புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (13:35 IST)

கொரோனா அலைகளை கட்டுப்படுத்துவதில் மோதி அரசு தோல்வி: ராகுல் காந்தி

கொரோனா தொற்றின் முதல் இரண்டு அலைகளை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் தடுப்பூசி திட்டங்கள், அவை செயல்படுத்தும் விதத்தை கடுமையாக சாடினார். அதன் விவரம்:

இந்திய அரசு தனது முதல் தடுப்பூசி ஆர்டர்களை ஜனவரி 11, 2021 வரை வழங்கியது. பின்னர் இரண்டு உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து 1.65 கோடி அளவு டோஸ்களை மட்டுமே ஆர்டர் செய்தது. உற்பத்தி திறனை விரிவாக்குவதற்கு இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு போதுமான ஆதரவை முன்பே வழங்க அரசு தவறியது.

மேலும் பிற இந்திய நிறுவனங்களுக்கு கோவாக்சின் (ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் இணைந்து உருவாக்கியது) உரிமம் வழங்குவதை தாமதப்படுத்தியது. போதுமான, மலிவு விலையுள்ள தடுப்பூசி பொருட்களை வாங்குவதற்கான தனது பொறுப்பை மத்திய அரசு கைவிட்டது, மேலும் பல்வேறு சுமைகள் இருக்கும் என தெரிந்தும் அந்தப் பணியை மாநிலங்கள் மீது மத்திய அரசு திணித்தது.

18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னர் கோவின் செயலியில் கட்டாய பதிவு செய்ய வேண்டும் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வலியுறுத்தியது, இது டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற, நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களுக்கு சாதகமாக இருந்தது மற்றும் பெரும்பான்மையினரை கவனத்தில் கொள்ளாமல் அறிமுகப்படுத்தப்பட்டது.

திடீரென கோவிஷீல்டிற்கான தடுப்பூசி இரண்டு டோஸ் போடும் அளவு கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக மத்திய அரசு தன்னிச்சையாக அதிகரித்தது.

இறுதியாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பெரியர்களுக்கும் தடுப்பூசி போடும் இலக்கை நிர்ணயித்துள்ளதாக அரசு அறிவித்தது.

ஆனால், மோதி அரசு என்ன செய்திருக்க வேண்டும். கொரோனா முதல் அலையை இந்தியா எதிர்கொண்டவுடனேயே தடுப்பூசிகளுக்கு உலகளவில் ஆர்டர்கள் செய்திருக்க வேண்டும். உற்பத்தித்திறனை வேகப்படுத்தி பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு உற்பத்திக்கான வசதிகளை மேம்படுத்தி முன்கூட்டியே மானியங்களை வழங்கியிருக்க வேண்டும். அதன் மூலமும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு கட்டாய உரிமம் வழங்குவதன் மூலமும் உற்பத்தி திறனை அதிகரித்திருக்க வேண்டும்.

சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் முன்பு, நமது மக்களுக்கு தடுப்பூசிகள், மூலப்பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கான வசதியை பெருக்க ராஜீய அளவிலான முயற்சிகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசிகளை மொத்தமாக தமது தொகுப்பில் வாங்கி, அவற்றை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஒதுக்கி, மாநிலங்களுக்கு அவற்றை பயன்படுத்தும் கட்டுப்பாட்டை வழங்கியிருக்க வேண்டும்.

மத்திய அரசு தனது கொள்கை தோல்விகளின் முக்கிய தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. உள்நாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை ஏற்க வேண்டும் என்ற 17 ஆண்டுகால பாரம்பரியத்திலிருந்து இந்தியா விலகியிருக்கிறது. பின்னர் தனக்கு கிடைத்த வெளிநாட்டு உதவி விநியோகத்தை தாமதப்படுத்தியது, மேலும் பாதிப்பை சமாளிக்க தனக்கு வந்த நன்கொடைகள் குறித்த விவரங்களை இன்னும் அரசு வெளிப்படுத்தவில்லை.

இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பின் சரிவு மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறை, கோவிட்-19 காரணமாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் சாதனங்களுக்கான சட்டவிரோத சந்தையின் வளர்ச்சி போன்றவை, தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய முன்கள பணியாளர்களின் இறப்பை தவிர்க்க முடியாததாக்கி விட்டன. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளால் இந்தியா ஓரளவு காப்பாற்றப்பட்டது, பொது முடக்க காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை ஆதரவை வழங்கின.

"தன்னிச்சையான மற்றும் பகுத்தறிவற்ற" தடுப்பூசி கொள்கை உள்ளிட்ட கொள்கை தோல்விகளுக்காக மோதி அரசாங்கத்தை நீதிமன்றங்கள் கண்டித்தன.

தொற்றுநோயை தவறாக கையாண்டதன் காரணமாக நோயாளிகளின் மரணத்தை ‘இனப்படுகொலைக்கு’ சமமானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அழைத்தது என்று ராகுல் காந்தி சாடினார்.

இந்த விவகாரத்தில் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க காப்புரிமை சட்டம் 1970இன் கீழ் கட்டாய உரிம விதிகளை மேற்கொள்ளுங்கள். சான்றுகள், சமபங்கு மற்றும் குறிப்பிட்ட உள்ளூர் தேவைகளை மையமாகக் கொண்ட வெளிப்படையான, நியாயமான சூத்திரத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குங்கள், துல்லியமான தடுப்பூசி தொடர்பான தரவுகளை வெளிப்படையான முறையில் பொதுவெளியில் கிடைக்கச் செய்யுங்கள், தேசிய அளவிலான அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தல், மாநில அரசாங்கங்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சிவில் சமூகத்துடன் ஒத்துழைத்தல் போன்ற நடவடிக்கையை எடுங்கள் என்று ராகுல் காந்தி யோசனை கூறியுள்ளார்.

மருத்துவமனைகளின் நோயாளிகள் கையாளும் திறனை மேம்படுத்தி, கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா அல்லாத தொற்றாளர்களுக்கு சமமான கவனம் செலுத்தி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.