29ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் ஆகிறார் - தீரன் பேட்டி


Murugan| Last Modified ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (15:46 IST)
சென்னையில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்தித் தொடர்பாளர் தீரன் தெரிவித்துள்ளார்.

 

 
இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த தீரன், "29-ம் தேதி காலையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில், சசிகலா அவர்கள் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுகோள், தீர்மானமாக வைக்கப்படும். அதன்பிறகு பொதுக்குழு கூடும். செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதில் ஒப்புதல் அளிக்கப்படும். அன்றே, சசிகலா அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அது தெளிவாகத் தெரிகிறது" என்றார் தீரன்.


 

 
முதலமைச்சர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியில் அதற்கு ஆதரவிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த தீரன், பொதுக்குழு முடிவெடுத்தால் யாராக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்றார் அவர்.

`ஓ.பி.எஸ் வழிவிட்டுத்தான் தீர வேண்டும்'


 

 
"முதலமைச்சராக இருக்கும் ஓ.பி.எஸ். அவர்கள், ஜெயலலிதா அவர்கள் சில நேரங்களில் வழக்கு தொடர்பான சிக்கல்களைச் சந்தித்தபோது, முதலமைச்சர் பொறுப்பை வகித்து, ஜெயலலிதா அவர்கள் நான்கு மாதம், 6 மாதங்களில் திரும்ப வந்தபோது, அந்தப் பொறுப்பை மீண்டும் அவரிடமே திரும்ப அளித்து, கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறார். எனவே, பொதுக்குழு, செயற்குழு பெரும்பான்மையாக என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு ஓ.பி.எஸ். உள்பட, நாங்கள் உள்பட சசிகலா உள்பட அனைவரும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். சசிகலா அவர்கள் எனக்கு வேண்டாம் என ஒதுங்க முடியாது. பொதுக்குழுவின் விருப்பத்தை அவர் நிறைவேற்றித்தான் தர வேண்டும். அதேபோல், பொதுக்குழு பெரும்பான்மையாக விரும்புகிறது என்றால், முதலமைச்சராவதற்குக் கூட, ஓ.பி.எஸ். அவர்கள் வழிவிட்டுத்தான் தீர வேண்டும்" என்றார் தீரன்.

அரசுக்கும் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்தபோது ஏற்படுத்தியதுபோல இப்போதும், ஊடகங்கள், சமூக உடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றன என்றார்.


 
 
"ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும்போதே வாரிசு அரசியலை விரும்பாததால் குடும்பத்தாரைக் கொண்டுவரவில்லை. அவர் குடும்ப அரசியலை விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உறவினர்களை மதிக்கிறோம். தீபாவின் கருத்துக்களுக்கு அவரது அண்ணன் ஜெயகுமார் மகன் தீபக்கே பதில் சொல்லியிருக்கிறார். நாங்கள் சொல்லத் தேவையில்லை. கட்சியைக் குழப்பி மீன் பிடிக்கலாம் என நினைப்பவர்களின் வாயில் மண்தான் விழும். அந்த அளவு, கட்சியினர், உறுதியாக, உண்மையாக, விசுவமாக இருக்கிறார்கள்" என்றார் தீரன்.
 
மத்திய அரசின் பாரபட்சமான போக்கு :
 
மத்திய அரசு, பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஒரு விதமாகவும், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வேறு மாதிரியாகவும் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தீரன் குற்றம் சாட்டினார்.
 
முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அரசுக்குத் தகவல் தெரிவிக்காமல் சோதனை நடத்தியது மாநில இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் தீரன் கண்டனம் தெரிவித்தார்.
 
அதைவிட, துணை ராணுவத்தின் உதவியுடன் சோதனை நடத்தியது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்று தீரன் குறிப்பிட்டார்.
 
மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து, நாடாளுமன்றத்தில் அதிமுகவின் 50 எம்.பி.க்களின் ஆதரவை பல்வேறு பிரச்சனைகளில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையாகக் கூட இருக்கலாம் என்றார் தீரன்.

இதில் மேலும் படிக்கவும் :