1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (16:00 IST)

நியூசிலாந்தின் அமைதியை குலைத்துள்ள மசூதி தாக்குதல்

அல் நூர் மசூதியின் வெளிப்புற சுவற்றையும்,, தங்கக் கூரையையும், அருகில் உள்ள பூங்காவில் இருந்து பார்க்கிறார் நசீர் உதின்.
மசூதியை சுற்றி காவல்துறையினர் பணியில் இருப்பதால், அவ்வளவு தூரம்தான் நசீரால் போக முடிந்தது. அக்கட்டடத்தை தண்ணீர் நிரம்பிய கண்களோடு பார்க்கிறார்.
 
"நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம்" என்று க்ரைஸ்ட்சர்ச் ஹேக்லி பூங்காவில் நின்று கொண்டிருந்த நசீர் கூறுகிறார்.
 
37 வயதாகும் இவர், வங்க தேசத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள பிக்சர்ஸ்க்யூ என்ற நகரத்தில் வசித்து வருகிறார். தனக்கு வேலையில்லை என்றால், அல் நூர் மசூதியில் ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் இருப்பார் நசீர்.
 
நசீர் உதின்
 
கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள மிகப் பெரிய மசூதியின் அமைதி, துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு நிலைகுலைந்து போயுள்ளது.
 
இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அல் நூர் மசூதி எங்களுக்கு மிகவும் நெருக்கமானது என்கிறார் நியூசிலாந்தின் இஸ்லாமிய பெண்கள் கவுன்சிலின் அன்ஜும் ரஹ்மான். "இது கட்டப்பட்டபோது, உலகின் தென் கோடியில் உள்ள மசூதியாக இது இருந்தது."
 
அல் நூர் மசூதி, உலகின் பல்வேறு பின்புலங்கள் கொண்ட முஸ்லிம்களை கவர்ந்ததாக குறிப்பிடப்படுகிறது. இதில் அகதிகளும் அடங்குவர்.
 
தொழில்நுட்ப தொழிலதிபர் ஒருவர், மற்றும் 1980களில் சோவியத் ஊடுருவலின் போது தப்பித்த வயதான ஆஃப்கான் நபர் ஒருவர் என பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எல்லாம் நியூசிலாந்திற்கு வந்து தங்கள் வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள்.
 
 
ஜோர்டன், எகிப்து, வங்க தேசம், பாகிஸ்தான், இந்தோனீசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஃப்கானிஸ்தான், சிரியா, குவைத் மற்றும் இந்தியா என பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்கள் என நம்பப்படுகிறது.
 
ரஹ்மானின் குடும்பம், 1972ஆம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தில் வசித்து வருகிறது.
 
"அல் நூர் போன்ற மசூதிகளின் பன்முகத்தன்மை, உள்ளூர் முஸ்லிம் சமுதாயத்தினர், எவ்வாறு "அனைவரையும் வரவேற்றனர்" என்பதை குறிக்கிறது. நியூசிலாந்து இதனை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இது ஏதோ ஒரு விபத்தல்ல. நாங்களும், எங்களுக்கு முன்னிருந்த தலைமுறையினரும் இந்த சூழலை உருவாக்கியுள்ளோம்" என்கிறார் ரஹ்மான்.
ஹேக்லி பூங்காவில் இரண்டு பேர் ஒரு மரத்தின் கீழ், பூக்களை வைத்து இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
 
53 வயதாகும் இலியனோர் மோர்கன், ஹேக்லி பூங்காவில் இப்படி ஒரு அனுபவத்தை கண்டதில்லை என்கிறார். க்ரைஸ்ட்சர்ச்சின் உயிர் இந்த ஹேக்லி பூங்கா.
 
"இது அவர்களின் சொர்கமாகவும், பாதுகாப்பான இடமாகவும் இருந்திருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 
துப்பாக்கிச்சூடு நடந்த 15 நிமிடங்களுக்கு முன், பூங்காவில் இருந்த இந்தியாவை சேர்ந்த ஜவஹர் செல்வராஜ், அச்சம்பவத்திற்கு பிறகு பயந்து போயிருப்பதாக கூறுகிறார். இவருக்கு வயது 25.
 
"ஒன்றும் ஆகாது என்று தெரியும், ஆனால், இங்கு குடியேறியவர்களுக்கு ஒரு சிறு அச்சம் இருக்கிறது" என்று அவர் கூறினார்.
 
பூங்காவின் மறுபுறத்தில் நூற்றுக்கணக்கானோர் மலர்கள் வைத்து இரங்கல் தெரிவித்து கொண்டிருந்தார்கள்.
 
அல் நூர் மசூதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மக்கள் ஒன்று கூடுவார்கள் என்கிறார் நசீர்.
 
"அப்போது எங்கள் நண்பர்களை சந்திப்போம். எல்லாம் இங்கு நன்றாக இருந்தது" என்றும் அவர் கூறினார்.
 
தாக்குதல் சத்தம் கேட்டதையடுத்து, தெரிந்தவர்களுக்கு பரபரப்போடு போன் செய்துள்ளார் நசீர். ஆனால், யாரும் அழைப்பை ஏற்கவில்லை.
 
குறைந்தது அவரது இரு நண்பர்கள் இதில் உயிரிழந்திருக்கிறார்கள். "நாங்கள் மிகவும் மனவலியில் இருக்கிறோம்" என்கிறார் அவர்.