1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (13:32 IST)

எகிப்தியர்களுக்கு முன்பே 'மம்மி' செய்த சின்சோர்ரோ கலாசாரத்தினர்!!

எகிப்தியர்களின் மம்மிகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கலாம். ஆனால், அவைதான் பழைமையானவை என்று கூறமுடியாது.

 
சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் வாழ்ந்த சின்சோர்ரோ மக்கள்தான் முதன்முதலாக, 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடலை மம்மியாக செய்துள்ளனர். பூமியின் வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில், எகிப்தியர்களின் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிகளை விடப் பழைமையான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தியர்கள் உயிரிழந்தவர்களை மம்மியாக மாற்றும் பிரபலமான கலாசாரத்தைக் கொண்டிருந்தாலும், அதைச் செய்த முதல் மக்கள் அவர்கள் இல்லை.

"சிலியின் வடக்குப் பகுதியிலும் பெருவின் தெற்குப் பகுதியிலும் குடியேறிய முதல் மக்கள், சின்சோர்ரோ கலாசார மக்கள்தான். அவர்கள் அட்டகாமா பாலைவனத்தின் முன்னோடிகள்," என்று தாராபக்கா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் பெர்னார்டோ அர்ரியாசா கூறினார். மேலும் அறியப்பட்ட கலாசாரங்களில், இறந்தவர்களை மம்மியாக மாற்றும் பழக்கம் கொண்ட உலகின் முதல் கலாசாரம் சின்சோர்ரோ என்றும், கி.மு.5000 வாக்கில் இது தொடங்கியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அட்டகாமாவின் பசிபிக் கடற்கரையில் சுமார் கி.மு. 5450 முதல் கி.மு. 890 வரை கடல் வேட்டைக்காரர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும் நூற்றுக்கணக்கில் வாழ்ந்த இவர்களின் எச்சங்கள், அரிகா மற்றும் பரினாகோட்டா பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில், இந்தக் கல்லறைகள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் அங்குக் கிடைத்த அபரிமிதமான தொல்பொருள்களுக்காக இடம்பெற்றன.

அவை பண்டைய கலாசாரத்தின் விரிவான சவக்கிடங்கு மற்றும் இறுதிச் சடங்குகளை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, அவை அந்த கலாசாரத்தின் சமூக, ஆன்மிக கட்டமைப்புகள் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன. சான்றாக, மம்மிஃபிகேஷன்(இறந்தவர்களின் உடலை மம்மியாக பதப்படுத்துவது) என்பது, எகிப்தியர்களிடம் இருந்ததைப் போல சமூகத்தின் உயர் வகுப்பினருக்கென ஒதுக்கப்படவில்லை. அனைவருக்குமான சடங்காக இருந்துள்ளது.

"சின்சோர்ரோ மக்கள், இந்தப் பிராந்தியத்தின் முதல் இறுதிச் சடங்கு நடத்துபவர்களைக் கொண்டிருந்தார்கள். இன்று சின்சோர்ரோ என்றறியப்படும் உடல்கள், ஹிஸ்பானிய காலத்திற்கும் முந்தையவை. அவை பண்டைய மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் கலை வெளிப்பாடுகள்," என்று அர்ரியாசா விளக்கினார்.

யுனெஸ்கோவின் அங்கீகாரம் சமீபத்தில் வந்திருந்தாலும், அரிகாவில் வசிப்பவர்கள் இந்தத் தனித்துவமான தொல்பொருள் எச்சங்களைப் பற்றி நீண்ட காலமாக அறிந்துள்ளார்கள். உடல்கள் மேற்பரப்புக்கு மிக அருகில் புதைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். எச்சங்கள் நகரத்தினுடைய அடித்தளத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

சான்றாக, அரிகாவில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் ஜானி வாஸ்குவேஸ், தொழிலாளர்கள் முதன்முதலில் தனது பகுதியில் கழிவுநீர் குழாய்களைத் தோண்டியபோது, அவர்கள் "மம்மிகளின் அடுக்குகளை" கண்டுபிடித்ததை நினைவு கூர்ந்தார். 2004ஆம் ஆண்டில், தொழிலாளர்கள் ஒரு ஹோட்டல் கட்டுவதற்காகத் தோண்டியபோது, பூமியில் ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்திலேயே எலும்புகள் கிடைத்தது. ஹோட்டல் அமைப்பதற்குப் பதிலாக அந்த இடத்தை அருங்காட்சியமாக மாற்றினர்.

கைக் குழந்தைகள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தாராபக்கா பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான விவியன் ஸ்டாண்டென், "இங்குள்ள மண்ணில் இயற்கையாக உருவாகும் ஆர்சனிக் நிறைய உள்ளது. இது மக்கள்தொகையில் அதிக இறப்பு விகிதத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான கருச் சிதைவுகளுக்கும் காரணமாகியுள்ளது.

பாரம்பரிய நோக்கங்களுக்காக சின்சோர்ரோ மக்கள் சடலங்களில் மாங்கனீசு பூசியுள்ளனர். ஆனால், மாங்கனீசு நச்சுத்தன்மையுடையது என்பதால், அவர்களின் கவனக்குறைவு ஆரோக்கியத்தைப் பாதித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஒரு பெரிய பழங்கால இடுகாட்டின் மீது வாழ்வது வித்தியாசமாக, அசௌகர்யமானதாகத் தோன்றலாம். ஆனால், அரிகாவில் வசிக்கும் மெரினா எஸ்கிரோஸ் அப்படியில்லை என்கிறார். "எனக்கு சிறிதும் பயமில்லை. ஆம், நான் இங்கே என் ஊரில் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறேன். உயிரிழந்தவர்களின் சடலங்கள் இங்கே இருப்பதைப் பற்றி நான் அதிகம் நினைப்பதில்லை," என்கிறார்.

அதுகுறித்துக் கவலைப்படுவதற்கு மாறாக, உள்ளூர் மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உயிரிழந்த சடலங்களைத் தங்கள் மூதாதையர்களாகவும் தங்களை அவர்களின் பராமரிப்பாளர்களாகவும் பார்க்கிறார்கள்.

"நாங்கள் சின்சோர்ரோ மக்களின் நீட்சி என்று நான் உணர்கிறேன்," என்று மற்றொரு அரிகாவாசியான ஆல்ஃபிரெடோ குரேரோ கூறினார். மேலும், "கடந்த 10 ஆண்டுகளில், இந்த இடத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பதை நான் உணர்ந்தேன். இதை என் குடும்பத்தினரிடமும் கூறினேன்.

நான் எப்போதும் இங்கே இருப்பேன், ஆகையால் எப்போது அவர்களைச் சந்திப்பேன்," என்றார். உள்ளூரைச் சேர்ந்த முக்குளிக்கும் மீனவரான ஜார்ஜ் ஆர்டில்ஸ் இதை ஒப்புக்கொண்டார். "அவர்களும் எங்களைப் போலவே மீனவர்கள். அவர்களும் இந்த இடத்தில்தான் வாழ்ந்தார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் இங்கு குடியேறினோம். பிறகு, மீனவர்களின் சமூகமாக, நாங்கள் அவர்களை எங்கள் மூதாதைகளாக ஏற்றுக்கொண்டோம். அதனால்தான், அவர்களின் வாரிசுகளாக, அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களைத் தற்போதைய சமூகத்திற்காக ஒரு பெரிய பாரம்பரியமாகப் பாதுகாக்க விரும்புகிறோம். இந்த நேரத்தில் நாங்கள் சமகால சின்சோர்ரோக்கள்," என்று அவர் கூறினார்.