட்டைப் பிராணியின் புதைபடிவம் கண்டுபிடிப்பு

"ஒரு டைனோசரைக் கண்டுபிடித்துவிட்டதாகக் நினைத்து கவுன்டி நிர்வாகத்தை தொலைபேசியில் அழைத்தேன் " என்கிறார் பிரிட்டனின் லீசெஸ்டரில் உள்ள காப்புக் காட்டில் பணிபுரியும் ஜோ டேவிஸ்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் காப்புக் காட்டில் உள்ள ஒரு நீர்த்தேக்கப் பணிகளை மேற்கொண்டிருந்த போது சகதிக்கு அடியில் அசாதாரணமான ஒன்றை டேவிஸ் கண்டார்.
அது டைனோசர் அல்ல. அது இக்தியோசர் எனப்படும் பத்து மீட்டர் நீளமுள்ள கடல் வேட்டைப் பிராணியின் புதைபடிவ எச்சம்.

இது பிரிட்டனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வகைகளில் மிகப்பெரியது.

"சேற்றில் இருந்த கற்கள் அல்லது முகடுகள் போன்றவற்றை பார்த்தேன். அது சற்று இயற்கையானதாகத் தெரிந்தது. அதே நேரத்தில் சற்று வித்தியாசமாகவும் பட்டது." என்று டேவிஸ் பிபிசியிடம் கூறினார்.
"அப்போது கிட்டத்தட்ட தாடை எலும்பு போன்ற ஒன்றை நாங்கள் பார்த்தோம்." என்றார் அவர்.

டேவிஸ் தொலைபேசியில் அழைத்ததும், எங்களிடம் டைனோசர் துறை இல்லை. எனவே உங்களிடம் பேச வேறு யாரையாவது அழைக்க வேண்டும்" என்று கவுன்டி அதிகாரிகள் கூறிவிட்டனர்.

கிடைத்திருப்பது என்ன என்பதை கூர்ந்து நோக்குவதற்காக ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு அந்த இடத்துக்கு அழைத்து வரப்பட்டது.

இது ஓர் இக்தியோசர் என்று அவர்கள் முடிவு செய்தனர். இவ்வகை உயிரினங்கள் வெப்ப ரத்தம் கொண்டவை. காற்றை சுவாசிக்கும் கடல் வேட்டைப் பிராணிகள். 25 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. 25 முதல் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தவை.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டீன் லோமாக்ஸ் அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்குவதற்காக அழைத்து வரப்பட்டார். அவர் இந்த கண்டுபிடிப்பை "உண்மையிலே முன்எப்போதும் இல்லாதது" என்றார்.

அதன் அளவு மற்றும் முழுமையின் காரணமாக "பிரிட்டிஷ் பழங்கால ஆய்வு வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று" என்றும் தெரிவித்தார்.

"வழக்கமாக இக்தியோசர்கள் மற்றும் பிற கடல் ஊர்வனவற்றை டோர்செட் அல்லது யார்க்ஷயர் கடற்கரையில் உள்ள ஜுராசிக் கடற்கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டதாக நாம் நினைக்கிறோம். அவற்றில் பல பாறைகளின் அரிப்பினால் வெளிப்படும். இங்கே உள்நாட்டில் கிடைப்பது மிகவும் அசாதாரணமானது."

ரட்லேண்ட் பகுதி கடற்கரையிலிருந்து முப்பது மைல்களுக்கு அப்பால் உள்ளது. ஆனால் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக கடல் பரப்புகள் ஆழமற்ற கடல் நீரால் மூடப்பட்டிருந்தன.

2021 கோடையின் பிற்பகுதியில் ரட்லேண்ட் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மீண்டும் குறைக்கப்பட்டபோது, ​​எச்சங்களை அகழ்வாராய்ச்சி செய்ய ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று வந்தது. மண்டை ஓட்டை அகற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

இக்தியோசரின் தலையைச் சுற்றியிருந்த பெரிய களிமண் தொகுப்பு கவனமாக தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அது பிளாஸ்டர் பூச்சால் மூடப்பட்டு மரத் துண்டுகளின் மீது வைக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு டன் எடையுள்ள இந்த தொகுதி, சேற்றில் இருந்து உயர்த்தப்பட்டது.

அவ்வளவு எடையுள்ள, மிகவும் முக்கியமான அதே நேரத்தில் உடையும் தன்மை கொண்ட ஒன்றை மேலே தூக்குவது மிகவும் சவாலானது என்கிறார். என்று ரீடிங் பல்கலைக்கழகத்தில் பழங்காலவியல் பாதுகாவலர் நைகல் லார்கின்.

ரட்லேண்ட் நீர்த்தேக்கத்தை நிர்வகிக்கும் ஆங்லியா வாட்டர் நிறுவனம், இப்போது இக்தியோசரை அந்தப் பகுதியிலேயே காட்சிப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய நிதியுதவியை எதிர்பார்க்கிறது.

"ஒரு பெரிய கடல் ஊர்வன ஒன்றை மீட்டிருப்பதாகக் கூறியபோது பலரும் நம்பவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியாகும் வரை நிறைய பேர் அதை நம்ப மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்." என்றார் டேவிஸ்.