1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (13:49 IST)

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு - சொந்தமாக அமைக்கத் திட்டம்

Russia
2024க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகிக்கொண்டு சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


"அதுவரை, தற்போதிருக்கும் அனைத்து கடமைகளையும் ரஷ்ய விண்வெளி முகமையான ராஸ்காஸ்மோஸ் ஆற்றும்" என்று அந்த அமைப்பின் புதிய தலைவரான யூரி பார்சோவ், தெரிவித்துள்ளார்.

1998ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இன்னும் பிற நாடுகளுடன் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இயங்கி வந்தன. ஆனால், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போரால் இந்த உறவுகள் மோசமடைந்துள்ளன. அத்துடன், மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக ரஷ்யாவும் அச்சுறுத்தியது.

5 உலக நாடுகளின் விண்வெளி முகமைகள் இணைந்து உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம், புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்துகொண்டு 1998 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

வரும் 2024ஆம் ஆண்டு வரை இந்த நிலையம் இயங்குவதற்கு அனுமதி உண்டு. எனினும், இதனை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு, மற்ற பங்குதாரர்களுடன் ஒப்புதலுடன் நீட்டிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில்தான், 2024ஆம் ஆண்டுக்குப்பின், இந்த திட்டத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளது குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான சந்திப்பின்போது, போரிசோவ் தெரிவித்துள்ளார். மேலும், "விண்வெளியில் ரஷ்யாவின் மையத்தை இந்த முறை தொடங்கிவிடுவோம் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்த அவர், "புதிய மையத்தை அமைப்பதுதான் இப்போது எங்கள் முகமையின் முதல் கடமை" என்றும் தெரிவித்துள்ளார் .

இதற்கு, "சிறப்பு" என்று புதினும் பதிலளித்தார்.

Space Station

ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து அமெரிக்காவின் விண்வெளி முகமைக்கு எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் இல்லை. எனவே, இந்த முடிவுக்கு பிறகான சர்வதேச விண்வெளி நிலையத்தின் எதிர்காலம் குறித்து தற்போது எந்த தகவலும் தெளிவாக தெரியவில்லை" என்று நாசாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

சர்வடேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பப் பெறுவது குறித்து சில காலமாகவே ரஷ்யர்கள் குரலெழுப்பி வருகின்றனர், ஆனால் அவை எவ்வளவு தீவிரமானவை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தங்களுக்கென்று சொந்தமாக ஒரு நிலையத்தை (ரஷ்யாவின் விண்வெளி சேவை நிலையம்) உருவாக்குவது பற்றி அவர்கள் பேசினர். ஆனால் அதற்கு ரஷ்ய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க நிதிவளம் தேவைப்படும்.

ISS இல் உள்ள ரஷ்ய கூறுகள் பழையதாகிவிட்டன, ஆனால் பொறியாளர்களின் பார்வை என்னவென்றால், 2030 வரை இந்த அவற்றால் வேலை செய்ய முடியும்.

ரஷ்யா வெளியேறினால், நிச்சயமாக அது ஒரு சிக்கல்தான். ஏனெனில், கூட்டாளிகள் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் வகையில்தான் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டது.

ISS இன் அமெரிக்க தரப்பு ஆற்றலை வழங்குகிறது; பூமியில் விழாமல் வைத்திருக்கும் உந்து விசையை ரஷ்ய தரப்பு வழங்குகிறது. அந்த உந்துவிசை திறன் திரும்பப் பெறப்பட்டால், அமெரிக்காவும் அதன் மற்ற கூட்டாளிகளான ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடாவும், வானத்தின் உயரத்தில் இந்த நிலையத்தை நிறுத்துவதற்கான பிற வழிகளை உருவாக்க வேண்டும். இது அமெரிக்க ரோபோக்களால் செய்ய முடிந்த ஒன்றுதான்.

ISS சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு, யுக்ரேனில் நடந்த போரால் ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாமல் இருந்தது.

இரு நாடுகளும் இந்த மாத தொடக்கத்தில் ரஷ்ய விண்வெளி வீரர்கள் அமெரிக்க விண்கலத்தில் நிலையத்திற்கு பயணிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தம் "ஐஎஸ்எஸ் திட்டத்தின் கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பை பெருக்கும்" என்று ரோஸ்கோஸ்மோஸ் அறிக்கை கூறியது.

இருப்பினும், ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மற்ற பகுதிகளை இந்த போர் பாதித்தது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரோவரை ஏவுவதற்கான ரோஸ்காஸ்மோஸ் உடனான தனது ஒத்துழைப்பை முடித்துக்கொண்டது, மேலும் பிரெஞ்சு கயானாவில் உள்ள ESA ஏவுதளத்தில் இருந்து ரஷ்யா அதன் சோயூஸ் விண்கலத்தை ஏவுவதையும் நிறுத்தியுள்ளது.

சோவியத் யூனியனும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன, மேலும் 1961 இல் விண்வெளியில் முதல் மனிதனை அனுப்புவது போன்ற சாதனைகள் ரஷ்யாவின் தேசிய பெருமைக்கு ஆதாரமாக உள்ளன.

ரஷ்ய அதிபர் புதினுடனான தனது சந்திப்பில், "இந்த புதிய ரஷ்ய விண்வெளி நிலையம், வழிகாட்டல் மற்றும் தரவுப் பரிமாற்றம் போன்ற, ரஷ்யாவின் நவீன வாழ்க்கைக்கு தேவையான, விண்வெளி ரீதியிலான சேவைகளை வழங்கும்" என்று தெரிவித்தார் ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் போரிசோவ்.