1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (14:46 IST)

கொரோனா வைரஸ்: கிம் ஜாங் உன் பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்கிறாரா?

தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அண்டை நாடான வட கொரியா கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்ளும் என்பது ஒரு கேள்வியாகியிருக்கிறது.
 
வட கொரியா தொற்று நோய்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடாக கருதப்படுகிறது, மேலும் அதன் சுகாதார அமைப்பு அவற்றைச் சமாளிக்ககூடிய நிலையிலும் இல்லை. இதுவரை, கோவிட் -19 பாதிப்பு வட கொரியாவில் இல்லை என்று அந்நாடு கூறுகிறது - ஆனால் இது உண்மையாக இருக்க முடியுமா என்று பல வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மோசமான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரிய மக்கள், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பேரழிவை எதிர்கொள்ள நேரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
வழக்கத்திற்கு மாறாக வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வட கொரியா வலியுறுத்த துவங்கி இருக்கிறது. நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
வட கொரியாவின் அரசு ஊடகமும் அதிகாரிகளும், அந்நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
கொரோனா வைரஸை தடுக்க எடுக்கப்பட்ட "அதி தீவிர" நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்த தகவல்களை தினமும் அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடுகின்றனர். சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களின் புகைப்படங்களையும் வட கொரியா வெளியிட்டுள்ளது.
 
வட கொரியா நாட்டு தலைவர் கிம் ஜே ரியோங் முகமூடி அணிந்தபடியே "தொற்றுநோய்க்கு எதிரான" நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன ஊடகங்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.