ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (19:53 IST)

பொன்னியின் செல்வன் - 2: சினிமா விமர்சனம்

அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி திரைக்கு வந்துள்ளது.
 
தமிழ் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் பலர் முயன்று முடியாமல் போன நாவலை, இந்திய அளவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் படமாக்கப் போகிறார் என்கிற அறிவிப்பே ‘பொன்னியின் செல்வன்’ வாசகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், பல்வேறு கதாபாத்திரங்கள் கொண்ட கதையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் பலமடங்காக்கியது.
 
அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பகுதி, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதோடு, முதல்பாகத்தின் வெற்றியே, இரண்டாம் பாகத்திற்கான பெரும் விளம்பரமாகவும் அமைந்தது.
 
தமிழ் சினிமாவில் 2023இல் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய படங்களில் ஒன்றான ‘பொன்னியின் செல்வன் – 2’ பற்றி முன்னணி ஊடகங்கள் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
 
முதல் படமே இரண்டாம் பகுதிக்கு விளம்பரம்
இலங்கை சென்ற வந்தியத் தேவனும், அருண்மொழி வர்மனும் களம் வீழ்த்தப்பட்டு கடல் விழுங்க ஊமைராணி எனப்படும் மந்தாகினி கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் பொன்னியின் செல்வன் முதல்பாகம் நிறைவடைந்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, பொன்னியின் செல்வன் எனும் அருண்மொழி வர்மன் இறந்த செய்தி கேட்ட ஆதித்த கரிகாலன் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருக்க, சோழ தேசமே சோகத்தில் மூழ்குகிறது.
 
இன்னொருபுறம் ஊமைராணியால் காப்பாற்றப்பட்ட அருண்மொழி வர்மனும், வந்தியத் தேவனும் பாண்டியர்களிடமிருந்து தப்பித்து மருத்துவ உதவிக்காக புத்த பிட்சுகளிடம் தஞ்சமடைகின்றனர். ஒரு கட்டத்தில் அருண்மொழி வர்மன் உயிருடன் இருக்கும் செய்தி தஞ்சையை அடைகிறது.
 
ஆனால் ஆதித்த கரிகாலனைக் கொல்லக் காத்திருக்கும் நந்தினி அவரை கடம்பூர் வரச் செய்கிறார். நந்தினி மற்றும் பாண்டியர்களால் கொல்லப்படும் அபாயத்தை அறிந்துகொண்டாலும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் அரண்மனைக்கு வருகிறார். அவருக்கு அங்கு என்ன நடந்தது?
 
சோழ தேசம் என்ன ஆனது? அருண்மொழி வர்மன் அரசனாக முடிசூட்டப்பட்டாரா இல்லையா? என்பதே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் மீதி கதை எனக் குறிப்பிட்டு ’தினமணி’ இதழ் தனது விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறது.
 
முன்பே தெரிவித்ததைப் போல் இந்தத் திரைப்படத்தின் பெரும் பலம் இதற்காக இணைந்த நடிகர்கள் பட்டாளம். ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, கார்த்திக், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத் குமார், விக்ரம் பிரபு, நாசர் இவர்களுடன் பின்னணி குரலில் நடிகர் கமல்ஹாசன் என இந்தப் பட்டாளம் படத்தை பலரிடம் கொண்டு செல்ல துணை புரிந்திருப்பதாக தினமணி பதிவு செய்திருக்கிறது.
 
கதைக்குள் வரும் வந்தியத் தேவனும் குந்தவைக்கும் இடையேயான காதல் காட்சிகளும், நந்தினியும், ஆதித்த கரிகாலனும் சந்தித்துக் கொள்ளும் காட்சியும் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது ரசிகர்களைக் கவர்ந்திருப்பதாகவும் தனது விமர்சனத்தில் தினமணி பதிவு செய்துள்ளது.
 
மேலும், இயக்குநர் மணிரத்னத்தின் காதல் காட்சிக்கான படமாக்கல் முறை அழகாக இவ்வித காட்சிகளில் ஒளிந்திருந்து சிறப்பாக்கியுள்ளது.
 
முக்கிய கதாபாத்திரங்களைத் தாங்கியுள்ள விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் 'ராவணன்' திரைப்படத்தை நினைவுபடுத்தினாலும் போட்டி போட்டுக் கொண்டு இருவரும் நடித்துள்ளனர்.
பழிவாங்கும் எண்ணத்தில் இருந்தாலும் ஆதித்த கரிகாலனைக் கொல்லத் தயங்கி இயலாமையில் அழும் இடங்களில் 'நந்தினி' ஆக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் 'ஸ்கோர்' செய்துள்ளார்.
 
த்ரிஷாவுக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு குறைவு
த்ரிஷா படம் முழுக்க வருகிறார், அழகாக இருக்கிறார். அதைக் கடந்து அவரின் முக்கியத்துவத்தை சொல்லும் விதமாக ஒரு இடமும் இல்லை என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
 
நாவலில் இல்லாத சில காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கும் என இயக்குநர் மணிரத்னம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்ப, சில காட்சிகளை தினமணி விமர்சனத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
 
நாவலில் வரும் மதுராந்தச் சோழன், சேந்தன் அமுதன் கதாபாத்திரங்கள் வரலாற்றில் மதுராந்தகச் சோழன் எனும் ஒரு கதாபாத்திரம்தான். அதிலும் நாவலின் இறுதியில் சேந்தன் அமுதன் முடிசூடுவதாக கதை அமையும். ஆனால் திரைப்படத்தில் மதுராந்தகச் சோழன் முடிசூடுவதாக மாற்றி இயற்றியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
 
ஆதித்த கரிகாலன் இறப்பும் நந்தினியின் முடிவும் திரைமொழியாக வெளிப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
 
கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள்
 
பொன்னியின் செல்வன் – 2 திரைப்படத்தில் சோழர்களின் வரலாற்று அடையாளங்களை சரியாகக் காட்டும் வகையிலான எந்த இடங்களும் இதில் இடம்பெறவில்லை எனவும் திரை விமர்சனத்தில் பதிவிட்டுள்ள தினமணி, சோழர்களின் கட்டுமானம், கலை, போர்த்திறன் என பல அம்சங்களும் திரைமொழியின் பிரமாண்டத்திற்காக வேறு ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளன.
 
தஞ்சையில் இப்படியொரு மாடமாளிகை அரண்மனைகளாக இருந்ததாக வரலாற்று எச்சங்களே இல்லை. எனினும் திரைமொழி அனுபவத்திற்கும், பொன்னியின்செல்வன் எனும் பெரும் கதையாக திரையில் வெளிப்பட்ட படைப்பாக்கத் திறனுக்கும் இத்திரைப்படத்தினை ரசிகர்கள் அனுபவிக்கலாம்.
 
இதுதான் சோழர்களின் வரலாறு என கருதிக் கொள்ளாமல் திரையில் அரச அதிகாரப் போட்டிக்கான கதையாகக் கொண்டு ரசிகர்கள் இதனைப் பார்த்து ரசிக்கலாம் எனவும் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
 
கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய நட்சத்திரங்கள்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ், ஐஸ்வர்யா ராயின் நடிப்பைப் பாராட்டி ‘பொன்னியின் செல்வன் -2’ விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறது.
 
கல்கியின் பொன்னியின் செல்வனைத் தழுவி மணிரத்னம் செய்த சாதனையை எந்தத் திரை படைப்பாளாராலும் சாதித்திருக்க முடியாது என்று சொன்னால் அது மிகையாகாது.
 
40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பலர் சாதிக்க முயன்றதை, அவர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருப்பதாகவும், ஒரு வரலாற்றுப் புனைவை சண்டை, போர் காட்சிகளுக்கும், நாடகத்தனமான காட்சிகளுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், வரலாற்றுத் திரைப்படமாக உருவாக்க முடியும் என்பதையும் அவர் நிரூபித்திருப்பதாகவும் தனது விமர்சனத்தில் பாராட்டியிருக்கிறது.
 
ஆதித்த கரிகாலன், நந்தினி இடையிலான காட்சிகளோடு தொடங்கும் திரைப்படம், பிறகு முதல் பாகம் முடிவுற்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது.
 
பிறகு, வந்தியத் தேவன், சோழ நாட்டை அழிக்க நினைக்கும் சதிக்குப் பின்னால் நந்தினி இருப்பதை கண்டறிகிறார். அருண்மொழி வர்மன் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்க, ஆதித்த கரிகாலன் நந்தினியை எதிர்கொள்ள கடம்பூர் வருகிறார். இப்படியாக தொடங்கி, படம் விறுவிறுப்பாகிறது என விமர்சனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், பொன்னியின் செல்வன் முதல் பாகம், ‘பாகுபலி’ அளவிற்கு பிரமாண்டமாக இல்லை என்கிற விமர்சனங்கள் முதல் பாகம் வெளியானபோது பரவலாக இருந்தது.
 
ஆனால், இரண்டாம் பாகத்தில் நிகழப் போகும் அரசியல் மாற்றங்களுக்கு, அந்த காட்சிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்பதை இரண்டாம் பாகத்திலேயே புரிந்து கொள்ள முடிகிறது என படத்தை விமர்சித்துள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஆதித்த கரிகாலனும், நந்தினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சி தமிழ் சினிமாவின் சிறப்பான காட்சியமைப்புகளில் ஒன்று எனவும், அடுத்தடுத்து நிகழப்போகும் நிகழ்வுகளுக்காக பார்வையாளர்களை தயார் படுத்தும் வகையில் ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் சிறந்த காட்சி எனவும் குறிப்பிட்டுள்ளது.
 
‘பொன்னியின் செல்வன் – 2’ திரைப்படம் ஒவ்வொரு நடிகருக்கும் தங்களை மெருகேற்றும் வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும், ஜெயம் ரவி திருப்திகரமாக நடித்திருப்பதாகவும் பதிவு செய்திருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். மேலும், நந்தினி கதாபாத்திரத்தில் வேறு எந்த ஒரு நடிகரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அவர் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பதாகவும் வெகுவாக பாராட்டியிருக்கிறது.
 
மணிரத்னத்தின் அழகியல் தனித்துவம்
இந்து தமிழ் திரை நாளிதழ், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை காதல் களத்துடன் ஈர்க்கும், மணிரத்னத்தின் புனைவு என விமர்சித்திருக்கிறது.
 
மேலும், பேரரசுக்குள் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகள், துரோகங்கள், சதிவலைகளையெல்லாவற்றையும் கடந்து படம் முடிந்து நமக்குள் தேங்கிவிடுகிறது ஆதித்த கரிகாலன் - நந்தியின் அந்தக் காதல். உண்மையில் காதல் காட்சிகளில் மணிரத்னத்தின் அழகியல் தனித்துவமானது.
 
பிரமாண்ட கடம்பூர் மாளிகையின் ஒளிவிளக்குகள் சூழ்ந்த அந்த அறையில் வாளுடன் நிற்கும் நந்தினியிடம் தன் உயிரை துச்சமென எண்ணி கரிகாலன் பேசும் காட்சியும், அதற்காக ரவிவர்மன் கேமரா தூரிகையால் தீட்டியிருக்கும் ரம்மியமான ஃப்ரேமும், பின்னணியில் ‘சின்னஞ் சிறு நிலவே’ பாடலின் கோரஸும் அற்புதமானவை என படத்தை புகழ்ந்திருக்கிறது.
 
மேலும், கடந்த பாகத்தில் இளவரசன் அருண்மொழி வர்மன் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இந்தப் பாகத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆதித்த கரிகாலன் - நந்தினியின் காதல் நிரம்பியிருக்கிறது.
 
புதினத்தில் இடம்பெற்றிருப்பதைப் போல ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதை ஒருவித சஸ்பென்ஸ் உடனே இயக்குநர் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள இந்து தமிழ் திசை, படத்தின் முதல் பாதி அதீத உரையாடல்களுடன் நீள, விக்ரம் - ஐஸ்வர்யா ராய், கார்த்தி - த்ரிஷாவுக்கான காதல் போர்ஷன், கார்த்தி - ஜெய்ராம் இடையிலான காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் சுவாரஸ்யமில்லாமல் நகர்கிறது.
 
அழுத்தமான காதலும், எமோஷனலும் இரண்டாம் பாதிக்கு பலம். நந்தியின் பின்புலக்கதை, சோழர்களை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சிகள், ஊமைராணியின் விவரிப்பு, வீரபாண்டியனுக்கும் (நாசர்) நந்தினிக்குமான உறவு உள்ளிட்டவை ஆர்வமூட்டினாலும், முழுமை இல்லாமல் அடுத்தடுத்து ‘ஜம்ப்’ஆகும் காட்சிகள், நினைவில் நிற்க போராடும் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் சிக்கல் போன்றவை படத்தின் குறைகள் என சுட்டிக்காட்டியிருக்கிறது.
 
நாவலில் கொல்லப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தில் உயிரோடு வருவதும், புனையப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சியும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்கான மணிரத்னத்தின் புனைவுகள்.
 
‘அக நக’, ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடல் தேவையான அளவில் தூவி, பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் தடம் பதிக்கிறார்.
 
ரவிவர்மன் தன்னுடைய 'லென்ஸ்' எனும் தூரிகையால் திரையில் வண்ணம் தீட்ட அதனை ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் சரிவிகித கலவையாக்கியிருக்கிறார்.
 
முதல் பாகத்திலிருந்து சிகை அலங்காரம், பிரமாண்ட செட் அமைப்புகள், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அப்படியே இதிலும் தொடர்கின்றன.
 
மொத்தத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆதித்த கரிகாலனுக்கும் – நந்தினிக்குமானது என இந்து தமிழ் திசையின் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
 
விக்ரம், ஐஸ்வர்யா ராயின் நடிப்பை வெகுவாக பாராட்டி ’பொன்னியின் செல்வன் – 2’ விமர்சனத்தை வெளியிட்டுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழ் இந்தப் படம் உணர்வுகள் சார்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.
 
இறுதிக் காட்சிக்கு முன்பு வரை, ஒட்டுமொத்த படத்தையும் ஆதித்த கரிகாலன், நந்தினி தேவி இடையிலான காதல் காட்சிகளே தாங்கிப் பிடிப்பதாக பதிவிட்டிருக்கும் அதே நேரத்தில், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சியால், இறுதிக்காட்சிகளின் வீரியம் குறைந்துவிடுவதாகவும் ‘பொன்னியின் செல்வன் – 2’ விமர்சனத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.