வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2015 (19:19 IST)

பாலிஸ்டரின் பசு பொம்மை எழுப்பிய சர்ச்சை

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஹீலியம் பலூன் ஒன்றிலிருந்து பாலிஸ்டெரீன் பசு பொம்மை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்த கலைக்கண்காட்சியை சோதனை செய்த காவல் துறையினர், அந்த கண்காட்சிக் கலைஞர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
 

 
ஜெய்ப்பூர் கலை உச்சிமாநாட்டில் ஒரு பலூனில் தொங்கவிடப்பட்ட பசு பொம்மை ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று வந்த புகார்களை அடுத்து அங்கு காவல் துறையினர் நுழைந்தனர்.
 
இதை அடுத்து காவல் துறையினர் இரண்டு கலைஞர்களை சில மணி நேரங்கள் தடுத்து வைத்திருந்த நிலையில், ஹிந்து ஆதரவாளர்கள் இந்த பசு பொம்மையை கீழே இறக்கினர்.
 
இந்த காவல் துறையினர் நடவடிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மையைக் காட்டுவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
இந்த சம்பவம் குறித்து தான் "வருத்தம் அடைவதாக" ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருந்தார்.
 
ஜெய்ப்பூர் மாநகர காவல் துறை ஆணையரும் இதற்கு மன்னிபு கோரியிருந்தார். சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையத் தலைமை அதிகாரி அகற்றப்பட்டிருக்கிறார் என்று கூறிய வசுந்தரா ராஜே, "நானே சம்பந்தப்பட்ட கலைஞரிடன் பேசிவிட்டேன்" என்று கூறினார்.
 

 
'பொவைன் டிவைன்' (புனிதப் பசு) என்று பெயரிடப்பட்ட இந்தப் பொம்மைப் பசுவை உருவாக்கிய கலைஞர் சித்தார்த்த கரார்வால் பிளாஸ்டிக் பைகளைத் தின்று அப்பைகள் குடலில் சிக்கிவிடும் நிலையில் இருக்கும் இந்தியப் பசுக்களின் பரிதாப நிலையைப் பிரதிபலிக்கவே இந்த படைப்பை தான் உருவாக்கியதாகக் கூறினார்.
 
ஆனால் இந்தப் பசு பொம்மை ஏதோ ஒரு பசு தூக்கிலிடப்பட்டிருப்பதைப் போலக் காட்டுவதாகத் தோன்றியதாகவும், இந்த பொம்மை உருவம் பசுவை நிந்தித்துவிட்டது என்றும் சிலர் புகார் கூறினர்.
 
ஆனால் சில ஹிந்து ஆர்வலர்கள் இந்த பொம்மையை கீழே இறக்கிவிட்டு, பின்னர் அதற்கு மாலை போட்டு ஆசிர்வாதித்தனர். காவல் துறையினர் பின்னர் அப்பொம்மையைக் கைப்பற்றினர்.
 
காவல் துறையினர், அவர்கள் நடவடிக்கைக்கு எதிராகப் பேசிய, சிந்தன் உபாத்யாய் மற்றும் அனிஷ் அஹ்லுவாலியா ஆகிய வேறு இரு கலைஞர்களையும் சிறிது நேரம் தடுத்து வைத்திருந்தனர். இதன் விளைவாக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் பரிமாறப்பட்டன.
 
இந்தக் கலை மாநாட்டின் இயக்குநர், பிரதாப் ஷர்மா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குக் கருத்து வெளியிட்டபோது, தாங்கள் இந்தப் படைப்பை மீண்டும் வைக்கப் போவதில்லை என்றார்.
 
"நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை எனவே இந்த பொம்மையை மீண்டும் வைக்கப் போவதில்லை" என்றார் அவர்.