வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:33 IST)

வடமாநில பெண் கூட்டு பாலியல் வல்லுறவு: காதலன் உள்பட மூவர் கைது!

இன்று 21.12.2021 செவ்வாய்க்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.
 
தமது காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில பெண் தொழிலாளியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
 
"வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வந்த பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருவரிடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் வைத்து நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் மயக்கம் அடையவே மூவரும் தப்பி ஓடியுள்ளனர்," என்கிறது தினத்தந்தி செய்தி.
 
வெப்படை காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வெப்படை போலீசார் அந்த 3 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
"மாநில அரசுகள் விரும்பினால் பள்ளிகளில் பகவத் கீதையை கற்பிக்கலாம்" - இந்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி
பள்ளி மாணவா்களுக்கு இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையைக் கற்பிப்பது தொடா்பாக மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி மக்களவையில் தெரிவித்ததாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
 
இது தொடா்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அன்னபூா்ணா தேவி கீழ்கண்டவாறு பதிலளித்தார்.
 
"கல்வியானது அரசமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பள்ளிகளில் மாணவா்களுக்கு பகவத் கீதையைக் கற்பிக்க விரும்பினால், அது தொடா்பாக மாநில அரசுகள் பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளலாம்."
 
"மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் 6, 7, 8 ஆகிய வகுப்புகளின் மாணவா்களுக்கு பகவத் கீதையின் கருத்துகள் ஏற்கெனவே கற்பிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசுகள் விரும்பினால், தங்கள் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை இணைத்துக் கொள்ளலாம்," என அவர் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சி 'டீலர்', சிவசேனா கட்சி 'புரோக்கர்' - அமித் ஷா
 
காங்கிரஸ் கட்சி டீலர், சிவசேனா புரோக்கர், தேசியவாத காங்கிரஸ் டிரான்ஸ்ஃபர் என இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா புனேவில் ஒரு கட்சி கூட்டத்தில் பேசியுள்ளதாக இந்து தமிழ்திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
 
புனேயில் நேற்று பாஜக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
 
அதில் ''2019-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர் மோதி முன்னிலையில் நான் இருந்தேன். அப்போது சிவசேனா கட்சி எங்களிடம் மாநிலத் தேர்தலை தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் சந்திப்போம், முதல்வராக அவரே மீண்டும் வரட்டும் எனக் கூறினார்கள். ஆனால், உத்தவ் தாக்கரே முதல்வராக வர வேண்டும் என்பதற்காக எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு அவர் முதல்வராகிவிட்டார்.
 
நான் சிவசேனா கட்சியுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையும் நடத்தினேன். அதை மீண்டும் இன்று வலியுறத்த விரும்புகிறேன். தேர்தலை தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் நடத்தலாம், முதல்வராக பாஜக சார்பில் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்கள் வரலாம் என்று சிவசேனா தெரிவித்தது.
 
ஆனால், அதிகாரம், ஆட்சிக்காக சிவசேனா கட்சி இந்துத்துவாவை சமரசம் செய்துள்ளது. இரு தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராடிவிட்டு அவர்களுடன் சிவசேனா கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் பொய் கூறுவதாக எங்களைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
நான் பொய் கூறுவதாகவே இருக்கட்டும். ஆனால், தேர்தல் பிரசாரத்தின் போது பதாதைகள் வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா. பதாகைகளில் உங்களின் புகைப்படத்தையும், மோதியின் புகைப்படத்தையும் பாருங்கள். உங்கள் புகைப்படம் மோடியின் புகைப்படத்தில் நான்கில் ஒரு பங்குதான் இருக்கும். ஆனால், மோதியின் பெயரை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள்
 
மக்களுக்கு நேரடியாக மானியத்தை அளிக்கும் டிபிடி திட்டத்தின்படி, மாநிலத்தில் ஆளும் மகாவிகாஸ் அகாதி அரசில் காங்கிரஸ் கட்சி (D) டீலர், சிவசேனா (B) புரோக்கர், (T) தேசியவாத காங்கிரஸ் டிரான்ஸ்பர்," என அமிஷ் ஷா பேசியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவில் கடந்த 2014-19 வரை பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகத் தேர்தலைச் சந்தித்தபின், முதல்வர் பதவியில் குழப்பம் ஏற்பட்டது. சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கிடையாது என பாஜக மறுத்தது. இதனால் சிவசேனா கட்சி, மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது.