1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (23:22 IST)

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: மருமகனை வெட்டிக் கொன்று விட்டு மாமனார் சரண்

கிருஷ்ணகிரியில், மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை, உறவினர்கள் சிலரது உதவியுடன் தமது மருமகனை சாலையில் வழிமறித்து படுகொலை செய்துள்ளார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெகன் என்பவர் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார் .இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
தங்களின் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்றதால், சரண்யாவின் பெற்றோர் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இன்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து வேலைக்கு செல்வதற்காக, டேம் ரோடு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஜெகனை வழிமறித்து கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், கொலையாளிகளை நெருங்கும்போது, சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் தப்பித்து ஓடி விட்டனர்.
 
இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்
 
தகவலறிந்த காவேரிப்பட்டணம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஜெகனின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்களும், ஜெகனின் உறவினர்களும் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
 
இதனால் கிருஷ்ணகிரி தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழரசி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சராஜ் குமார், தாகூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகனின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
 
அதன் அடிப்படையில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 
கொலை, குற்றம், தமிழ்நாடு
 
ஜெகனும் சரண்யாவும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார ரீதியாக ஜெகன் மிகவும் பின் தங்கியவர் எனவும், இதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஜெகனை கொலை செய்த மாமனார் சங்கர், கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஜெகனின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளனர்.
 
பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெகன் கொலை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி காட்சி ஒன்று, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஜெகனின் கால்களை ஒருவர் பிடித்துக் கொள்ள, 2 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் காட்சிகள் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.