மாஃபியா - 1: சினிமா விமர்சனம்

papiksha| Last Updated: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (14:41 IST)

திரைப்படம் மாஃபியா - 1
நடிகர்கள் அருண் விஜய், பிரியா பவானிசங்கர், பிரசன்னா
ஒளிப்பதிவு கோகுல் பினோய்
இசை ஜேக்ஸ் பினோய்
இயக்கம் கார்த்திக் நரேன்
 
துருவங்கள் 16 படத்தின் மூலம் கவனத்தைக் கவர்ந்த கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' படம் இதுவரை வெளியாகாத நிலையில், 'மாஃபியா' மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. படத்தின் 'ஸ்டைலிஷான' புகைப்படங்களும் ட்ரைலரும் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.
 
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றுகிறார் நாயகன் ஆர்யா (அருண் விஜய்). அவருக்கு துணையாக சத்யாவும் (பிரியா பவானிசங்கர்) வருணும் இருக்கிறார்கள்.
 
போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் பணியில் சின்னச் சின்ன ஆட்கள் சிக்கினாலும் உச்சத்தில் இருக்கும் நபரைப் பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் போதைப் பொருள் பிரிவின் உயரதிகாரியும் சமூக ஆர்வலர் (தலைவாசல் விஜய்) ஒருவரும் கொல்லப்படுகிறார்கள்.
 
இதையடுத்து, திட்டம்போட்டு உச்சத்திலிருக்கும் நபரான திவாகரை (பிரசன்னா) நெருங்குகிறார் ஆர்யா. ஆனால், திவாகர் ஆர்யாவின் குடும்பத்தினரைக் கடத்திவிடுகிறார். குடும்பத்தினரை மீட்க முடிந்ததா, போதைப் பொருள் கும்பலின் பின்னணியில் யார் இருப்பது என்பதுதான் மீதிக் கதை.
 
போதைப் பொருள் கும்பலைப் பின்னணியாகக் கொண்ட த்ரில்லர் என்றால் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமே இருக்காது. போதைப் பொருள் கும்பல்களுக்கிடையிலான மோதல், காவல்துறையின் தேடல், கறுப்பு ஆடுகள் என இந்தக் கதைகளுக்கென்றே விறுவிறுப்பான அம்சங்கள் நிறையவே இருக்கும்.
ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஏதுமில்லை. முதல் பாதி பொறுமையை வெகுவாகவே சோதித்துவிடுகிறது. மிகச் சாதாரணமான சம்பவங்கள், சாதாரணமான காட்சிகள், எந்தத் திருப்பமும் இல்லாத திரைக்கதை என ஒரு 'கிக்'கும் இல்லாமல் நகர்கிறது படம். போதைப் பொருள் தடுப்புத் துறையாலேயே கண்டுபிடிக்க முடியாத கும்பல் தலைவனை சமூக ஆர்வலர் ஒருவர் (அவர் பெயர் முகிலன்!) just like that கண்டுபிடித்துவிடுகிறார்.
 
போதைப் பொருள் கும்பல் சாவகாசமாக வந்து, போதைப் பொருள் தடுப்பிப் பிரிவின் தலைவரை கொன்றுவிட்டுப் போகிறது. இப்படி தாங்கமுடியாத காட்சிகள் முதல் பாதியில்.
 
இரண்டாவது பாதி சற்று பரவாயில்லை. ஆனாலும், திரைக்கதையில் எந்தப் புதுமையும் கிடையாது. வழக்கம்போல, கதாநாயகன் வில்லனுடைய இடத்தில் புகுந்து போதைப் பொருள்களை அள்ளிவந்துவிட, வில்லன் கதாநாயகன் பெற்றோரைக் கடத்திவிட, பெரிய சண்டையைப் போட்டு அவர்கள் மீட்கப்படுகிறார்கள்.
 
படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கு கதையை எடுத்துச் செல்வதைப்போல ஒரு திருப்பம் வருகிறது. அது மட்டுமே ரசிக்க வைக்கிறது. ஆனால், முதல் பாகத்தை அப்போதுதான் பார்த்து முடித்திருக்கிறோம் என்பதால், பெரிதாக எந்த ஆர்வமும் ஏற்படுவதில்லை.
 
படத்தின் மற்றொரு பெரிய பிரச்சனை, ஸ்லோமோஷன் காட்சிகள். படத்தின் முக்கால்வாசிப் பகுதி இப்படி ஸ்லோமோஷனிலேயே நிகழ்வது தாங்க முடியாததாக இருக்கிறது.
 
இந்தப் படத்திற்கென ஒரு themeஐ உருவாக்கி, அதற்கேற்றபடி டைட்டில் கார்டுகளை வடிவமைத்திருப்பது அட்டகாசம். படத்தில் பாராட்ட வேண்டிய மற்றொரு அம்சம், ஒளிப்பதிவு. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை அட்டகாசம் செய்திருக்கிறார் கோகுல் பினோய். பின்னணி இசையைப் பொறுத்தவரை துவக்கத்தில் சற்று புதுமையாக இருப்பதாகத் தோன்றினாலும், சிறிது நேரத்திலேயே எந்தக் காட்சிக்கு எந்த இசைத் துணுக்கைப் பயன்படுத்துவார் என்பது பழகிவிடுகிறது.
 
எல்லாப் படங்களைப் போலவும் இந்தப் படத்திலும் அருண் விஜய் மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் நடித்த பிற நடிகர்களையும் குறை சொல்ல முடியாது. ஆனால், திரைக்கதையில் கோட்டிவிட்டிருப்பதால் சுவாரஸ்யமில்லை.

இதில் மேலும் படிக்கவும் :