கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மலேசிய இளைஞரும் இந்திய வம்சாவளியினருமான நாகேந்திரனுக்கு நாளை சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது.
ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் நாகேந்திரன் 2009ஆம் ஆண்டில் கைதானார். அதைத்தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நாகேந்திரனுக்கு அறிவுசார் மனநல குறைபாடு இருப்பதாகவும், இதன் காரணமாக அவருக்கான தண்டனையை ரத்து செய்யும்படியும் அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
18 வயதுக்கும் கீழ் உள்ளவரின் மனநிலைதான் நாகேந்திரனுக்கும் உள்ளதா?
33 வயதான நாகேந்திரனுக்கு தற்போது 18 வயதுக்கும் கீழ் உள்ள ஒருவருக்கு இருக்கக்கூடிய மனநிலைதான் உள்ளது என்பது நாகேந்திரன் தரப்பின் வாதம். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள, தமக்கு நேர இருப்பதை அறியும் பக்குவம் இல்லாத ஒருவரை தூக்கிலிடுவது என்பதை ஏற்க இயலாது என்ற வாதத்தையும் அவரது தரப்பு முன்வைத்துள்ளது.
அனைத்துலக சட்டடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதுடன், சிங்கப்பூர் சிறைத்துறையிலும் கூட இத்தகைய மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றத் தேவையில்லை எனும் துறை சார்ந்த 'உள்கொள்கை' இருப்பதாகவும் நாகேந்திரனின் வழக்கறிஞரான சிங்கப்பூரைச் சேர்ந்த ரவி வாதிட்டார்.
ஆனால் அவர் குறிப்பிட்டதைப் போன்று எந்த 'உள்கொள்கை'யும் இல்லை என சிங்கப்பூர் சிறைத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நாகேந்திரன் அறிவுசார் மனநலக் குறைபாடு உள்ளவர் என்பதை ஏற்க இயலாது என்று குறிப்பிட்ட அரசுத் தரப்பு, மூன்று ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்த மூத்த சிறை அதிகாரி ஒருவரது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் நாகேந்திரன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது.
நாகேந்திரனுக்கு உள்ள குறைபாடு தொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுவதற்கு, குறிப்பாக 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களின் மனநிலைதான் உள்ளது என்ற வாதத்துக்கு, ஆதாரம் ஏதுமில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் வழக்கறிஞர் ரவி, மருத்துவ நிபுணத்துவம் உள்ளவரும் அல்ல என்றார் நீதிபதி.
இதையடுத்து மரண தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை தண்டனையை ஒத்தி வைப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இதனால் நாகேந்திரன் குடும்பத்தார் தற்காலிக நிம்மதி அடைந்த நிலையில், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இது குறித்து நாகேந்திரனின் வழக்கறிஞர் தமது வியப்பை வெளிப்படுத்தினார்.
எதற்காக இவ்வளவு அவசரமாக இப்படியொரு அறிவிப்பு வருகிறது? புதன்கிழமை அன்று நிறைவேற்றப்பட இருந்த தண்டனை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் எதற்காக மேல் முறையீட்டு நீதிமன்றம் வழக்கை விரைவாக முடிக்க நினைக்கிறது? என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
மலேசியா
பட மூலாதாரம்,EPA
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில்தான் இன்று சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் கூடியது.
வழக்கை விசாரிக்கும் அமர்வின் மூன்று நீதிபதிகளும் ஏராளமானோர் கூடியிருந்த விசாரணை அறைக்கு வந்த சில நொடிகளில் ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்.
நாகேந்திரனுக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளதாகவும், அவருக்கான தண்டனை நிறைவேற்றம் இப்போதைக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதி ஆண்ட்ரூ ஃபாங் Andrew Phang அறிவித்தார்.
"நாம் பொது அறிவு மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்," என்றார் அவர்.
இதையடுத்து விசாரணை வேறு ஒரு தேதி குறிப்பிடப்பட்ட பின்னர் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பானது சிங்கப்பூரில் வழக்கு விசாரணையைக் காண வந்த நாகேந்திரனின் தாயாருக்கு தற்காலிக நிம்மதியையும், மகன் பிழைத்துவிடுவார் என்ற நம்பிக்கையையும் தந்துள்ளதாக அவரது சகோதரி ஷர்மிளா கூறினார்.
இறுதிச்சடங்குடன் தொடர்புடைய ஏற்பாடுகள் நடந்தன: ஷர்மிளா
பிபிசி தமிழிடம் பேசிய ஷர்மிளா, தன் சகோதரரின் உயிருக்கு தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பது தம் தாயாருக்கு நிம்மதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் என்று நினைத்தபோதே மனம் அடித்துக்கொண்டது. இறுதிச்சடங்குக்காக உடலை ஒப்படைக்க வேண்டும் என்பதால் என் தம்பிக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தி உள்ளனர்.
"அதில் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு அப்பாற்பட்டு இப்படி ஒரு காரணத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
"இனி அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வழக்கறிஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்," என்றார் ஷர்மிளா.
இதற்கிடையே, நாகேந்திரன் தரப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவரது குடும்பத்தாருக்கு உதவி வரும் மலேசியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திரனை பிபிசி தமிழ் தொடர்புகொண்டு பேசியது.
அப்போது, மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவிக்க உள்ள விசாரணை தேதிக்காக காத்திருக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.
"தற்போது இரண்டு கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். முதலாவதாக, மனநலக் குறைபாடு உள்ள ஒருவரை தூக்கிலிடுவது தவறு என்பதால் நாகேந்திரனை விடுவிக்க வலியுறுத்துகிறோம்.
"மேலும், நாகேந்திரனுக்கு மீண்டும் மனநலம் சார்ந்த பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் அவரது மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோருகிறோம்.
"இவற்றைத் தவிர, அவருக்குச் சாதகமாக வேறு ஏதேனும் சட்ட வாய்ப்புகள் உள்ளன எனில், அவற்றையும் நீதிமன்றத்தில் வலியுறுத்துவோம்," என்றார் வழக்கறிஞர் சுரேந்திரன்.
நாகேந்திரன், அறிவாற்றல் குறைபாடு உள்ளவர் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனையை நிறுத்துமாறு மனித உரிமைக் குழுக்களும் மற்ற அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
2019இல் இவ்வழக்கின் விசாரணையின்போது தமது செயல்பாட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து நாகேந்திரன் நன்கு உணர்ந்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்வதாக மேல் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.