மழை வர வைப்பதற்காக ஆறு சிறுமிகளை நிர்வாணமாக்கி, அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியில் நடந்த இந்த நிகழ்வின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தவளை ஒன்று கட்டப்பட்டுள்ள மரக்கட்டை ஒன்றை அந்த ஆறு சிறுமிகளும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு செல்வதை அந்தக் காணொளிகள் காட்டுகின்றன.
சிறுமிகளை நிர்வாணமாக்கி இவ்வாறு செய்யப்படும் சடங்குகள் மழைக் கடவுளின் மனதை குளிர்வித்து அந்த பகுதிக்கு மழையை உண்டாக்கும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.
இந்த சம்பவம் நிகழ்ந்த கிராமம் அமைந்துள்ள தாமோ மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து இது குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு குழந்தைகள் பாதுகாப்புக்கான இந்தியாவின் தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து முறைப்படி எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய பிரதேச காவல்துறை சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலமாக நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
சடங்கில் நிர்வாணமாக நடக்குமாறு இந்தச் சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாமோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிஆர் தெனீவார் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகக் காணொளியில் வரும் காட்சிகளில் சுமார் ஐந்து வயது இருக்கக்கூடிய சிறுமிகள் ஊர்வலத்தின் முன்னால் செல்கிறார்கள்.
அவர்களின் பின்னால் ஒரு பெண்களின் குழு பாட்டு பாடிக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நிற்கும் இந்த சிறுமிகளின் ஊர்வலம் அந்தந்த வீடுகளில் உணவு தானியங்களை பெறுகிறார்கள்.
இவர்கள் சேகரித்த உணவு தானியம் உள்ளூர் கோயிலிலுள்ள பொது சமையல் கூடத்திற்கு பின்னர் நன்கொடையாக வழங்கப்பட்டது.
"இந்தச் சடங்கு எங்களுக்கு மழைப் பொழிவை உண்டாகும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
இக்குழந்தைகள் இந்தச் சடங்கில் பங்கேற்பதற்கு அவர்களின் பெற்றோர் அனுமதி அளித்தனர் என்றும் அவர்களும் இந்த ஊர்வலத்தில் பங்கெடுத்தனர் என்றும் தாமோ மாவட்ட ஆட்சியர் எஸ். கிருஷ்ண சைதன்யா தெரிவிக்கிறார்.
இத்தகைய சூழ்நிலைகளில் மூட நம்பிக்கைகள் பயனற்றவை என்றும், இச்சடங்குகள் அவர்கள் விரும்பும் எதையும் பெற்றுத் தராது என்றும் உள்ளூர்வாசிகளுக்கு புரிய வைக்க மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் வேளாண்மைக்காக மழைப் பொழிவையே நம்பியுள்ளன.
போதிய அளவு மழை பெய்யாத பகுதிகளில் உள்ளூர் வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இவ்வாறு சடங்குகள் செய்யப்படுகின்றன.
இந்து மத வழக்கப்படி யாகம் வளர்த்தல், தவளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, குரங்குகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, மழைக் கடவுளை போற்றிக் கொண்டே பாட்டு பாடி ஊர்வலமாகச் செல்வது உள்ளிட்டவை இத்தகைய சில சடங்குகளில் அடக்கம்.
இதுபோன்ற சடங்குகள் மக்கள் படும் இன்னல்களைத் திசை திருப்பவே உதவுகின்றன என்று இதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் யாரிடமும் உதவி கேட்க முடியாத ஏதிலிகள் வேறு வழியில்லாமல் செய்யும் செயல்களாகவே இந்தச் சடங்குகளைப் பார்க்க வேண்டும் என்று பண்பாட்டு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.