1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (19:40 IST)

ஜியோ சேவை: தொலைத் தொடர்புத் துறையை கலங்க வைக்கும் ரிலையன்ஸ் அதிரடி

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஸ்மார்ட் செல்ஃபோன் உபயோகிப்பாளர்களுக்கான, உலகிலேயே விலை மலிவான 4ஜி தகவல் ஒருங்கிணைப்பு (டேட்டா நெட்வொர்க்) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
ஜியோ என்ற இந்த புதிய தகவல் ஒருங்கிணைப்பு சேவை, அலைபேசி வாடிக்கையாளர்களைக் கவரும் இந்திய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் போட்டியை அதிகரித்துள்ளது.
 
அதிவிரைவு 4ஜி இணையதள சேவை இந்தியாவிற்கு புதியதில்லை என்ற போதும் ஜியோ சேவை அதன் போட்டி நிறுவனங்களை காட்டிலும் விலை குறைவாகக் கிடைக்கிறது. இதன் மூலம், வீடியோ, ஆவணங்கள் உள்பட பல்வேறு சேவைகளை தற்போதுள்ளதைவிட, மிகக்குறைந்த கட்டணத்தில் பெற வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜியோ என்ற இந்த சேவை மூலம் அடுத்த ஆண்டு வரை, அழைப்புக்கள், வீடியோ மற்றும் பல செயலிகள் இலவசமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்குள் 90 சதவீத மக்களை இந்த திட்டம் சென்றடையும் என்று நம்புவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அதிகப்படியான போட்டி
 
இந்த திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தின் போது இந்த 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினார் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.இந்த 4 ஜி சேவை இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் அதிகப்படியான போட்டியை உருவாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அம்பானி இந்த திட்டத்தை அறிவித்த அடுத்த தருணத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல்லின் பங்கு மதிப்பு 1.3 பில்லியர் டாலரை இழந்து 8.5 சதவீதமாக குறைந்தது.
 
500 மில்லியன் டாலர் மதிப்பில் ஐடியா அலைபேசியின் சந்தை மதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது; ரிலையன்ஸின் பொருட்களும் 3 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளன.
 
நெருக்கடியில் போட்டியாளர்கள்
 
நாட்டில் தொலைத் தொடர்பு புரட்சியை ஏற்படுத்த விரும்பவுதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.ஜியோவின் இந்த திட்டம் மற்ற போட்டியாளர்களுக்கு பாதகமாகியுள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நாட்டின் தொலைத் தொடர்புத்துறையின் ஒட்டுமொத்த கடன் 50 பில்லியன் டாலராக இருக்கும் நேரத்தில், ரிலையன்ஸ் இந்தச் சந்தையில் நுழைகிறது என்று பிபிசி செய்தியாளர் ஷில்பா கண்ணன் கூறுகிறார்.
 
அதே நேரத்தில், ஜியோவின் இந்த கட்டணப் போரை ஆரோக்கியமற்றது என சிலர் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், இதில் வெற்றியாளர்கள், வாடிக்கையாளர்களே என்ற கருத்தும் நிலவுகிறது.