1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (18:46 IST)

ரஷீத்கான்: ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்று வரலாற்று சாதனை

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சட்டோகிராமில் (சிட்டகாங்) நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.


 
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 342 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரஹ்மத் ஷா சதமடித்தார்.
 
தொடர்ந்து பேட் செய்த வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியால் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
 
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 260 ரன்கள் எடுக்க, வங்கதேச அணிக்கு 398 ரன்கள் என்ற கடினமான இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


 
ஆனால், டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஓர் அணியை வெல்லவேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடிய ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை 173 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது.
 
இதன்மூலம் 224 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
 
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் எடுத்த ஆப்கானிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் ரஷீத்கான் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார்.
 
இதுவரை அயர்லாந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுடன் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான், மொத்தம் தான் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த போட்டியில் ரஷீத் கான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.