ரண்தம்பூரின் ராணி: 'மச்சிலி' புலி மரணம்


Abimukatheesh| Last Updated: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (21:09 IST)
இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் வயதான புலிகளில் ஒன்றான 'மச்சிலி' புலி நாட்டின் வட மாநிலமான ராஜஸ்தானில் உள்ள தேசிய பூங்காவில் இயற்கை காரணங்களால் இறந்துள்ளது.

 

 
மச்சிலி என்ற பெயருக்கு ''மீன்'' என்று பொருள் ஆகும். இந்த பெண் புலியின் உடலில் அமைந்துள்ள தனித்துவமான அடையாளங்ளால், இதற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.
 
மச்சிலியின் நேர்த்தியான தசை அழகின் காரணமாக, அது அதிகமாக புகை படமெடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மச்சிலி மிகவும் மூர்க்கமான குணம் கொண்டதாகும்.
 
நான்கு மீட்டர் நீளமுள்ள முதலையுடன் மச்சிலி சண்டையிட்டது அதன் புகழ்பெற்ற சண்டைகளில் ஒன்றாகும். இது வீடியோவில் படமெடுக்கப்பட்டதாகும்.
 
வனம் தொடர்பான ஆவணப்படங்களிலும், புத்தகங்களிலும் மச்சிலி குறித்த விவரக்குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், தபால் தலைகளிலும் மச்சிலியின் படம் இடம்பெற்றுள்ளது.
 
ரண்தம்பூர் தேசிய பூங்காவுக்கு மச்சிலியின் புகழால், வருடத்துக்கு பல மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 
வனத்தில் நீண்ட நாள் வாழ்ந்த 'சாதனை'
 
சுற்றுலாவாசிகளால், 'ரண்தம்பூரின் ராணி' என்றும் மச்சிலி அழைக்கப்பட்டு வந்தது.
 
புலிகளையும் பற்றியும் குறிப்பாக மச்சிலி குறித்தும் பல ஆவண படங்கள் எடுத்த இயக்குநர் நல்லமுத்து, மச்சிலி குறித்து கூறுகையில், ''மச்சிலி புலி, வனத்தில் 19 வருடங்களுக்கும் மேலாக உயிர்வாழ்ந்தது என்ற வகையில் அது ஒரு சாதனை படைத்த புலி என்றார். பொதுவாக புலிகள் வனத்தில் 16 அல்லது 17 ஆண்டுகள் வரையே உயிர் வாழும் என்றார் அவர்.
 
இந்த புலியின் நான்கு தலைமுறைப் புலிகளை வீடியோ படங்கள் மூலம் ஆவணப் படுத்தியதவரான நல்ல முத்து, இந்தப் பெண் புலி நான்கு பிரசவங்கள் மூலம் 12 குட்டிகளை ஈன்றது என்றார்.அதன் குட்டிகளில் ஒன்று புலியினமே அழிந்து போன சரிஸ்கா வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அதன் பிறகு புலிகளின் எண்ணிக்கை மீண்டும் துளிர்விட்டிருக்கிறது என்றார்.
 
'மனித குணங்கள் கொண்ட புலி'
 
கடந்த நான்கைந்து நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த இந்தப் புலி நேற்று காலை இறந்தது என்றார். பொதுவாக புலிகள் இயற்கையாக இறப்பதைப் பார்க்கமுடியாது , ஆனால் இந்தப் புலி கடைசி நாட்களில் காட்டுக்கும் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு வந்து இறந்தது என்கிறார்.
 
மச்சிலி மனிதர்களின் சில குணங்களை கொண்டது, தனித்தன்மை வாய்ந்த மச்சிலி, சுற்றுலாவாசிகளை பல ஆண்டுகளாக பரவசப்படுத்தி வந்துள்ளது'' என்று கூறிய நல்லமுத்து, அதைப் பார்க்க வருபவர்கள் புகைப்படம் எடுக்க முயன்றால் கூட , அது தன்னைத்தானே பல் வேறு கோணங்களில் அவர்கள் புகைப்படமெடுக்கும் வகையில் காட்டக்கூடிய ஒரு சிநேகத்தைக் காட்டும் புலி என்றார்.
 
அதன் இளமைக் காலத்தில் அது ஒரு நல்ல வேட்டையாடும் திறன் கொண்டது என்று கூறிய நல்லமுத்து, ''சில வருடங்களுக்கு முன்பாக ஒரு முதலையுடன் நடந்த போராட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக போராடி அதனை மச்சிலி கொன்றது. வீடியோ எடுக்கப்பட்ட இந்த போராட்ட காட்சி, மச்சிலியின் வன்மத்தையும், ஆக்ரோஷம் மற்றும் போராட்ட குணத்தை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது'' என்று தெரிவித்தார்.
 
 
 
 

இதில் மேலும் படிக்கவும் :