வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (14:48 IST)

பிரான்ஸ் கருப்பின இசைத் தயாரிப்பாளர் மீது போலீஸ் தாக்குதல்: 3 அதிகாரிகள் இடைநீக்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மத்தியப் பகுதியில் கருப்பின இசைத் தயாரிப்பாளர் ஒருவரை போலீஸ் அதிகாரிகள் அடிப்பதாக காட்டும் விடியோ வெளியானதை அடுத்து 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம், பிரான்ஸ் பாதுகாப்புப் படைகளின் நடத்தை தொடர்பாக மேலும் ஒரு புதிய சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

கடந்த திங்கள்கிழமை நடந்த வேறொரு சம்பவத்தில், குடியேறிகளின் தற்காலிக முகாம்களை அகற்றியபோது தேவையற்ற பலப்பிரயோகத்தில் ஈடுபட்டதாக போலீஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

போலீஸ் அதிகாரிகளின் முகங்களைக் காட்டும் வகையில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முயற்சி செய்துவரும் நிலையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

இப்படிப்பட்ட விடியோக்களை ஒளிபரப்ப முடியாது என்றால் மேற்கண்ட இரண்டு சம்பவங்களை அம்பலப்படுத்தியிருக்கவே முடியாது என்று இந்த சட்ட வரைவை விமர்சிப்பவர்கள், தற்போது வாதிடுகின்றனர்.

கருப்பினத்தைச் சேர்ந்தவரான பிரான்சின் கால்பந்தாட்ட நட்சத்திரம் கைலியன் பாப்பே மற்றும், தேசிய கால்பந்தாட்ட அணி உறுப்பினர்கள், பிற தட கள வீரர்கள் இசைத் தயாரிப்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

"தாங்க முடியாத விடியோ, ஏற்கமுடியாத வன்முறை. வேண்டாம் இனவாதம்" என்று தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் கைலியன் பாப்பே. அத்துடன் ரத்தம் தோய்ந்த அந்த இசைத் தயாரிப்பாளர் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த இசைத் தயாரிப்பாளரின் பெயர் இதுவரை மைக்கேல் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

லூப்சைடர் (Loopsider) என்ற செய்தி இணைய தளம் வெளியிட்ட பாதுகாப்பு கேமிரா விடியோ பதிவில் அந்த கருப்பின இசைத் தயாரிப்பாளர் தமது ஸ்டுடியோவில் நுழைந்ததும் குறிப்பிட்ட மூன்று போலீஸ் அதிகாரிகளும் குத்துவதும், உதைப்பதும் தெரிகிறது. ஆரம்பத்தில் அந்த நபர் முகக் கவசம் அணியாததற்காக தடுத்து நிறுத்தப்பட்டதாக லூப்சைடர் குறிப்பிடுகிறது.

அந்த ஐந்து நிமிடத் தாக்குதலின் தாம் இனவாத வசைகளுக்கும் இலக்கானதாக மைக்கேல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மைக்கேல் கைது செய்யப்பட்டு, அவர் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும், கைது செய்யப்படுவதை எதிர்த்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பு தற்போது இந்த குற்றச்சாட்டுகளைக் கைவிட்டுவிட்டு, அந்த போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணையைத் தொடக்கியுள்ளது.

தம்மைத் தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கொடுப்பதற்காக மைக்கேல் வியாழக்கிழமை போலீஸ் தலைமையகத்துக்கு சென்றிருந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் "என்னைப் பாதுகாக்கவேண்டியவர்களே தாக்கினார்கள். இப்படி நடத்தப்படுவதற்கு உரிய எந்த தவறையும் நான் செய்யவில்லை. சட்டப்படி இவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.
"சகிக்க முடியாத இந்த செயலால் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக" பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்தார்.

இந்த போலீஸ் அதிகாரிகள் தங்கள் சீருடையை களங்கப்படுத்திவிட்டதாக தொலைக்காட்சியில் கூறிய பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜைரால்டு டர்மானாங் அவர்களைப் பதவி நீக்க அழுத்தம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்தார்.