1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 19 மே 2023 (10:59 IST)

பிபிசி தமிழுக்கு நளினி பேட்டி: கணவர் முருகனுடன் இலங்கை செல்ல திட்டமா? - முழு விவரம் இங்கே

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலையான நளினி, தனி முகாமில் உள்ள தமது கணவரும் இலங்கையை சேர்ந்தவருமான முருகனுடன் அவரது தாய்நாட்டுக்கு செல்வாரா என்பது குறித்து பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
 
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த நளினி உள்பட ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஆறு பேர் உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் வந்திருந்த நளினி தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் மத்தியில் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்ததுடன், தமது செல்பேசியில் செல்பியும் எடுத்துக் கொண்டார்.
 
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி காலத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக மே 18ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிகழ்வை தனுஷ்கோடியில் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
 
இந்த நிகழ்வில் தீப சுடர் ஏற்றி போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க நளினி முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
ஆனால், போலீஸார் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் நளினி நிகழ்ச்சியில் பங்கேற்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் தயாராக இருந்தனர்.
இந்த நிலையில், தனுஷ்கோடி வந்த நளினி, நினைவேந்தல் பகுதிக்கு செல்லாமல், கடற்கரையில் இறங்கி அங்கு சில நிமிடங்கள் விளையாடி விட்டுச் சென்று விட்டார்.
 
இதற்கிடையே, தனுஷ்கோடி அரிச்சல் முனையில் பிபிசி தமிழ் செய்தியாளரிடம் நளினி முருகன் பேசினார். அதன் விவரம்:
 
கேள்வி: தனுஷ்கோடிக்கு திடீரென வந்த காரணம்?
 
பதில்: நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவள். எனக்கு சிறுவயதில் இருந்தே ராமேஸ்வரம் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களை பார்க்க வேண்டும் என ஆசை.
 
ஆனால் என் வாழ்க்கையில் பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் என்னால் தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களை பார்க்க முடியாமல் போனது. தற்போது தமிழகத்தில் உள்ள முக்கிய தலங்களை பார்வையிட வந்துள்ளேன்.
 
கேள்வி: தமிழர் கட்சி சார்பில் நடத்தப்படும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீங்கள் தனுஷ்கோடி வந்ததாக சொல்லப்படுவது உண்மையா?
 
பதில்: நான் தனுஷ்கோடி கடலில் அழகை ரசிப்பதற்காக மட்டுமே வந்தேன். நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நான் அதில் கலந்து கொள்வதற்காக தனுஷ்கோடி வரவில்லை. நான் எதேச்சையாக தனுஷ்கோடி வந்தேன். இங்கு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிந்தேன். ஆனால் நினைவேந்தல் நடைபெறும் பக்கம் கூட நான் செல்லவில்லை.
 
கேள்வி: தமிழர் கட்சி சார்பில் நடத்தப்படும் நினைவேந்தல் அழைப்பிதழில் உங்களுடைய புகைப்படம் போட்டு உங்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுவதாக குறிப்பிடபட்டுள்ளதே?
 
பதில்: நான் சிறையில் இருக்கும் போது தமிழ் தேசியவாதிகள் நான் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் உள்ளவர்கள் விடுதலை ஆக வேண்டும் என போராடினார்கள். அதில் தமிழர் கட்சியும் ஒன்று என்பதால் எனது அனுமதி இல்லாமல் என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி அழைப்பிதழ் தயார் செய்துள்ளனர். இதை பெரிதுபடுத்த வேண்டாம் நான் தனுஷ்கோடியை சுற்றிப் பார்க்க மட்டுமே வந்தேன்.
கேள்வி: நீங்கள் சிறையில் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தீர்களா, சிறையை விட்டு வெளியே வந்த பின் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
 
பதில்: யாருமே சிறையில் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதுபோல்தான் நானும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்குள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்தேன். சிறைவாசம் முடிந்து வெளியே வந்தாலும் என் கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. சிறையில் இருந்ததைப் போல் வெளியில் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்கிறேன். எனது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதுவரை எனக்கு சிறைவாசம் தான்.
 
கேள்வி: சிறப்பு முகாமில் இருக்கும் உங்கள் கணவரை நீங்கள் சந்தித்தீர்களா? அவர் தற்போது என்ன மனநிலையில் உள்ளார்?
 
பதில்: வாரம் இருமுறை எனது கணவரை நான் சிறப்பு முகாமில் சந்தித்து பேசி வருகிறேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவரை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரை சந்திக்கும் போதெல்லாம் நாம் எப்போது மகளுடன் இணைந்து குடும்பமாக வாழ போகிறோம் என்ற ஒரே கேள்வி தான் கேட்கிறார்.
 
தற்போது அவர் இறுக்கமான மன நிலையில் இருப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சிறைவாசம் முடிந்தபோதும் அவரை ஏன் தனி முகாமில் வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. அவரை விடுவித்தால் எங்கள் மகளுடன் ஒரே குடும்பமாக சேர்ந்து வாழ்வோம். அதற்கு அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
 
கேள்வி: உங்கள் கணவருடன் இலங்கை செல்ல திட்டம் உள்ளதா?
 
பதில்: அது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. முதலில் என் கணவர் சிறப்பு முகாமில் இருந்து வெளியே வந்து என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். எங்களது குடும்ப வாழ்க்கையை இனிமேலாவது சேர்ந்து வாழ அரசு வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறேன். சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் என்னால் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.
 
நளினி தனுஷ்கோடி வந்து கடற்கரையில் இறங்கி விளையாடிய போதும் அவர் யாரிடம் எல்லாம் பேசினார், என்ன பேசினார், எந்த உணவகத்தில் சாப்பிட்டார் போன்ற செயல்பாடுகளை தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு போலீசார் உன்னிப்பாக கண்காணித்தனர்.