வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (18:19 IST)

அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்'

(சதாம் ஹூசைன் பிறந்த தினமான இன்று, அவர் குறித்து பிபிசி முன்னர் வெளியிட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம்)
மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று.
 
வளைகுடா போரில் தான் வெற்றி பெற்றதாகக் கூறிய சதாம், பத்தாவது ஆண்டு வெற்றி விழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மசூதியின் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை.
 
இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
43 நாட்கள் தொடர்ந்த 'ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டாமை' - நினைவுப்படுத்தும் வகையில் 43 மீட்டர் உயரத்திற்கு மசூதியின் ஸ்தூபிகள் கட்டப்பட்டன.
 
சதாம் ஹுசைனின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய கான் கஃப்லின் கூற்றுப்படி, 'சதாம் ஹுசைன் கட்டிய மசூதியில், அவருடைய ரத்தத்தினால் எழுதப்பட்ட குரான் வைக்கப்பட்டுள்ளது. 605 பக்கங்களில் எழுதப்பட்ட அந்த நூல், பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சதாம் ஹுசைன் மொத்தம் 26 லிட்டர் ரத்தத்தை, மூன்று ஆண்டு காலத்தில் கொடுத்ததாக, அந்த மசூதியின் மெளல்வி (மதகுரு), சொல்கிறார்.
 
'சதாம் ஹுசைன், த பாலிடிக்ஸ் ஆஃப் ரிவெஞ்ச்' என்ற புத்தகத்தை எழுதிய சையத் அபூரிஷ், திக்ரித்தில் தனது குடும்பத்தினருடன் வசித்தபோது, செருப்பு வாங்கக்கூட பணமில்லாமல் இருந்தது தான், சதாம் ஹுசைன் பிற்காலத்தில், மாட-மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கட்டியதற்கு காரணம் என்று கூறுகிறார்.
 
பல அரண்மனைகளுக்கு சொந்தக்காரராக இருந்த சதாம் ஹுசைன், எந்த அரண்மனையில் தூங்கினாலும், சில மணி நேரங்கள் மட்டுமே உறங்குவார். நீச்சல் பயிற்சிக்காக அவர் தினமும் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிடுவார் என்பதும் சுவையான தகவல்.
 
இராக் போன்ற பாலைவனப் பிரதேசத்தில், செல்வம் மற்றும் பலத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட நீர், தற்போதும் அதே முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
 
அதனால்தான் சதாம் கட்டிய எல்லா அரண்மனைகளிலும், நீரூற்றுக்களும், நீச்சல் குளமும் இருப்பதை உறுதி செய்தார். சதாமுக்கு முதுகுத்தண்டு பிரச்சனை இருந்ததால், அவர் நடைப்பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் தொடர்ந்து செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
 
சதாம் ஹூசைனின் நீச்சல்குளங்கள் அனைத்தும் மிகவும் கவனமாக பராமரிக்கப்பட்டதுடன், அவற்றின் வெப்பநிலையும் பராமரிக்கப்பட்டது, மேலும் நீச்சல் குளங்களில் நச்சு கலக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து சோதிக்கப்பட்டு, கண்காணிக்கபட்டன.
 
சதாம் பற்றிய புத்தகம் எழுதிய அமாஜிய பர்ம் எழுதுகிறார், "சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு எதிரான பலருக்கு தேலியம் நச்சு கொண்டு கொல்லப்பட்டது, எனவே தனக்கும் யாராவது நச்சு கொடுக்கலாம் என்ற பயம் அவருக்கு எப்போதுமே இருந்தது.
 
சதாம் ஹுசைனின் பாக்தாத் மாளிகைக்கு வாரம் இருமுறை மீன், நண்டு, இறால், ஆடு, கோழி என பலவிதமான இறைச்சி வகைகள் அனுப்பப்பட்டன. அரண்மனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, அவற்றில் கதிர்வீச்சு அல்லது நச்சு கலந்திருக்கிறதா என்று அணு விஞ்ஞானிகளால், அவை பரிசோதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
''சதாமின் 20 அரண்மனைகளிலும், அவர் இல்லாத நேரத்திலும் பணியாட்கள் எப்போதும் இருப்பார்கள், அனைத்து பணியாளர்களுக்கும் மூன்று வேளை உணவு தயாரிக்கப்படும்''.
 
எப்போதும் மிகவும் நன்றாக தோற்றமளிக்கவேண்டும் என்று சதாம் விரும்புவார், அதுதான் அவரது பலவீனமும் கூட. இதனால் அவர் பாரம்பரியமான ஆலிவ் பச்சை வண்ண ராணுவ சீருடையை தவிர்த்துவிட்டு, கோட்-சூட் அணியத் தொடங்கினார்.
 
கோட்-சூட் அணிவது உலக அளவில் சதாம் ஹுசைனை முன்னிறுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் என்று ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் கூறிய ஆலோசனையில் அடிப்படையிலேயே அவர் சீருடையை மாற்றினார்.
 
சதாம் பொதுமக்களின் முன்பு எப்போதும் சிறப்பாகவே தோற்றமளிப்பார், படிப்பதற்கு கண்ணாடி தேவைப்பட்டாலும், அதை தவிர்த்து, ஒரு பக்கத்தில் பெரிய எழுத்துகளைக் கொண்ட இரண்டு அல்லது மூன்று வரிகள் மட்டுமே தாள்களை வைத்து படிப்பார். அதேபோல் அவர் நடக்கும்போது, சில அடிகள் மட்டுமே அவர் நடப்பதை படம் பிடிக்க அனுமதிப்பார்.
 
"ஒரு நாளில் பலமுறை சதாம் குட்டித் தூக்கம் போடுவார்" என்று கூறும் கான் கஃப்லின், கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது கூட எழுந்து சென்று அருகிலிருக்கும் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் வெளியே வருவார் என்று சொல்கிறார்.
 
தொலைக்காட்சி பார்ப்பதிலும் விருப்பம் கொண்ட சதாம், சிஎன்என், பிபிசி, அல்ஜஸீரா போன்ற நிறுவனங்களின் செய்திகளை விரும்பிப் பார்ப்பார்.
 
ஆங்கிலத் திரைப்படங்களில் உற்சாகமான மற்றும் த்ரில்லர் திரைப்படங்களின் விரும்பியான சதாமின் விருப்பமான ஆங்கிலத் திரைப்படம், த டே ஆஃப் ஜங்கிள்".
 
சதாமின் அமைச்சரவைக் கூட்டத்தில் ஓர் அமைச்சர் தனது கடிகாரத்தை பார்த்ததை கவனித்த சதாம், அப்படி என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியதுடன், தன்னை அவமானப்படுத்துவதாக கருதி, அந்த அமைச்சரை அதே அறையிலேயே இரண்டு நாட்கள் சிறை வைத்துவிட்டார். அவரை வெளியில் அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கான வாய்ப்புகளும் இருந்தாலும் கூட பெரிய மனது வைத்து சதாம், அவரை பதவியில் இருந்து மட்டும் நீக்கினார்.
 
 
சதாம் ஹுசைனின் எதிரிகளை விட சொந்த குடும்பத்தினரால்தான் அவர் அதிக நெருக்கடிகளை எதிர்கொண்டார். அவரது மனைவி சாஜிதாவுக்கு செய்த துரோகத்தால் சதாமின் நெருக்கடி அதிகமானது.
 
1988 ஆம் ஆண்டுவாக்கில் இராக் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் மனைவி சமீராவுடன் தொடர்பு ஏற்பட்டபோது சிக்கல்கள் அதிகமாகின.
 
சமீரா உயரமானவர், அழகானவர், பொன்னிற முடி கொண்ட அழகி, என்றாலும் அவர் திருமணமானவர் என்பதுதான் சிக்கலுக்கு காரணம்.
 
திருமணமான பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது சதாம் ஹுசைனுக்கு பிடிக்கும், இது அவர்களின் கணவர்களை கீழ்மைப்படுத்தும் அவருடைய பாணி என்று ஓர் அதிகாரி கூறியதாக ஷைத் அபுரிஷ் எழுதுயிருக்கிறார்.
 
சதாமின் இதுபோன்ற தனிப்பட்ட விருப்பங்களை அவரது பாதுகாவலர் காமேல் ஹனா ஜென்ஜென் செய்துக் கொடுத்தார். இருபது ஆண்டுகளாக சதாமின் பாதுகாவலராக இருந்த காமேல் ஹனா, சதாமின் சமையல்காரரின் மகன்.
 
அவருக்கு இருந்த பல வேலைகளில் ஒன்று, சதாமுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் நச்சு கலக்காமல் இருப்பது குறித்து சோதித்து உறுதி செய்வது.
 
 
மற்றவர்கள் தனது உணவில் நச்சு கலக்க வாய்ப்பு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும், தனது சமையற்காரர் அந்த விஷயத்தை செய்யமாட்டார் என்று சதாம் உறுதியாக நம்பினால் ஒரு முக்கியமான காரணமும் உண்டு.
 
சதாமுக்காக சமைக்கப்படும் உணவை முதலில் சாப்பிடுவது சமையற்காரரின் மகன் தானே!