திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (13:21 IST)

பிரிட்டனில் 'குடும்பத்தின் துயரத்தை' வெளிக்காட்டிய ரோமானிய காலத்து எலும்புக் கூடுகள் - அகழாய்வில் வெளிவந்த வரலாறு

BBC
பிரிட்டனில் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருந்த மூன்று ரோமானிய காலத்து எலும்புக் கூடுகளின் டிஎன்ஏக்களை ஆராய்ந்ததில் அவை ஒரு 'குடும்பத் துயரத்தை' பறைச்சாற்றுவதாக இருந்தது.

தாய், அவரின் கணவரின் தாய் எனக் கருதப்படும் பெண், தாயின் பிறக்காத குழந்தை ஆகிய மூன்று பேரும் நோய்வாய்ப்பட்டு ஒரே சமயத்தில் இறந்திருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த எலும்புக்கூடுகள் பிரிட்டனின் பக்கிங்காம்ஷைர் கவுன்டியில் உள்ள செடிங்டனில் கண்டறியப்பட்டன. இந்த டிஎன்ஏக்கள் ஒரு பண்டைய மரபணுக்களை ஆராயும் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது.

மனித எலும்புகள் நிபுணர் ஷரோன் க்ளஃப், இந்த குடும்ப உறவு "முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு கண்டுபிடிப்பு" என்று தெரிவித்தார்.

"இந்த துயரம் அந்த குடும்பத்திற்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கலாம். உயிரிழந்த அந்த பெண்களுக்கு இடையிலான உறவு இறப்பிலும் தொடரட்டும் என அந்த சமூகம் விரும்பியிருக்கலாம்," என க்ளஃப் தெரிவிக்கிறார்.

இந்த புதைக்குழிகள் 2018ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக பிந்தைய ரோமானிய காலத்து எலும்புகூடுகளில் ஒரே ஒரு எலும்பு கூடு மட்டுமே கண்டறியப்படும். இது மூன்று உடல்களாக இருப்பது, வழக்கத்திற்கு மாறாக உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த எலும்புகள் புதைக்கப்பட்டது, கிறித்து பிறப்புக்கு பின் 255ஆம் ஆண்டிலிருந்து 433ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என ரேடியோ கார்பன் டேட்டிங்கில் தெரியவந்துள்ளது.

இந்த எலும்புகளை ஆராய்ந்ததில், ஓர் எலும்புக் கூட்டின் உடல் புதைக்கப்படும்போது அந்த நபருக்கு 25 வயதாகவும், இன்னொருவருக்கு 45 வயதுக்கு மேற்பட்டதாகவும் இருக்கலாம் என கள்ஃப் தெரிவித்தார். இவர் காட்ஸ்வேர்ல் ஆர்கியாலஜியில் பணிபுரிகிறார்.

குழந்தையின் வயது கருவாகி 32 வாரங்களிலுருந்து 36 வாரங்களாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. ஆனால் அது புதையுண்டபோது தாயின் வயிற்றில் இருந்ததா அல்லது பிறந்து இறந்ததா என்பது தெரியவில்லை.

எலும்புகள் ஆராய்ச்சிக்கு அனுப்பபட்ட பிறகுதான் அந்த இரு பெண்களுக்கும் குடும்ப உறவு இருந்தது தெரியவந்தது.

"தி ஃபிரான்ஸிஸ் க்ரிக் இன்ஸ்டிட்யூட்'-ன் ஆய்வு கடந்த ஆண்டில் அகழாய்வாளர்களின் விடை கிடைக்காத பல கேள்விகளுக்கு பதிலளித்து மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது," என க்ளஃப் தெரிவித்தார்.

டிஎன்ஏ-ல் உள்ள மைடோகாண்ட்ரியாவை ஆராய்ந்ததில் அந்த இளம் வயது பெண்ணின் குழந்தைதான் அது என்று கண்டறியப்பட்டது. மேலும் குறிப்பிடத்தக்க வகையில் அந்த குழந்தை வயதான பெண்ணுடன் தொடர்புடையவர் என்றும் ஆனால் அது தாய் - மகள் உறவுமுறை இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

அதேபோல இந்த திட்டத்தின் மூலம் அந்த குழந்தை ஓர் ஆண் குழந்தை என்பதையும் கண்டறிய முடிந்தது. இதை எலும்புகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் கண்டறிய முடியாது.

இந்த எலும்புகள் பக்கிங்காம்ஷைர் கவுன்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். பின்னாளில் தொழில்நுட்பம் வளர வளர அதை கொண்டு மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம்.

Updated By: Prasanth.K